சர்க்கிள் பாக்ஸ் என்டர்டைன்மென்ட் சார்பில் எஸ். ராஜ் நாராயணன் தயாரிக்க, 18 ரீல்ஸ் சார்பில் எஸ் பி சவுத்ரி வெளியிட சந்தானம் , தாரா அலிஷா, எம் எஸ் பாஸ்கர், மீரா கிருஷ்ணன், மாறன் ஆகியோர் நடிப்பில் கே .ஜான்சன் எழுதி இயக்கி இருக்கும் படம் .
தனக்கு வரப் போகிற கணவன் பிராமணன் ஆகவும் தைரியமானவனாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிற பிராமணப் பெண்ணான திவ்யாவிடம் ( தாரா அலிஷா) காதலை சொல்லும் ஒரு பிராமண இளைஞர் தைரியம் இல்லாதவராக இருக்கிறார் .

இந்த நிலையில் புரட்டாசி மாச விரதத்தில் நெற்றியில் நாமத்தோடு இருக்கும், பிராமணர் அல்லாத — வீரமான இளைஞரான- சரவணனை (சந்தானம்) பிராமணர் என்று நம்பி காதலிக்க ஆரம்பிக்கிறாள் திவ்யா.
உண்மை தெரிந்து திவ்யா கொஞ்சம் குழம்பினாலும் ஒரு நிலையில் மீண்டும் காதலை உறுதி செய்கிறாள்
திவ்யாவின் அப்பா அனந்தராமன் (கார்கேயர்) மிக நேர்மையான அதிகாரி மற்றும் நல்லவர் என்று புகழ் பெற்ற மனிதர் .
ஒரு நிலையில் சரவணன் தன் பெற்றோருடன் ( எம் எஸ் பாஸ்கர்– மீரா கிருஷ்ணன்) பெண் கேட்டுப் போக , சாதி வித்தியாசம் காரணமாக மறுத்து விடுகிறார் திவ்யாவின் அப்பா .

சரவணன் கல்யாணத்துக்கு திவ்யாவிடம் மீண்டும் பேச, ‘என் அப்பா எவ்வளவு சிறந்த மனிதர் !. அவருக்கு எவ்வளவு நல்ல பெயர் ! அவர் வாக்கை எப்படி மீறுவேன்? . என் அப்பா ஒரு விசயத்திலாவது கெட்டவர் என்று நீ நிரூபித்தால் என் அப்பாவை தூக்கிப் போட்டு விட்டு வருகிறேன்” என்கிறாள் திவ்யா
இந்த நிலையில் சரவணனே எதிர்பாராமல் ஒரு விபரீதம் நிகழ, என்ன விபரீதம் ? அப்புறம் என்ன ஆச்சு ? சரவணன் காதல் என்ன ஆச்சு என்பதே இந்த A1.
இப்படி ஒரு கதையை எடுத்துக் கொண்டு காமெடியில் அதகளம் செய்து இருக்கிறார்கள் இயக்குனர் ஜான்சனும் சந்தானமும் .
இவர்கள் மட்டுமல்ல சரவணின் நண்பர்களாக வரும் மாறன், தங்கதுரை , கிங்க்ஸ்லி , திடீர் வில்லனாக வரும் நான் கடவுள் ராஜேந்திரன் , கல்கி ஆகியோரும் அடுத்தடுத்து சிரிப்பு சிக்சர் அடிக்கிறார்கள் .

முடிந்தவரை காமெடியை தெறிக்க விடுகிறார்கள் அனைவரும் !
அதிலும் குறிப்பாக சரவணனின் நண்பன் தன் மனைவியோடு பைக்கில் போகும் ஒரு காட்சி காமெடி பூகம்பம் ! இரட்டை அர்த்த வசனம் இல்லை…. அடுத்தவரை அவமானப் படுத்தும் அநாகரீகம் இல்லை… தமிழ் வார்த்தைகளை ஆபாசம் இல்லாத இரட்டை அர்த்தத்தில் பயன்படுத்தி அந்த காட்சியில் வரும் காமெடிகள் செம செம !
அந்த காட்சியில் டியூன் ஆகி விடும் ரசிகர்கள் அப்புறம் படம் முழுக்க சிரித்துக் கொண்டே இருக்க முடிகிறது . இந்தப் படத்துக்கான கிக் ஸ்டார்ட்டர் காட்சி அது .
இடையில் சுணங்கிக் கிடந்த சந்தானத்துக்கு இந்தப் படம் பம்பர் பரிசு !
சந்தோஷ் நாராயணன் இசையில் மல்லிப் பூ பாடல் இனிமையாய் மணக்கிறது .
பார்க்காத ஒரு சம்பவத்தை தானே பார்த்தது போல இட்டுக்கட்டி சொல்லும் ஒரு பிராமண கதாபாத்திரம் , இந்த மண்ணில் புராணப் போலிகள் எப்படி உருவாயின என்பதை பூடகமாக விளக்குகிறது .
பிராமணர்களை மட்டும் குறிவைத்து கலாய்க்கவில்லை . பிராமணர் அல்லாத நபர்களையும் கிண்டல் அடிக்கிறார் இயக்குனர் ஜான்சன் . நோக்கம் நகைச்சுவை மட்டுமே என்பதால் சீரியசாக எடுத்துக் கொள்ளத் தேவை இல்லை .

இது போன்ற படங்களில் வரும் சில அலட்சியமான கிளிஷேக்களை தவிர்த்து இருந்தால் , இந்தப் படம் இன்னும் தெறிக்க விட்டு இருக்கும் .
இன்னொரு குறை படத்தின் பெயர் . குடும்பத்தோடு வந்து குதூகலித்து சிரித்துவிட்டுப் போக வேண்டிய படத்துக்கு வைத்த பெயரும் அதற்கான டிசைனும் ஆபாசப் படமோ என்ற உணர்வை ஏற்படுத்துகிறது .
A1…. காமடி கொண்டாட்டம் !