ஆகம் @ விமர்சனம்

Aagam Movie Stills

ஜ்யோ ஸ்டார் என்டர்பிரைசஸ் சார்பில் எம் .கோட்டீஸ்வர ராஜூ , எம். ஹேமா ராஜு இருவரும் தயாரிக்க, 

இர்ஃபான் , ஜெயப்பிரகாஷ்,  ஜெயஸ்ரீ, ஒய்.ஜி மகேந்திரன்,  ரியாஸ்கான் ,ரஞ்சனி,  அர்ஜுன், ரவி ராஜா, தீக்ஷிதா , ஆகியோர் நடிக்க, 
 
ஜினேஷ் என்பவரின் திரைக்கதை வசனத்தில்,  
 
விஷால் சந்திரசேகரின் இசையில் டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் கருக்கொண்டு ஆராய்ச்சி செய்து எழுதி இயக்கி இருக்கும் படம் ஆகம்.

 படம் ரசிகர்களின் ரசனையோடு நட்பாக ஆகுமா ? இல்லை வேகாமல் போகுமா ? பார்க்கலாம் .
 
நடுத்தரப் பொருளாதார வர்க்கக் குடும்பம் ஒன்றின் இரண்டு பிள்ளைகளில் மூத்தவன்(ரவி ராஜா)  சராசரி அறிவுள்ள பட்டதாரி .  இளையவன் சாய் (இர்ஃபான்) அறிவும் கருத்துகளில் தெளிவும் உள்ளவன்.
 
மூத்தவனுக்கு எப்படியாவது அமெரிக்காவில் செட்டில் ஆகி டாலரில் சம்பாதித்து டாம்பீகமாக வாழ ஆசை .
ஆனால் இந்தியாவில் பிறந்து  படிப்பறிவு பெற்று வளரும் இந்திய மூளைகள்  இந்தியாவுக்கே பயன்படவேண்டும் என்பதே இளையவன் சாயின்  திட்டவட்ட எண்ணம் . 
 
எப்படியாவது அமெரிக்கா  போய்விட வேண்டும் என்று மூத்தவன் தீவிரமாக முயல்கிறான் . 
 
ஆனால் தம்பியோ ,  அமெரிக்கா உள்ளிட்ட அயல்நாட்டுக்கு போய் அந்த நாடுகளுக்கு உழைத்துக் கொட்டத் துடிக்கும் இந்திய பட்டதாரிகளை தடுத்து,  
Aagam Movie Stills
இந்தியாவிலேயே தகுதியான வேலை வாங்கித் தருவதற்கு என்றே , DQIM – Dont Quit India Movement என்ற அமைப்பை நடத்துகிறான்
 
 ( சுதந்திரப் போராட்டத்தின் போது வெள்ளையர்களுக்கு எதிராக காந்தி நடத்திய — வெள்ளையனே வெளியேறு இயக்கம் என்று நாம் தமிழில் அறிகிற இயக்கத்தின்  ஆங்கிலப் பெயர் Quit India Movement என்பதறிக !)
 
சாய்க்கும் அவனது இளவயது தோழி (ஜெயஸ்ரீ)க்கும் காதல் 
 
இந்த நிலையில் இந்திய பட்டதாரிகளை அயல்நாட்டுக்கு அனுப்பி அதன் மூலம் டாலரில் கொழிக்கும்  –  குளிக்கும் –  ஒரு பிரபல ஏஜென்ட் (ரியாஸ்கான்) நடத்தும்,
ஓர்  அயல் நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் அறிமுகம் மூத்தவனுக்கு கிடைக்கிறது.  30 லட்ச ரூபாய் கொடுத்தால் அயல்நாடு போகலாம் என்கிறார்கள்  அவர்கள் .  
 
அங்கு வேலை செய்யும் பெண் ஒருத்திக்கும் (தீக்ஷிதா ) மூத்தவனுக்கும் காதல் 
 
தம்பி DQIM – Dont Quit India Movement  நடத்தும் நிலையில் அவனுக்கு தெரியாமல் அவர்களது அம்மா  (ஸ்ரீ ரஞ்சனி),   மூத்தவனுக்கு பணத்தை ஏற்பாடு செய்கிறார் .
அப்பாவுக்கு இதில் விருப்பம் இல்லை என்றாலும் மனைவி மற்றும் மூத்த மகனின் ஆசையை தட்ட முடியவில்லை . 
 
