எஸ் எஸ் பிலிம் ஃபேக்டரி சார்பில் சீனிவாசன் தயாரிக்க, சரண் குமார் , மிஷால் நசீர், ஜெய் குஹேனி ஆகியோர் நடிப்பில், சத்தியமூர்த்தி சரவணன் இயக்கி இருக்கும் படம் CSK .
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெயர்ச் சுருக்கமான இந்த CSK வை, அப்படியே தான் இயக்கும் சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா படத்துக்குப் பயன்படுத்தி, ஒரு பரபரப்பான விளம்பரத்தை இலவசமாக பெற்றிருக்கும் இந்த சத்தியமூர்த்தி சரவணன், அடிப்படையில் ஒரு ஓவியர் .
பிரகாஷ் ராஜ் – லலிதகுமாரி தம்பதியின் மகளுக்கு ஓவிய ஆசிரியராக போய் , அதன் மூலம் லலிதகுமாரியின் குட் புக்கில் இடம் பெற்று, அவரது சிபாரிசில் பிரகாஷ் ராஜின் இனிது இனிது படத்தில் உதவி இயக்குனராகப் போனவர் .
இனிது இனிது படத்தில் அசோசியேட் டெக்னீஷியன்களாகப் பணியாற்றிய பலரையும், இந்த CSK படத்தில் தன்னைப் போல சீஃப் டெக்னீஷியன் ஆக்கி, இந்தப் படத்தை உருவாக்கி இருக்கும் சத்தியமூர்த்தி சரவணன்,
அதன் மூலம் தன்னைப் போலவே இரண்டு சிறந்த படைப்பாளிகளை இந்தப் படத்தின் மூலம் களம் இறக்கி இருக்கிறார்
ஒருவர் இசையமைப்பாளர் சித்தார்த் மோகன் .
படத்துக்கு மிக அற்புதமான இசையைக் கொடுத்திருகிறார் இந்தத் தம்பி .
நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையே ஒரு மொழியாக பேசும் அழகை இந்தப் படத்தில் பார்க்க முடிகிறது .
இன்னொருவர் ஒளிப்பதிவாளர் ஸ்ரீ சரவணன் ஜி மனோகரன்
படத்தில் இடம் பெறும் உந்தன் முகம் என்ற ஒரு உள்ளம் உருக்கும் பாடலை திருச்செந்தூர் கடற்கரையில் ஒரு மழலைப் பிள்ளையையும் வேல் ஒன்றையும் வைத்து மனம் நெகிழும்படி எடுத்து இருக்கிறார்கள்.
அந்தப் பாடலுக்கு கவிதைப் பூர்வமான ஒளிப்பதிவு செய்து இருப்பதோடு கடல் அலைகளை அவர் காட்டி இருக்கும் விதம் , இதுவரை தமிழ்த்திரை காணாதது.
இவர்கள் இருவர் மட்டுமல்லாது தனக்கு சினிமா வழி காட்டிய லலித குமாரியை காஸ்டியூம் டிசைனராகவும் அறிமுகப்படுத்தி இருக்கிறார், இயக்குனர் .
பாடல் வெளியீட்டு விழாவில் படத்தின் பாடல்களையும் முன்னோட்டத்தையும் பார்த்தபோது இது ஒரு முக்கியமான படம் என்பது தெளிவாகப் புரிந்தது.
”வாழ்வில் எதோ ஒரு நாள் நடக்கும் ஏதோ ஒரு சம்பவம் நமது மொத்த வாழ்க்கையையும் மாற்றி விடும் . இந்தப் படத்தை பார்க்கும் போது உங்கள் வாழ்வில் அப்படி நடந்த சம்பவம் உங்களுக்கு நினைவு வரும் ‘ என்ற முன்னோட்டத்தில் வரும் வாக்கியம் அசத்தலாக இருக்கிறது .கதை ஒரு கிரைம் திரில்லர் பின்னணி இசையிலும் மிரட்டி இருக்கிறார் சித்தார்த் மோகன் .
மெய்யழகி படத்தில் கிராமத்துப் பெண்ணாக வந்த ஜெய் குஹேனி இதில் மாடர்ன் மங்கையாக வருகிறார் .
இயக்குனர் அட்லீயும் ஓவியக் கல்லூரியில் சத்தியமூர்த்தி சரவணனின் சீனியரான இயக்குனர் ரஞ்சித்தும் நிகழ்ச்சிக்கு வந்து வாழ்த்தினார்கள்.
சரியான படங்களை தேடிப் பிடித்து வெளியிடும் தி வைப்ரன்ட் மூவீஸ் வெங்கடேஷ் ராஜா இந்தப் படத்தை வாங்கி வெளியிடுகிறார் . ஒரு ரசிகனின் நிலையில் நின்று படத்தை அவ்வளவு சிலாகிக்கிறார் வெங்கடேஷ் ராஜா .
அதோடு மேடையில் பேசும்போது , நிகழ்ச்சிக்கு வந்திருந்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணுவைப் பார்த்து “நல்ல படங்களை வாங்கி வெளியிடும் எங்களுக்கு இப்போது உள்ள பெரிய பிரச்னையே தொலைக் காட்சிகள் சின்ன படங்களின் ஒளிபரப்பு உரிமையை வாங்காததுதான் . அதற்கு தயாரிப்பாளர் சங்கம் வழிவகை செய்ய வேண்டும் ” என்று கூற ,
தாணு , தனது பேச்சில் “விரைவில் அந்த பிரச்னை நல்லபடியாக தீரும் ” என்று சொன்ன தாணு, படத்துக்கு CSK என்ற அடையாளத்தை வைத்து இருப்பதை தன் பங்குக்கு பாராட்டி விட்டு “இதுவே உங்களுக்கு பெரிய விளம்பரமாக இருக்கும். இதில் ஏதாவது எதிர்ப்பு வந்தால் அது கூட விளம்பரமாக ஆகும் ” என்று உற்சாகமாக வாழ்த்தினார்.