அப்ஷாட் பிலிம்ஸ் சார்பில் மதுசூதனன் தயாரிக்க, ஸ்கைலைட் கிரியேஷன்ஸ் சுதிர் ஜெயினின் இணை தயாரிப்பில், பத்ரியின் பி ஆண்டு சி புரடக்ஷன்ஸ் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்க, பத்ரி மற்றும் செந்தில் குமரன் இருவரின் கதை- திரைக்கதையில் நடிகர் சிவா வசனம் எழுத, சூது கவ்வும் கருணாகரன் ஹீரோவாகவும் விஜயலட்சுமி ஹீரோயினாகவும் நடிக்க , பத்ரி இயக்கி இருக்கும் படம் ஆடாம ஜெயிச்சோமடா!
ஆடி ஜெயிக்கிறதா இந்தப் படம் ? பார்க்கலாம்.
“கடமை உணர்ச்சியோடு உன் வேலையை செஞ்சா மாதச் சம்பளம் மட்டும் கிடைக்கும் . அதே நேரம் கண்டுக்ம (அதாவது கடமையாடாமல்) இருந்தா காரு பங்களா எல்லாம் கிடைக்கும்” என்று, காக்கிச் சட்டை அதிகாரிகளை அரசியல்வாதிகள் ஆசை காட்டும் வசனங்களை, பல படங்களில் பார்த்திருக்கிறோம் அல்லவா ?
அதே போல “ஒழுங்கா ஆடினா கொஞ்ச பணம்தான் கிடைக்கும் . ஆனா சரியா ஆடாம சொதப்பினா அதை விட பலப்பல மடங்கு பணம் கிடைக்கும்” என்று கிரிக்கெட்காரர்களைப் பார்த்து சில சூதாட்டக்காரர்கள் சொல்லும் சூழல் ஒருநிலையில் உருவானது .
கோழிச் சண்டை முதல் குத்துச் சண்டை வரை யார் ஜெயிப்பார் என்று எல்லா விளையாட்டுகளின் அடிப்படையிலும் பந்தயம் கட்டுவது மனுஷப் பய புள்ளையின் பழக்கம். ஈரான் ஈராக் போரில் எந்த நாடு ஜெயிக்கும் என்று மும்பையில் பந்தயம் கட்டப்பட்டதாக, ஒரு பழைய பத்திரிகை செய்தியே உண்டு .
அப்படி இருக்க, உலகின் பல நாடுகளில் உச்சா கூட போகாமல் பலர் உட்கார்ந்து பார்க்கும் கிரிக்கெட் மட்டும் இந்த பழக்கத்தில் இருந்து தப்புமா?
ஆரம்பத்தில் இந்தப் பந்தயம் கட்டும் பழக்கத்தை சிலர் தங்கள் ஏற்பாடு மட்டும் கட்டுப்பாட்டில் நடத்தினர்.
”cricket is a game of static and dynamic, somnolent an sensational” என்று ஒரு கட்டுரையில் frank woolley எழுதி இருப்பதை போல, எப்போது வேண்டுமானலும் என்ன வேண்டுமானலும் நடக்கலாம், என்ற குணாதிசயம் உடைய கிரிக்கெட்டில் கட்டப்படும் பந்தயத்தில், பலர் தோற்று சிலர் மட்டும் ஜெயிக்க, வென்றவர்களை விட இந்த சூதாட்ட நடத்துனர்களுக்கே பெரும் பெரும்பணம் குவிந்தது.
ஒரு நிலையில் ஆட்டத்தின் முடிவை இந்த சூதாட்ட ஏற்பாட்டாளர்களே தீர்மானித்தனர் . அதற்கேற்ப கிரிக்கெட் வீரர்களை காசு, பொன், பெண் , மிரட்டல் என்று சகல அஸ்திரங்களாலும் வளைத்து, மோசமாக ஆட வைத்து வெற்றி தோல்வியை இவர்களே உருவாக்கினார்கள்.
அதிலும் கூட எந்த நாடு ஜெயிக்கும் என்ற மொக்கை பந்தயங்களில் நிறைய பேருக்கு பணம் தர வேண்டி இருந்ததால் அதிலும் மாற்றம் செய்தனர்.
எந்த சூப்பட் பேட்ஸ் மேன் எந்த ஓவரில் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுப்பார் . எந்த சிறப்பான பவுலர் எந்த இக்கட்டான நேரத்தில் எவ்வளவு கேவலமாக பந்து வீசி இருபது முப்பது என்று ரன்கள் கொடுத்து எதிர் அணியை ஜெயிக்க வைப்பார் .என்ற அடிப்படையில் பந்தயங்களை உருவாக்கினர் .