AAG 3
அதன்படி  தம்பிக்குக் கூடத் தெரியாமல் அமெரிக்கா போகும் மூத்தவனை போலி ஆவணங்களைக் காரணம் காட்டி அமெரிக்க அரசு கைது செய்கிறது. 
 
வெளிநாட்டுக்கு போகாதே என்று நமக்கு மட்டும் உபதேசம் செய்து விட்டு அண்ணனை அமெரிக்கா அனுப்பி இருக்கிறான் என்று சாய் மேல் கோபப்படும் பட்டதாரி இளைஞர்கள்,
 DQIM – Dont Quit India Movement  அலுவலகத்தை அடித்து உதைப்பதோடு, சாயையும் அவமானப்படுத்தி விட்டுப் போகிறார்கள். இப்போது அண்ணனை மீட்க வேண்டிய பணி சாய் மீது விழுகிறது .
 
கதைப்படி இதற்கும் முன்பே,  
காட் ஃபாதர் என்ற ஒரு சமூக விஞ்ஞானி (ஜெயபிரகாஷ்),
 
 இந்தியாவை வல்லரசாக ஆக்கும் நோக்கத்தோடு இந்திய இளைஞர்களுக்கு இந்தியாவிலேயே நல்ல வேலை மற்றும் தொழில் வாய்ப்ப்பு கொடுத்தால் அவர்கள் வெளிநாடு போவதைத் தடுக்கலாம் என்று திட்டமிட்டு,
 அதற்காக ஓர் ஆராய்ச்சி செய்கிறார் . 
 
அதை செயல் வடிவத்துக்குக் கொண்டு வர முப்பது கோடி ரூபாய் தேவைப்படுகிறது . அந்தப் பணம் இல்லாததால் அவரால் அதை செயல்படுத்த முடியவில்லை .
 
Aagam Movie Stills
இதை அறிந்த மனித வளத்துறை அமைச்சர் ஆச்சார்யா (ஒய் ஜி மகேந்திரன்)  அதை நூறு கோடி ரூபாய் திட்டம் என்று சொல்லி அரசிடம் சமர்ப்பித்து தான் எழுபது கோடி ரூபாய் கமிஷன் அடிக்கப் பார்க்கிறார் . 
 
அவரது மகன் ஜூனியர் ஆச்சார்யா அந்த திட்டத்தை அயல்நாட்டுக்கு விற்று 5000 கோடி சம்பாதிக்க திட்டமிடுகிறான் .
 
அதோடு  காட்பாதர் மற்றும் அவரது அறிவார்ந்த உதவியாளன் இந்த்ரஜித் (இயக்குனர் டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் ) ஆகியோரிடம் பழகி நல்லவன் போல நடித்து அவர்களில் ஒருவனாக இணைகிறான் . 
 
ஆனால் இந்திரஜித்துக்கு ஜூனியர் ஆச்சார்யா மீது சந்தேகம் எழுகிறது . 
 
இந்த நிலையில் காட்பாதர் மற்றும்  இந்த்ரஜித் இருவரும் ‘வல்லரசு இந்தியா’  புராஜக்ட் ஆராய்ச்சிக் குறிப்புகளை ஒரு நவீன விஞ்ஞான காப்பகத்தில் வைக்கின்றனர் .
அதை திறக்கும் பாஸ்வேர்டு ரகசியம் காட் பாதர்,  இந்த்ரஜித், ஜூனியர் ஆச்சார்யா மூவருக்கு மட்டுமே தெரியும் .
ஒரு நாள் ஆச்சார்யா வீட்டுக்கு வருமான வரித்துறை ரெய்டு வர இருப்பதாகத் தகவல் வர,  காட் பாதருக்கும் இந்திரஜித்துக்கும் தெரியாமல் ஆச்சார்யாவின் கறுப்புப் பணம்  உள்ளிட்ட  விவரங்களை,
 புராஜக்ட் காப்பகத்தில் மறைத்து வைக்கிறான் ஜூனியர் ஆச்சார்யா.
 
இதற்கிடையில், 
 
AAG 1
எந்த சாவியோ பாஸ்வேர்டோ ரேகையோ விழித்திரை அடையாளமோ இன்றி,  
 
மூளை மற்றும் சிந்தனையின் சக்தி கொண்டு  பெட்டகங்களை திறக்கவும் மூடவும் செய்வது முதல் பல்வேறு வியப்பூட்டும் செயல்களை செய்ய வைக்கும்,
 brain mapping (மூளை வரைவு) என்ற தொழில் நுட்பத்தை கொண்டு வருகிறார்கள் காட் ஃபாதரும் இந்திரஜித்தும் . அது ஜூனியர் ஆச்சார்யாவுக்குத்  தெரியாது.
 
