நடிகர் ஒய் ஜீ மகேந்திரன் எழுதி தினமலர் வாரமலர் இதழில் வந்த நான் சுவாசிக்கும் சிவாஜி கட்டுரைத் தொடர், காந்தி கண்ணதாசனின் கண்ணதாசன் பதிப்பகம் சார்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது . இதற்கான அறிமுக விழா சென்னை புத்தகக் கண் காட்சியில் நடைபெற்றது .
நிகழ்ச்சியில் காந்தி கண்ணதாசன் , மூத்த நாடக நடிகர் ஏ ஆர் எஸ், நடிகை லட்சுமி, இயக்குனர் – நடிகர் சந்தான பாரதி, தயாரிப்பாளர் தாணு , சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள் .
“பராசக்தி படம் வெளியான அன்று முதல் நாள் முதல் ஷோ பார்த்தவர்களில் நானும் ஒருவன் ” என்று ஆரம்பித்த ஏ ஆர் எஸ், தொடர்ந்து சிவாஜியுடனான் தனது அனுபவங்களையும் சிவாஜியின் சிறப்புகளையும் பகிர்ந்து கொண்டார் .
கட்டபொம்மன் படத்தில் தானாதிபதி பிள்ளையாக நடித்த எம் ஆர் சந்தானத்தின் மகனான சந்தான பாரதி சிவாஜியின் வீட்டில் தானும் ஒரு பிள்ளையாக வளர்ந்த கதையை சொன்னார் .
சிவாஜியின் உயிர் இன்னும் சில நொடிகளுக்கு மேல் இருக்காது என்று கூறப்பட்ட நிலையில், அதற்கு மேல் அங்கு நிற்கமுடியாமல் ராம் குமார் விலக, “அவரது முகத்தில் இருந்து ஆக்சிஜன் மாஸ்க் கழட்டப்பட்ட போது அந்த இமயத்தின் முன்னால் நின்றது நான்தான் ” என்று கூறி அரங்கை சோகத்தில் மூழ்கச் செய்தார் தாணு . அதோடு “சிவாஜி அதுவரை வாங்காத சம்பளத்தை நான் தயாரித்த மன்னவரு சின்னவரு படத்தில் அவருக்கு கொடுத்தேன் . அதை விட அதிக சம்பளத்தை ரஜினி படையப்பா படத்தில் கொடுத்தார் “என்றார்
ஆரம்பகாலம் தொட்டு சிவாஜி நடித்த கடைசி படமான படையப்பா வரை அவரோடு பழகிய சம்பவங்களை கூறி வந்த லட்சுமி “படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணனும் ரஜினியும் ஆடும் போட்டி பாடல் காட்சி ஷூட்டிங் போயிட்டு இருந்தது . சிவாஜி முன்னாடி நின்னு நடிக்க ரஜினி பயப்படுறாரு . ஏன் ரஜினின்னு கேட்டேன் . இல்ல அவரு கம்பீரமா சிங்கம் மாதிரி நடிச்சுக்கிட்டு இருக்காரு. அவரு முன்னாடி நாம எப்படி கம்பீரமா நடிக்கிறது .
அதும் இந்த பாட்டுல ஸ்வர வரிசை எல்லாம் வருது . என்னதான் என் பேரு சிவாஜி ராவ் னு இருந்தாலும் (ரஜினியின் சொந்தப் பெயர் அதுதான்) நடிப்பு விசயத்தில் சிவாஜி முன்னாடி நான் எல்லாம் ராவாதானே (RAW — பன்படுத்தப்படாத பொருள் ) இருக்கேன்னு சொன்னாரு . அப்புறம் தைரியம் கொடுத்து நடிக்க வச்சோம் ” என்றார்.
நூலாசிரியர் ஒய் ஜீ மகேந்திரன் தான் சிவாஜியின் நடிப்பில் மயங்கி அவருடன் பழகி அவரது படங்களில் நடித்து அவரது மூத்த மகனாக இன்று சிவாஜியின் குடும்பமே கொண்டாடும் அளவுக்கு இருப்பதைப் பற்றி பேசிக் கொண்டு வந்தவர்
” சிகரெட்டை அழகாக பிடிப்பது முதற்கொண்டு எல்லா விதத்திலும் ஸ்டைல் என்றால் அது சிவாஜிதான் . எல்லா படங்களிலும் ஸ்டைல் என்ற பெயரில் ஒரே ஸ்டைலை செய்வது அல்ல. நடிக்கும் கேரக்டருக்கு ஏற்ப வெவ்வேறு ஸ்டைல்களை செய்ய வேண்டும் . சிவாஜி அப்படிதான் செய்வார். “என்றவர் …
ஒரு நிலையில் நெகிழ்ந்து ” ஆஞ்சநேயனுக்கு ராமன் போல என் மார்பை திறந்து பார்த்தால் அங்கு சிவாஜிதான் இருப்பார் ” என்றார் .
நெகிழ்ச்சி !