‘அது அகஸ்மாத்தாக நடப்பது இல்லை . காசு வாங்கிக் கொண்டுதான் நடக்கிறது’ என்பது உறுதி செய்ய , குறிப்பிட்ட சமயத்தில் அந்த பேட்ஸ்மேனோ அல்லது பவுலரோ என்ன மாதிரியான சிக்னல்கள் செய்வார்கள் (மூக்கை சொறிவது, மூன்று முறை கைகளை மேலும் கீழும் ஆட்டுவது… இவை போல ) என்பதையும் சூதாட்டத்தின் ஒரு பகுதியாக முடிவு செய்வார்கள்.
சரியான தகவல் பெற்றோ அல்லது குருட்டாம்போக்காக பணம் கட்டி அதிர்ஷ்டம் காரணமாகவோ ஒரு சிலர் கொஞ்ச லாபம் சம்பாதிக்க, பலரும் பெரும்பணம் இழக்க , இந்த சூதாட்ட அமைப்பாளர்களும் பணம் கட்ட வைக்கும் புக்கிகளும் கோடி கோடியாக சம்பாதிப்பார்கள் .
இதன் பின்னணியில் கொலை, கொள்ளை , வன் கொடுமை . உள்ளிட்ட பல சமூக விரோத — பொது அமைதிக்கு பங்கம் விளைக்கும் செயல்களும் நடப்பது உண்டு.
இவ்வளவு விசயங்களையும் பாமர மக்களுக்கும் புரியும் வகையில் எளிமையாக, புன்னகை மற்றும் வெடிச்சிரிப்பு நகைச்சுவையாக, யதார்த்தமான செண்டிமெட் மற்றும் சுவாரஸ்யமான திரைக்கதை திருப்பங்களுடன் ரசிக்கும்படி சொல்லி வந்திருக்கும் படம்தான் ஆடாம ஜெயிச்சோமடா.
தவிக்க முடியாத காரணங்களால் இந்த விமர்சனம் கொஞ்சம் அதிக நீளமாகத்தான் இருக்கும் (“ம்க்கும் .. இல்லேன்னா மட்டும் நீ சின்னதா எழுதறியாக்கும்” என்று நீங்கள் முனகுவது காதில் விழுகிறது )
எனவே கொஞ்சம் கதையையும் பேசிவிட்டு விமர்சனத்துக்குள் போகலாம் (படத்துல் வேறு ஏகப்பட்ட கேரக்டர்கள் .இத்தனைக்கும் இயக்குனர் பத்ரி யாருக்கும் தானாக வாய்ப்பு கொடுப்பது இல்லையாம் . கடவுள் யார்க்கு தரவேண்டும் என்று அவரிடம் சொல்லுவார். அந்த சீனியாரிட்டிபடியே பத்ரியானந்த ஸ்வாமிகள் தருவார் )
கிரிக்கெட் சூதாட்டத்துக்கு பணம் தரும் சேட்டுவின் மனைவியையே தள்ளிக் கொண்டு (ஒரு நாள் ‘கூத்து’க்கு மட்டும்) போகும் கிரிக்கெட் புக்கி தயாளன் (பாலாஜி வேணுகோபால் ), பன்னீர் என்ற கால் டாக்சி டிரைவரின் (நாயகன் கருணாகரன் ) டாக்சியில் பயணம் செய்கிறார் . . ஒரு சிறு மோதலுக்கு பிறகு அவர்களுக்குள் நட்பு ஏற்படுகிறது. பன்னீரின் காதல் கல்யாண வாழ்க்கையில் ஒரு ‘லா லா .. லா லா… லா லாலல்லா….. சோகம் இருக்கிறது.
பிறந்தது முதல் common பாத்ரூம் உள்ள வாடகை வீட்டில் இருந்தே நொந்து போன வாழ்க்கை நடத்துகிற — இட்லிக்கடை நடத்தும் இளம் பெண்ணான- ரமாவை (விஜயலட்சுமி) பன்னீர் காதலிக்க, பன்னீரின் வீட்டில் தனி பாத் ரூம் இருக்கிற ஒரர்ர்ர்ர்ரே காரணத்துக்காக அந்தக் காதலை ஏற்று கல்யாணம் பண்ணிக் கொள்கிறாள் ரமா .
முதல் இரவுக் களைப்பைப் போக்க அசந்து தூங்கக் கூட முடியாத அளவுக்கு பலரும் வந்து, பின் நடு இரவில் (?) இருந்தே கதவைத் தட்ட , கதவைத் திறந்தால் பன்னீருக்கு கடன் கொடுத்த பலரும் நின்று கொண்டு, மொத்தப் பணமான பத்தரை லட்சத்தையும் கொடுத்து விட்டு, இரண்டாவது பகலுக்கு போகச் சொல்லி களேபரம் செய்கின்றனர்.