ஒரு வாகான சந்தர்ப்பத்தில் பதுக்கிய பணத்தையும் புராஜக்ட கோப்பையும் ஜூனியர் ஆச்சார்யா எடுக்கப் போகிறான் . ஆனால்  brain mapping காரணமாக அவனால் எடுக்க முடியாமல் போகிறது . 
 
எனவே கோபம் கொண்டு அவன் காட் ஃபாதரையும் இந்த்ரஜித்தையும் கொல்ல முயல அவர்கள் தப்பி விடுகிறார்கள் அவனால் பணத்தை  எடுக்கவும் முடியவில்லை . புராஜக்டை விற்கவும் முடியவில்லை . 
 
இந்த ஜூனியர் ஆச்சர்யாதான் நாயகன் சாயின் அண்ணனை தவறான வழியில் அமெரிக்காவுக்கு அனுப்பி ஜெயிலுக்குப் போகக் காரணமானவன்! 
 
இந்த புராஜக்ட் விசயத்தில் சாய்க்கு இருக்கும் சம்மந்தம் என்ன ? சாய் தன் சகோதரனை மீட்டனா ? புராஜக்ட் என்ன ஆனது ? அயல்நாட்டுக்கு  5000 கொடிக்கு விற்கப்பட்டதா?
இல்லை இந்தியாவுக்கு பயன்பட்டு இந்தியாவை வல்லரசக்கியதா ? என்பதே இந்தப் படம் . 
 
AAG 9
இந்தியாவின் அறிவாயுதத்தை அழிக்கும் அந்நிய நாடுகளின் Knowledge Terrorism மற்றும் இந்தியாவில் தகுதியான நபர்களுக்கான பஞ்சத்தை ஏற்படுத்தும் Brain Drain…..
 
 என்று இரண்டு முக்கிய விசயங்களைப் பற்றிப் பேசுகிறது ஆகம் .
 
 படத்தின் டைட்டிலே பிரம்மிக்க வைக்கிறது . 
 
இந்தியாவின் சிறப்புகள் , பலம் , மனித வளம் , தொழில் நுட்பம் ஆகியவற்றின் சிறப்புகள் பற்றிய புள்ளி விவரங்களை  அழகான வண்ணமயமான வரைகலைக் காட்சிகள் மூலம் காட்டி,
 எடுத்த எடுப்பிலேயே வாய் பிளந்து பிரம்மிக்க வைக்கிறார்கள் 
அஸ்ஸாமின் கர்பங்கா காடுகளின் அடர் செழுமையை ஒளிப்பதிவாளர் தனது கேமரா கண்களால் அள்ளிப் பருக, கோமா நிலையில் இருந்து காட்பாதர் விழத்தெழும் காட்சியும், 
 
 அதைத் தொடர்ந்து அவரை கடத்த நினைக்கும் ஆச்சார்யா ஆட்களும் காப்பாற்ற வரும் இந்திரஜித் மற்றும் குழுவும் மோதிக் கொள்ளும் சண்டைக் காட்சி  சபாஷ் போட வைக்கிறது . 
 
இந்திரஜித்தாக – நடிகராகவும் எடுத்த எடுப்பிலேயே கவர்கிறார் இயக்குனர் டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம்.
 
இந்திய அரசு வேலை வாய்ப்பு நிறுவன அலுவலக வழிகாட்டுப் பலகையில் அந்நிய தனியார் வேலைவாய்ப்பு நிறுவன விளம்பர போஸ்டர் ஒட்டி இருக்க, அதை நாயகன் கிழித்து எழும் காட்சியிலேயே கைதட்டல் வாங்கி,
AAG 6 
அந்த கேரக்டரை சிறப்பாக மனசுக்குள் இறக்குகிறார் இயக்குனர் . 
 
அமெரிக்க வேலை வாய்ப்பின் பெருமையை பற்றி ஜூனியர் ஆச்சார்யா பேச, அதே மேடையில் ‘இந்தியர்கள் இந்தியாவுக்கே வேலை செய்வதன் சிறப்பு’ பற்றி சாய் பேசும் காட்சி வெகு சிறப்பு . 
 
