சவுந்தர்யன் பிக்சர்ஸ் சார்பில் விடியல் ராஜு தயாரித்து வில்லனாகவும் நடிக்க, விதார்த் – ஹர்திகா ஷெட்டி ஜோடியாக நடிக்க, ஜோகன் இசையில் ஆனந் கிருஷ்ணா இயக்கி இருக்கும் படம் ஆள்.
இந்த ‘ஆள்’ நம்பிக்கையான ஆளா என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு….
பிலிப்பைன் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிப் படமாக 2005 ஆம் ஆண்டு இயன் கமசான் , நெயில் டேலா லானா இருவரும் எழுதி இயக்கி நடித்து வெளிவந்த கேவிட் (cavite) என்ற படத்தின் கருவை எடுத்துக் கொண்டு, 2008 ஆம் ஆண்டு இந்தியில் ராஜ் குமார் குப்தா இயக்கத்தில் ராஜீவ் கண்டேல்வால் நடிப்பில் வந்த அமீர் என்ற படத்தின் கதையை தெரிந்து கொள்ள வேண்டும் .
தான் வேலை செய்யும் இங்கிலாந்தில் இருந்து தனது சொந்த ஊரான மும்பைக்கு வரும் அமீர் என்ற இளைஞன் ஏர்போர்ட்டில் இறங்கிய உடன், அவன் கையில் ஒரு செல்போன் வலுக்கட்டாயமாக ஒப்படைக்கப்படுகிறது. அதில் வரும் ஒரு போன் , அமீரின் குடும்பத்தாரை கடத்தி வைத்து இருப்பதாக சொல்லி அதற்கான வீடியோவும் காட்டி சில காரியங்களை செய்யச் சொல்கிறது ஒரு குரல் . தவிர “நீ செய்யும் செயல்கள் ஜிகாத்தின் ஒரு அங்கம்” என்று சொல்கிறது
போனில் அடுத்தடுத்து வரும் கட்டளைகள் அவனை ஒரு ஹோட்டலுக்கு போகச் சொல்கிறது. அங்கே கொடுக்கப்படும் ஒரு அட்ரசை வாங்கிக் கொண்டு ஒரு குறிப்பிட்ட போன் பூத்துக்கு போய் ஒரு போன் செய்யச் சொல்கிறது. அந்த போன் பாகிஸ்தானுக்கு போகிறது . பிறகு அடுத்து வரும் போன் கட்டளை, அமீரை ஒரு லாட்ஜில் தங்கச் சொல்கிறது . அங்கிருந்து ஒரு ரகசிய வீட்டுக்கு போகச் சொல்கிறது . அங்கே அமீரிடம் ஒரு பெட்டி தரப்படுகிறது . கேட்டால் உள்ளே வெடி குண்டு இருப்பதாக சொல்லப் படுகிறது . பயந்து கொண்டே வந்த அமீர் அதை திறந்து பார்த்தால் முழுக்க முழுக்க பணம் இருக்கிறது.
அப்போது கட்டளையிடும் மனிதன் போன் செய்து “இது ஜிகாத்தில ஈடுபடும் நமது சகோதரர்களுக்கான பணம். இதை குறிப்பிட்ட இடத்தில் சேர்த்து விட்டால் உன் வேலை முடிந்து விடும். உன் குடும்பத்தை விட்டு விடுகிறேன் ” என்று சொல்கிறான் . சரி என்று அமீர் கிளம்ப , அந்த சூட்கேஸ் பஸ்ஸில் திருடப்படுகிறது . ஒரு விலை மாதுவின் உதவியோடு அதை மீட்கிறான் அமீர். மீண்டும் வரும் போன் கால் அந்த சூட்கேசை தொடர்ந்து பஸ்சில்தான் கொண்டு சொல்ல வேண்டும் என்று சொல்கிறது.
அப்படியே அதை எடுத்துக் கொண்டு முதியவர்கள் , மாணவிகள் , குழந்தைகள் , சில இஸ்லாமிய நபர்கள் , இளைஞர்கள் நிறைந்த ஜன நெரிசல் கொண்ட பஸ்ஸில் அமீர் பயணிக்கிறான் . பாதி வழியில் மீண்டும் வரும் போன் கால், ”பெட்டியை பஸ்சிலேயே விட்டு விட்டு இறங்கு” என்று சொல்கிறது .
அப்போதுதான் அமீருக்கு உறைக்கிறது . நம்மிடம் இருந்து திருடப்பட்ட பணப் பெட்டியை மாற்றி அதே போன்ற ஒரு வெடி குண்டு பொருத்தப்பட்ட பெட்டியை கொடுத்து விட்டார்கள் என்பது புரிகிறது. இப்போது பெட்டியை அவர்கள் சொன்னபடி வைத்து விட்டு இறங்கா விட்டால் அமீரின் குடும்பத்தினர் கொல்லப்படுவார்கள் . பெட்டியை வைத்து விட்டு இறங்கினால் இன்னும் மூன்று நிமிடத்தில் குண்டு வெடித்து பஸ்ஸில் உள்ள எல்லோரும் சதைத் துணுக்குகளாக சிதறுவார்கள்.