மனம் உடைந்து போய் கணவனைப் பிரிந்து, காமன் பாத்ரூம் உள்ள அம்மா (குடியிருக்கும் வாடகை ) வீட்டுக்கே வந்து இட்லிக் கடை வேலையை தொடர்கிறாள் ரமா .
விசயம் அறிந்த தயாளன் பன்னீரிடம் “இரண்டு நாளில் உனக்கு பத்தரை லட்சத்தை நானே தரேன். அதுவரை எனக்கு கார் ஒட்டு ” என்கிறான். சந்தோஷமாக சம்மதிக்கும் பன்னீர் மறுநாள் தயாளன் தங்கி இருந்த ஹோட்டலுக்கு போக, தயாளன் அவனது அறையில் கத்திக் குத்து வாங்கி செத்துக் கிடக்கிறான்.
கிரிக்கெட் சூதாட்டம் பற்றி ஆரம்பம் முதலே விசாரணை நடத்தி வரும் போலீஸ் கமிஷனர் சத்திய மூர்த்தி ( கே எஸ் ரவிகுமார்) , ஆர்வக் கோளாறு இன்ஸ்பெக்டர் பூமிநாதன் (பாபி சிம்ஹா ) அரை வேக்காடு ஹெட் கான்ஸ்டபிள் மரியதாஸ் (படத்தின் அசோசியேட் இயக்குனருமான சேத்தன்) மூவரும், கருணாகரனை கைது செய்து தயாளன் கொலை பற்றி விசாரிகின்றனர். ,
அடுத்த இரண்டாவது நாளில் நடக்க இருக்கும் சூதாட்டத்தில் தனது அணிக்காக ஆடாமல், பெரும் பணம் சம்பாதித்து ஜெயிக்கப் போகிற கிரிக்கெட் ஆட்டக்காரன் யார் ? என்ன சூதாட்டம் ? என்று கேள்விகளால் துளைக்கின்றனர். . தனக்கு ஒன்றும் தெரியாது என்று பன்னீர் சொல்வது அவர்களிடம் எடுபடவில்லை.
ஆளவந்தார் என்ற தாதா பணக்காரரிடம் ( ராதா ரவி ) கடன் வாங்கி……ஒரு முறை கூட குளோசப்பில் முகம் பார்க்க முடியாத தனது தம்பியை வைத்து… சூறாவளி என்ற மொக்கை படத்தை எடுத்து விட்டு, படத்தை விற்கவும் முடியாமல் கடனைத் தரவும் முடியாமல் தவிக்கும் ஒருவரும் (ஆடுகளம் நரேன் ) இந்த சூதாட்ட விவகாரத்தில் உண்மையான சூது திட்டத்தை தெரிந்து கொண்டு, பணம் கட்டி கடனை அடைத்து மீளப் போராடுகிறார்.
சூதாட்ட சிக்னல் என்ன ? சூதாட்டம் நடந்ததா இல்லையா? உண்மைக் குற்றவாளிகள் பிடிபட்டார்களா? பன்னீர் நிரபராதி என்று நிரூபணமாகி தப்பினானா? மனைவியோடு ஒன்று சேர்ந்தானா? இதில் நடந்த நகைச்சுவைக் குழப்பங்கள் என்ன என்பதே இந்தப் படம்
———இடைவேளை———-
கிரிக்கெட் சூதாட்டம் என்ற மேல் தட்டு விஷயத்தை அடித்தட்டு மக்களான கதாபாத்திரங்களுடன் இணைத்து நகைச்சுவையாகவும் சொன்னது இந்தப் படத்தின் படைப்பாளிகளின் புத்திசாலித்தனம்.
படத்தின் யானை பலம் …ம்ஹும் ! காட்டு யானை பலமாக இருப்பவை, செந்தில் குமரனும் பத்ரியும் இணைந்து அமைத்திருக்கும் பரபரப்பான ரசிப்பான திருப்பங்களுடன் கூடிய திரைக்கதையும், நடிகர் சிவாவின் கிண்டலும் கேலியுமான நையாண்டி பிளஸ் இன்டலக்சுவலான வசனங்களும்தான்.
“மகாராஷ்டிரா போலீஸ்னு சொல்றீங்க ஆனா தமிழ் சகஜமா பேசறீங்களே/” என்று இன்ஸ்பெக்டர் கேட்க , உடனே ஏட்டு “அது ஒண்ணும் பெரிய விஷயமில்ல சார் . கமல் சாரோட விஸ்வரூபம் படத்துல ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளே தமிழ்ல பேசினாங்க ” என்று சொல்வது உட்பட , பல இடங்களில் சகட்டுமேனிக்கு சதிராடுகிறது வசனம்.
ஒரு நகைச்சுவை மைண்டுக்கு போய் சிரித்துக் கொண்டி இருக்கும் அதே சமயம் அடுத்த காமெடி காதுக்குள் விழும் அளவுக்கு சிரிப்புச் சங்கிலி !
படத்தின் ஆரமபத்தில் தயாளனோடு படுக்கையில் இருக்கும் பெண்ணைக் கூட, படத்தின் சரியான சமயத்தில் மீண்டும் கொண்டு வந்து ஒரு ஷாட்டில் படத்தில் இணைத்து, சபாஷ் போட வைக்கிறார்கள் .
பன்னீர் மீது புகார் கொடுத்த தயாளன் அவனோடு சமாதானமாக போக , ஆனால் அவன் கொடுத்த புகார் ஸ்டேஷனில் உயிர் பெறுவது அபாரம்.
வெகு ஜன ஏழை எளிய பெண்களின் பிரச்னையான காமன் பாத்ரூம் பிரச்னையை படத்தில் நெகிழ்ச்சியாக கொண்டு வந்திருப்பது பத்ரியின் பி அண்ட் சி புரடக்ஷன் என்ற நிறுவனப் பெயருக்கு அட்டகாசமான பொருத்தம்.
கிரிக்கெட் சூதாட்டம் என்றால் என்ன என்பதை, பசங்க கிரிக்கெட் ஆடும் காட்சியில் புகுந்து குழப்பம் செய்வதன் மூலம் காட்டுவது அழகு என்றால், ஒரு வேளை ஏற்பாடு செய்யப்பட்டவன் சொதப்பினால்…. அடுத்து என்ன என்ன செய்து நினைதததை நிறைவேற்றுவது என்று திட்டமிட்டு, அம்பயரையும் கரெக்ட் செய்து வைத்திருப்பதை, அந்த காட்சியின் முடிவில் பூடகமாக சொல்வது திரைக்கதையின் உச்சம்.
பொதுவாக சினிமாவில் ஆக்ஷன் ஹீரோக்கள் தாவிப் பறந்து குதித்து, பைக்கில் போகிறவனுக்கு ஆக்சிடன்ட் செய்வார்கள். சிக்குபவனை அடித்து எலக்ட்ரிசிட்டி பாக்ஸில் வீசி நெருப்பொறி பறக்க வைப்பார்கள் . நாயகன் பட ஸ்டைலில், தண்ணீர் பைப்பில் அடித்து உடைத்து தண்ணீர் பீய்ச்சி அடிக்க வைப்பார்கள் . அதையெல்லாம் அப்படியே செய்து, விட்டு மாத்தி யோசி பாணியில் அதை வைத்து செய்து இருக்கும் காமெடி, அதகளம்.
கிரிக்கெட் புரோக்கர் தயாளனின் வாழ்க்கை ரகசியம் அடங்கிய டைரி ஒன்றைக் காட்டி, அதை பிளாஷ்பேக்காக காட்சிப்படுத்தி, அவனது அப்பா கல்யாண புரோக்கர் , அம்மா வீட்டு புரோக்கர் , அண்ணன் மாட்டு தரகர், தம்பி ஆட்டுத் தரகர் என்று நுணுக்கி கதை சொல்வதே சிறப்பு என்றால் , கடைசியில் அது உண்மையில் தயாளனின் கதை அல்ல .. இன்னொருவரால் சினிமாவுக்கு எழுதப்பட்ட ஒரு கதை என்பது…. வயிறு கிழிய வைக்கும் வாகான காமெடி.
பாபி சிம்ஹா, கருணாகரன், ராதாரவி ,ஆடுகளம் நரேன், கே எஸ். ரவிகுமார், சேத்தன், விஜய லட்சுமி , பாலாஜி , திப்பு அனைவரும் பொருத்தமான நடிப்பை கொடுத்து இருக்கிறர்கள். பாபி சிம்ஹா, ரவிகுமார் சேத்தன் அணி செம செம !
மிகக் குறைந்த நாட்களில் படம்பிடிக்கப்பட்ட இந்தப் படத்தில், ஒரு ஷாட்டில் நடிகர்கள் இருக்கும் அதே பொசிஷனை அப்படியே பயன்படுத்தி அடுத்த ஷாட்டை துவங்குவது உள்ளிட்ட டிரான்சிஷன் மற்றும் சேஞ்ச் ஓவர் வேலைகளையும் சிறப்பாக செய்து இருப்பதோடு, அற்புதமான ஒளிப்பதிவையும் கொடுத்துள்ளார் துவாரகநாத் . சபாஷ் துவாரா!
நிறைய விசயங்களை சுருக்கி சுருக்கி சுவையாக சொன்னதில் வெங்கட்ராமனின் படத் தொகுப்பும் உணர்வுகளுக்குள் ரசிகர்களை பொருந்த வைப்பதில் சான் ரோல்டனின் பின்னணி இசையும் படத்துக்கு வலு சேர்த்திருக்கின்றன
கடைசியில் அவ்வளவு பெரிய ஹோட்டலில் ஏ சி அறையில் ஃபேன் போட்டு அமர்ந்து இருந்தபோது , அந்த மரணம் சம்பவித்தது என்பதில் ஒரு நாவல்டி இருக்கிறதே தவிர இயல்பான லாஜிக் இல்லை சூப்பர் லாஜிக் என்ற வகையில் வேண்டுமானால் ஒத்துக் கொள்ளலாம்.
ஆனால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் புழங்கும் ஒரு சூதாட்டத்தின் பெட்டிங் ரகசியத்தை, சம்மந்தப்பட்ட பெண் குடித்து விட்டு தவறாக சொன்னாள் என்று காட்சி வைப்பது எல்லாம்…. பெரிய அழுகுணி ஆட்டம்பா .
பொதுவாக கிரிக்கெட் பந்தய சூதாட்டத்தில், ஒரு குறிப்பிட்ட பவுலர், பேட்ஸ்மேன் நன்றாக் அடித்து ஆட வசதியாக பந்து போட்டு தேவையில்லாமல் அதிக ரன்கள் கொடுப்பான். நோ பால்கலாக போட்டு ரன் கொடுப்பான் . அல்லது ஒரு நல்ல பேட்ஸ்மேன் வேண்டும் என்றே அவுட் ஆவான் அல்லது ஒரு குறிப்பிட ஃபீல்டர் முக்கியமான கேட்ச்களை வேண்டும் என்றே விடுவான் என்ற ரீதியில்தான் பெட் கட்ட முடியும்.
என்னதான் ஒரு பவுலரே விரும்பினாலும் கூட….ஒரு ஓவரில் சரியாக எத்தனை ரன்கள் வரும் என்பதை…… அடித்து ஆடும் பேட்ஸ்மேனே பல சந்தர்ப்பங்களில் முடிவு செய்யமுடியாது எனும்போது…..பவுலர் எப்படி முடிவு செய்ய முடியும் ?
எனவே படத்தில் சொல்வது போல,’இந்த ஓவரில் இந்த பவுலர் சரியாக இவ்வளவு ரன்கள் தருவான்’ என்று எல்லாம் சூதாட்ட பெட் கட்ட முடியுமா என்ன? நம்ம சிற்றறிவுக்கு எட்டல பாஸ்.
இது எல்லாம் கூட பரவாயில்லை.
யதார்த்தம் மற்றும் வித்தியாசம் என்ற பெயரில்” நல்லா கேட்டுக்க பாடம்” பாட்டில் “இனிமே நேர்மை ஜெயிக்காது. நியாயத்துக்கு மரியாதை இருக்காது .நேர்வழி பலன் தராது . எல்லாரும் குறுக்கு வழியில போங்க” என்ற ரீதியில் எல்லாம் வரிகளை அழுத்தம் திருத்தமாக வைத்து அதற்கு ஒரு டியூன் போட்டு ஷூட் பண்ணி, பெரிய ஸ்கிரீனில் காட்டுவதெல்லாம் அநியாயம்.
கடுமையான கண்டனத்துக்கு உரியது. இதை எல்லாம் எதிர்த்து ‘கத்தி’யாவது ஒரு போராட்டம் செய்யலாம்
மொத்தத்தில்,
ஆடாம ஜெயிச்சொமடா … நேர்மையாக நியாயமாக சிரத்தையாக திரைக்கதை வசனத்தில் நன்றாக ஆடியதால் ஜெயித்து இருக்கிறார்கள்…. குறுக்கு வழியில் அல்ல !
———- நிறைவு ——-
ரோலிங் டைட்டில்ஸ்
மகுடம் சூடும் கலைஞர்கள்
——————————
பத்ரி , செந்தில் குமரன் , சிவா, துவாரகநாத் , கே ஜே வெங்கட் ராமன். பாபி சிம்ஹா