அமெரிக்க வேலைவாய்ப்பின் அருமை மாற்றி அண்ணன் பாட, இந்தியாவுக்கு உழைப்பதன் அவசியத்தை  விளக்கி தம்பி படும் அந்தப் பாடல் கவனம் கவர்கிறது .
 
சும்மா சொல்லக் கூடாது …
 
வல்லரசு இந்தியா புராஜக்ட் திட்டத்தை விளக்கும் வகையில் ஓர் உதாரணமாக,
 
ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்புகள் என்ன ? அங்கு பாரம்பரிய தொழில்கள் என்னென்ன ?  நவீன தொழில்கள் என்னென்ன? அங்கு எந்த மாதிரி தொழில்களுக்கும் தொழில் நுட்ப வல்லுனர்களுக்குமான தேவை இருக்கிறது? 
 
அதற்கேற்ப அங்கு எந்த மாதிரியான கல்லூரிகள் துவங்கப்பட வேண்டும் ? அதனால் ஏற்படும் வளர்ச்சியில் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான வளர்ச்சி எவ்வளவு? என்று ஒரு பட்டியல் போடுகிறார்கள் பாருங்கள் …  
 
அடடா ! அடடா ! பேசாமல் இந்த டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராமிடம் கேட்டு இதன்படியே  இந்தியா முழுக்க ஆக்கபூர்வமாக திட்டமிட்டால் இந்தியா சாமி சத்தியமாக வல்லரசாகி விடும் !
 
AAG 8
இது மட்டுமின்றி இந்திய இளைஞர்களுக்கு அயல்நாட்டு வேலை வாங்கித் தரும் நிறுவனங்கள் Plan Aயின்   படி தகுதி வாய்ந்த நபர்களை அயல்நாட்டுக்கு அனுப்பி இங்கே அறிவுப் பற்றாக்குறையை உருவாக்குவதையும் ,
 
 Plan Bயின்படிபணம் வாங்கிக் கொண்டு  தகுதியற்ற நபர்களை போலி ஆவணங்கள் மூலம் அனுப்பி அவர்களை அங்கே அவர்களை குற்றாவளிகள் என்ற நிலைக்கு ஆளாக்குவதையும்
 
 Plan Cபடி,  ஆலோசனை சொல்ல ஆளில்லாத முதல் தலை முறை பட்டதாரிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு அவர்களை அயல்நாட்டுக்கே அனுப்பாமல் ஏமாற்றுவதையும் பதறும்படி சொல்கிறார்கள் படத்தில் !
 
வெளிநாட்டுக்கு பிள்ளைகள் போய் விடுவதால் அறுபடும் உறவுச் சங்கிலிகள், சிதறும் பாசம் , எகிறும் தனிமை ….
 
கல்யாணத்துக்கும் மரணத்துக்கும் கூட வர முடியாத நிலைமை அல்லது வர விரும்பாத கொடுமை …. இவற்றை கனமாகச் சொல்லும் அதே நேரம், 
 
நிச்சயதார்த்தத்தை skype இல் செய்த நிலை போய் இன்று இறுதிச் சடங்குக்கும் skype ஐ நாடும் பித்துக்குளித்தனம் போன்ற மடமைகளை கண்ணியமாக எள்ளி நகையாடவும் செய்கிறது படம் .
 
என் ஆர் ஐக்களைப் பெற்ற பெற்றோர்களுக்கேன்றே தனியாக முதியோர் இல்லங்கள் வைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக வந்து விட்டதை சொல்லும் அந்தக் காட்சி கண்களைக் குளமாக்குகிறது . 
 
AAG 7
முதல் மதிப்பெண் வாங்கிய மாணவர்கள் மேற்கொண்டு உயர்படிப்பு படிக்க முடியாமல் கஷ்டப்பட, அவர்களை ஊரில் உள்ள ஏழை மக்கள் எல்லாம் சேர்ந்து படிக்க வைக்க, 
 படித்து முடித்ததும் அவர்கள் ஊரையும் உதவிய மக்களையும் புறக்கணித்து அயல்நாட்டுக்குப்  போய் சுய நலமாக செட்டில் ஆகிவிடும் காட்சி முன்வைக்கும் கேள்வி,  மிக அர்த்தமுள்ளது . 
 
விஷால் சந்திர சேகரின் இசையில் தொலைந்தேன் பாடல் இனிமை . முதலில் வரும் போட்டி பாடல் அருமை . பின்னணி இசையும் நைஸ் . 
 
