ஓர் இரவு என்ற வித்தியாசமான படத்தின் மூலம் கவனம் கவர்ந்த ஹரி – ஹரீஷ் (ஹரி ஷங்கர் & ஹரீஷ் நாராயண்) இரட்டை இயக்குனர்கள்…. அடுத்து இயக்கிய அம்புலி படம் தமிழின் முதல் 3D படம் என்ற பெருமையை பெற்றது .
கே டி வி ஆர் கிரியேட்டிவ் ஃபிரேம்ஸ் சார்பில் அந்த படத்தை தயாரித்த எஞ்சினியர் வி. லோகநாதன் , அவரது சகோதரர் டாக்டர் வி.ஜனநாதன், மற்றும் லோகநாதனின் மகன் எஞ்சினியர் ஸ்ரீனிவாஸ் லோகநாதன் ஆகியோரின் தயாரிப்பில்….
அதே ஹரி ஹரீஷ் இரட்டையர்கள் அடுத்து இயக்கி வரும் 28 ஆம் தேதி வெளிவர இருக்கும் ஆ படமும் தமிழ் சினிமாவின் சரித்திரத்தில் இடம் பெறுகிறது .
எஸ் பாஸ் ! ஹாரர் அந்தாலாஜி என்று சொல்லப்படும் தமிழின் முதல் பேய்க்கதைத் தொகுப்பு படம் என்ற பெருமையை பெறுகிறது ஆ !
அம்புலி கோகுல்நாத், சிம்ஹா, மேக்னா , பாலா, எம் எஸ் பாஸ்கர், பாஸ்கி, ஸ்ரீஜித் ஆகியோர் நடிக்க, வெங்கட் பிரபு ஷங்கரின் பாடலிசை மற்றும் சாம் வழங்கும் பின்னணி இசையில், சதீஷ் ஒளிப்பதிவில் இயக்குனர்களில் ஒருவரான ஹரி ஷங்கரின் படத்தொகுப்பில்…
படத்தில் மொத்தம் ஐந்து விதவிதமான வித்தியாசமான பேய்களை பார்க்கப் போகிறீர்கள் !
கப்பல்கள் மற்றும் மேலே ஆகாயத்தில் பறக்கும் விமானங்கள் ஆகியவற்றை இழுத்து கடலுக்குள் ஜல சமாதி செய்யும் சக்தி உள்ள இடமாகக் கருதப்படும் பெர்முடா டிரை ஆங்கிள் கடல்பகுதி பற்றி படித்து இருப்பீர்கள் . நம்ம சென்னைக்கு அருகில் வங்காள விரிகுடாவில் அப்படி மந்தக் குழி என்ற ஒரு பகுதியை சித்தரித்து கடலுக்குள் இருந்து ஒரு பேயைக் கொண்டு வருகிறார்கள் இந்தப் படத்தில். .
தேசிய நெடுஞ்சாலையில் சிம்ஹா அன் கோ செல்லும் நீண்ட பயணத்தில் ஒரு பேய் வருகிறது .
ஆளரவமற்ற பயண வழி ஏ டி எம் இயந்திரத்துக்குள் ஒரு பேய் ஆட்டிப் படைக்கிறது .
அரேபியப் பாலைவனத்திலும் துபாய் நகரிலும் ஒரு பேய் வருகிறது .
ஜப்பானில் ஒரு அட்டகாசமான பேய் வருகிறது . இப்படி மொத்தம் உலகளாவிய ஐந்து பேய்கள் ஆட்டிப்படைக்கும் படம் இது .
மிரட்டலான டிரைலர் ஒன்றை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் திரையிட்டுக் காட்டினார்கள் .
“என்னதான் இப்போ வாழ்க்கையில் வெற்றிகள் வந்துகிட்டே இருந்தாலும் எப்பவோ நம்மை பாதிச்ச தோல்வியை மறக்க முடியல ” என்ற ரீதியில் சிம்ஹா பேச , ஆரம்பிக்கும் அந்த டிரைலரில் ஐந்து பேய்களும் அதிரடிக்கின்றன
.அதிலும் மந்தக் குழியில் கடலுக்குள் இருந்து கருப்பு பிசாசாக நீந்திப் பாய்ந்து வரும் கறுப்புப் பேய் அடிவயிற்றை கலக்குகிறது.
கடைசியில் கடலில் அலைபாய்ந்து ஹெல்ப் மீ ஹெல்ப் மீ என்று கோகுல் கத்துவதுடன் டிரைலர் முடிகிறது
படத்தொகுப்பு , பின்னணி இசை , சவுண்ட் எடிட்டிங் எல்லாம் டிரைலரிலேயே மிரட்டுவதைப் பார்த்தால் ….மந்திரிச்ச தாயத்து கட்டிக் கொண்டுதான் படம் பார்க்க போகவேண்டி இருக்கும் போல இருக்கிறது .
“ஓர் இரவு, அம்புலி போன்ற எங்கள் படங்களின் வெற்றிக்கு பத்திரிக்கைகள் கொடுத்த ஆதரவு முக்கியமானது . உங்கள் ஆதரவை இந்தப் படத்துக்கும் வழங்க வேண்டும் ” என்றார்கள் இயக்குனர்கள் .
“இது போன்ற படங்களின் வெற்றி தொடர்ந்து எங்களை புதிய முயற்சியுடன் வரும் படங்களை தயாரிக்க வைக்கும் ” என்கிறார்கள் , தயாரிப்பாளர்களான லோகநாதனும் ஸ்ரீநிவாசும் .
“முதன் முதலா ஹீரோவா ஆகி இருக்கேன் . டிரைலர்ல எப்படி நடுக்கடல்ல சிக்கிட்டு ஹெல்ப் மீ ஹெல்ப் மீ கத்துறனோ அப்படிதான் என் மனநிலையும் இருக்கு . பத்திரிக்கையளர்கள் மற்றும ரசிகர்களின் ஆதரவு வேணும் ” — இது கோகுல் .
நட்புடன் இயல்பாக பேசும் ஹரி ஹரீஷ் இரட்டையர்கள் ” படம் ஹிட் ஆகணும்னு கடவுளை வேண்டிட்டு இருக்கோம் சார் . என்னதான் பேய்ப்படம் எடுத்தாலும் வேண்டுறதுக்கு கடவுள் கிட்டதானே வந்தாகணும் ” என்று சிரிப்புத் தத்துவம் கூறி விட்டு…
மேலும் தொடர்ந்து , ” ஓர் இரவு படம் எடுக்கும்போது பேய் பங்களாவுக்கு ஒரு சூப்பர் பங்களாவை தேர்ந்தெடுத்து வச்சிருந்தோம் . ஆனா அது ஷூட்டிங்கு கிடைக்காதுங்கற ஒரு நிலைமை.! ஒரு நிலையில் வேறு வழியில்லாம ‘அந்த பங்களா எப்படியாவது கிடைக்கணும்’னு வேண்டிகிட்டு முருகனுக்கு 108 தேங்காய் உடைச்சோம் . என்ன ஆச்சர்யம் ! அந்த பங்களாவே கிடைச்சுருச்சு . பேய்க்கு பங்களாவை கடவுள் முருகன் வாங்கிக் கொடுத்தாரு ” என்று வாய்விட்டு சிரிக்க வைக்கிறார்கள்.
ஆஹா….. பார்ட்டிங்க பேய்த்தனமா காமெடியும் பண்ணுவாங்க போலருக்கே !