இந்தியாவை நேசிக்கும் அந்த உண்மையான இந்திய இஸ்லாமிய இளைஞன் என்ன செய்தான் என்பதே அமீர் .
இந்தக் கதையை வைத்துக் கொண்டு தமிழில் வந்திருக்கும் ஆள் படத்தில், தமிழ் நாட்டுஇளைஞனான அமீர் சிக்கிமில் உள்ள கேங்டாக் நகரில் இருக்கும் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் . அங்கே ரிஸ்வான் என்ற தமிழ்நாட்டு முஸ்லிம் இளைஞனும் படிக்கிறான் . அவனை சில இளைஞர்கள் அடிக்கடி தாக்குகிறார்கள். “முஸ்லிம் என்பதால் என்னை தாக்குகிறார்கள்” என்று அவன் சொல்கிறான் . அவனை தன்னோடு தங்க வைக்கிறான் அமீர் .
சென்னையில் உள்ள தனது அம்மா தம்பி தங்கை மீது அளவு கடந்த பாசம் வைத்து இருக்கும் அமீருக்கு மீனாட்சி என்ற பெண்ணோடு காதலும் இருக்கிறது . மீனாட்சிக்கு அவளது பெற்றோர் வேறு மாப்பிள்ளை பார்க்க, அவள் தன் காதலை பெற்றோரிடம் சொல்ல, மத வித்தியாசம் பாராமல் அமீரை ஏற்க விரும்பும் மீனாட்சியின் பெற்றோர், அவனை பார்க்க வரச் சொல்கின்றனர் .அமீர் சென்னை வர, எல்லா விவரங்களையும் அறிந்த ரிஸ்வான் அமீர் பற்றி ஜிகாத் நடத்த விரும்பும் தீவிரவாத நபருக்கு (விடியல் ராஜு) தகவல் தர, அவன் அமீரை வளைக்கிறான்.
அதே போல அமீர் வசம் தரப்பட்ட பணப்பெட்டி ஆள் படத்தில் பஸ்ஸில் திருடப்படாது. ஒரு பரபரப்பான ஆக்ஷன் காட்சியோடு கொள்ளையடிக்கப்பட்டு விலை மாதுவின் உதவியால் பரபரப்பான சண்டைக் காட்சி மூலம் மீட்கப் படும். இப்படி தமிழுக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்திருப்பதோடு படமாக்கலில் அசத்தி இருக்கிறார் இயக்குனர் ஆனந் கிருஷ்ணா.
விதார்த் அமீர் கேரக்டருக்காக உழைத்து இருக்கிறார் . கதாநாயகி ஹர்திகா ஷெட்டிக்கு வேலை கம்மி என்றாலும் ஒரு பாடலில் மழையில் நனைந்து தீயை மூட்டுகிறார் . வில்லனாக நடித்து இருக்கும் தயாரிப்பாளர் விடியல் ராஜு மிரட்டுகிறார் . சின்ன சின்ன கேரக்டர்களில் வரும் நபர்கள் கூட பொருத்தமான நடிகர் தேர்வு காரணமாக கவனிக்க வைக்கிறார்கள்.
கேங்டாக் நகரின் அழகை கண்ணுக்கு இதமாக தரும் உதயகுமாரின் ஒளிப்பதிவு, சென்னை நகரின் கதை நிகழும் பகுதிகளின் கசகசப்பையும், அழுக்கு புழுதி பிசுக்கு ரத்தம் இவற்றையும், மிக அருமையாக கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது . ஜோகனின் பின்னணி இசை படத்துக்கு டெம்போ ஏற்றுகிறது .
திரைக் கதையின் ஆரம்பப் பகுதிக்கு சிக்கிம் மாநில லொக்கேஷனை தேர்ந்தெடுத்தது…. ”சாவதற்கு முன்பு பிடிச்ச விஷயத்தை பார்த்துட்டு செத்துப் போகணும்” என்று ஆரமபத்தில் விதார்த் சொல்லும் ஆசையை, கடைசியில் சிலிர்ப்பூட்டும் வகையில் பயன்படுத்தியது … படத்தை உருவாக்கிய விதம் இவற்றில் ஜொலிக்கிறார் இயக்குனர் ஆனந் கிருஷ்ணா .
இந்திய நாட்டை உண்மையாக நேசிக்கும் ஒரு இஸ்லாமிய இளைஞன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த வகையில் அனைத்து தரப்பாலும் கொண்டாடப்பட வேண்டிய படம் இது.
ஆள்… பெரும்புள்ளி .
மகுடம் சூடும் கலைஞர்கள்
————————————–