ஒளிப்பதிவாளரின் உதவியோடு பாடல்களை சிறப்பாக எடுத்துள்ளார் இயக்குனர் 
ஒரு பெரிய மாஸ் ஹீரோ நடிக்க வேண்டிய கேரக்டரில் இர்ஃபான் தனது இடம் உணர்ந்து அடக்கமாக நடித்துள்ளார் . ஜெயஸ்ரீயும்  காதலியாக ஒகே . அண்ணனாக நடித்திருப்பவரும் அப்படியே !
தீக்’கிக்’ஷிதா ! 
 
காட் ஃபாதர் கேரக்டரில் ஜெயப்பிரகாஷ் ரொம்பவே பிரகாசம் !
 
ஜூனியர் ஆச்சார்யா கேரக்டரில் லயித்து நடித்துள்ளார் ரியாஸ்கான் . அமைச்சராக வரும் ஒய் ஜி மகேந்திரனும் அவ்வண்ணமே !
 
இந்திரஜித்தாக நடித்திருக்கும் இயக்குனரும் அமைதியாக நடித்துக் கவர்கிறார் .
டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம்
டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம்

ஓங்குதாங்காக  சண்டையும்  போடுகிறார் . 

 
அடுத்தடுத்து உடனே உடனே வரும் ஸ்பீட் பிரேக்கர்களில் பிரேக் இல்லாத ஸ்கூட்டி வண்டி குதிகுதித்துத் தடதடப்பது போல விநோதமாக விட்டு விட்டு பேசுவதையும் ஓவராக நடிப்பதையும்….
 
 ரஞ்சனி, இனியாவது குறைத்துக் கொள்ளுங்கள் , பிளீஸ் ! முடியல . 
 
மனிதப் புனிதர் அய்யா அப்துல் கலாம் அவர்களின் கனவுகளில் திரை உருவமாக இருக்கும்  இந்தப் படத்தில் , 
 
காதல் டிராக் இன்னும் சிறப்பாக இருந்திருக்’கலாம்’ .  சில விசயங்களை இன்னும் எளிமையாக விளக்கமாக சொல்லி இருக்’கலாம்’ 
எம் ஜி ஆரின் விவசாயி படப் பாடளின் அந்த இரண்டு வரிகளை எம்ஜிஆரின் முகத்தோடு காட்சியாகவே காட்டி கைதட்டல் வாங்கி இருக்’கலாம்’ 
சமூக அக்கறை பேசும் கதையில் வசனம் இன்னும் கூர்மையாக இருந்திருக்’கலாம்’ பல அடுக்கு ரசிகர்களுக்கும் சென்று சேர வேண்டிய இந்தப் படத்தில் ஆங்கிலம் இன்னும் இருந்திருக்’கலாம்’ 
 
இப்படி இன்னும் சில ‘கலாம்’களும் இருந்திருக்கலாம் .  இருந்திருந்தால் படம் மேலும் சிறப்பாக வந்திருக்கும் . 
 
ஆனாலும் என்ன …
தயாரிப்பாளர்கள் கோட்டீஸ்வர ராஜு, ஹேமா  ராஜு
தயாரிப்பாளர்கள் கோட்டீஸ்வர ராஜு, ஹேமா ராஜு

வளர்ந்த செழித்த நாடுகளில் வேண்டுமானால் கலையின் நோக்கம் பொழுதுபோக்காக இருக்கலாம் . 
 
ஆனால் மோசமான அரசியல் மற்றும் நிர்வாக அழுத்தங்களால் மக்களின் சுய சிந்தனை பாழ்பட்டு,  இன்னும் வளரும் நாடாகவே இருக்கும் நம் நாட்டில்,  
கலை என்பது சமூக முன்னேற்றத்துக்காகவே என்பதில்   மாற்றுக் கருத்தே இல்லை . 
 
அந்த வகையில் இந்தப்  எல்லோரும்  கட்டாயம் பார்க்க வேண்டிய –   A MUST WATCH MOVIE!
 
இப்படி ஒரு சிறந்த சமூக அக்கரைப்படததை கொடுத்திருக்கும் தயாரிப்பாளர்கள் கோட்டீஸ்வர ராஜு மற்றும் ஹேமா ராஜு , இயக்குனர் டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் , ஆகியோர் பாராட்டப்பட வேண்டியவர்கள் .
 
மொத்தத்தில் 
 
ஆகம் ….. சமூக அக்கறை தாகம் ; அதனால் விளைந்த யாகம் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →