ஜாக்கி சானும் , ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித்தும் இணைந்து நடித்த ‘The Karate Kid ‘ என்ற ஹாலிவுட் படம் 2010 ஆம் ஆண்டு வெளியாகி உலகமெங்கும் சக்கைப் போடு போட்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
ஆனால் தமிழில் ஒரு ‘The Karate Kid ‘ படம்…. இன்னும் சொல்லப் போனால், அதை விடவும் சிறப்பானதாக பலராலும் சிலாகிக்கப்படும் ஒரு படம் உருவாகிக் கொண்டு இருப்பதுதான், ‘அடடே! ஆஹா!!’ சேதி .
நம்ம ஊர் பிரபல ஸ்டன்ட் மாஸ்டர், ஸ்டன் சிவாவின் மகன் கெவின் நடிக்கும் கராத்தேகாரன் படம்தான் அது .
மாஸ்டரின் மனைவி லேனி ஹாவ் (Lany Hau ) தனது செவன் ஸ்டார் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிக்க, கெவின் மற்றும் அவரது தம்பி ஸ்டீவன் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தை இயக்குபவர் வேறு யாருமல்ல .. மாஸ்டர் ஸ்டன் சிவாவே தான் .
இதுவரை ‘The Karate Kid ‘ என்ற பெயரில் ஆறு படங்கள் வந்துள்ளன. இதில் ஆறாவது படம்தான் ஜாக்கி சானும் , ஜேடன் ஸ்மித்தும் நடித்தது . இந்த ஆறு படங்களிலும் சிறுவர்களுக்கு கராத்தே கற்றுத் தரும் மாஸ்டர் வேடத்தில் ஆண்களே நடித்துள்ளனர்.
ஆனால் தமிழில் வரும் கராத்தேகாரன் படத்தில் அதிலும் ஒரு புதுமை! கராத்தே மாஸ்டர் கதாபாத்திரத்தில் ஒரு பெண்!! அந்தப் பெண் வேறு யாருமல்ல. படத்தின் தயாரிப்பாளரும் கராத்தேகாரனாக நடிக்கும் கெவினின் அம்மாவான லேனி ஹாவ்தான் .
வியட்நாமை சேர்ந்த லேனிஹாவ் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியவர் .
கிரிக்கெட் , கால் பந்து போல கராத்தே ஆர்வம் கொண்ட ஒரு ஏழை மாணவன் அதை நன்றாகக் கற்று, போட்டிகளில் வென்று சாம்பியன் ஆக ஆசைப்படுகிறான் . ஆனால் அவன் ஏழை என்பதால் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அந்த நேரத்தில் அவனுக்கு ஒரு பெண் கராத்தே குருவின் உதவி கிடைக்கிறது. அவரது உதவியால் அந்த ஏழை மாணவன் கராத்தே கற்று வென்று சாம்பியன் ஆவதுதான் படத்தின் கதை.
படத்துக்கு பாடல்கள் மட்டுமல்லாது வசனத்திலும் பங்களிப்பு செய்திருக்கிறார் கவிஞர் மதன் கார்க்கி . படத்தில் தமிழ் , ஆங்கிலம் , வியட்நாம் என்று மூன்று மொழிகள் வருகிறதாம்.
படத்தின் அறிமுக விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு கலந்து கொண்டு வாழ்த்தினார் .
படம் பற்றி ஸ்டன் சிவா பேசும்போது
“சின்ன வயசிலேயே கெவினுக்கு கராத்தேவில் ஆர்வம் இருந்தது . என் மனைவியே கற்றுக் கொடுத்தார் . ஜாக்கி சான் நடித்த ‘The Karate Kid ‘ படத்தை பார்க்கும்போது , தமிழில் நம் மகனை வைத்து ஏன் இப்படி ஒரு படம் பண்ணக் கூடாது என்று தோன்றியது . மனைவியே கதை எழுதினார். படம் மிக நன்றாக வருகிறது ” என்றார் .
தாணு பேசும்போது
” ஸ்டன் சிவாவுக்குள் ஒரு டைரக்டர் இருப்பதை நான் முன்பே உணர்ந்தேன் . அவர் இந்தப் படத்தை எடுக்கப்போவது பற்றி சொன்னபோது நானே தயாரிக்கிறேன் என்றும் சொன்னேன் . ஆனால் அவரே தயாரிக்க முடிவு செய்தார். நான் இந்தப் படத்தை பற்றி முழுமையாக அறிவேன். இந்த கராத்தேகாரன் படம், ஜாக்கிசான் நடித்த ‘The Karate Kid ‘ படத்தை விட பத்து மடங்கு சிறப்பாக அமையும். எனவே இந்தப் படத்தை ரிலீஸ் செய்யும் பாக்கியத்தையாவது ஸ்டன் சிவா எனக்கு தர வேண்டும் ” என்றார் .
வாழ்த்துகள் கராத்தேக்காரா !