
பீகாக் மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்க,
கே.பாக்யராஜ் , ஜி.எம் .குமார் , ராஜ் கபூர் ஆகியோரிடம் பணியாற்றி அழுத்தமான திரைக்கதை மற்றும் இயக்க அனுபவம் பெற்ற எஸ்.என். துரைசிங் இயக்கத்தில்,
புதுமுகம் ஹேமந்த், மலையாளப் பட உலக கதாநாயகி அவந்திகா மோகன் ஆகியோர் நடிக்க , பழனிவேலின் படத் தொகுப்பில், உதயசங்கரின் ஒளிப்பதிவில் ராம்ஜீவனின் இசையில் ,

மண்மணம் மாறாத கிராமியப் பின்னணியில் உருவாகி இருக்கும் காதல் கமர்ஷியல் திகில் பேய்ப்படம் ஆலமரம்.
மாடர்னான பங்களா பேய்களையே பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள், நாட்டுப் புற இசைப் பின்னணியில் கிராமியக் கலாச்சார பின்புலத்தில் ஒரு நேட்டிவிட்டியான பேயை இந்தப் படத்தில் பார்க்கலாம்.
இயக்குனர் ராஜ்கபூரை சிறப்பு விருந்தினராகக் கொண்டு நடந்த பாடல் வெளியீட்டு விழாவில் முன்னோட்டத்தையும் ஐந்து பாடல்களையும் திரையிட்டார்கள்.
பாடல்களில் ‘ஊரு அடி; அடித்து இருந்தார் இசையமைப்பாளர் ராம்ஜீவன் . நாயகன் ஹேமந்த் உற்சாகமாக ஆடி இருந்தார் . அவந்திகா மோகன் பிரேமுக்குள் நன்றாக இருக்கிறார் . பேயாக நடித்து இருக்கும் சிந்து என்ற பெண் மிரட்டலாக நடித்து இருந்தார் .

அந்தப் பெண் பேசும்போது ” படத்துல சிகரட் எல்லாம் குடிக்கணும்னு சொன்னாங்க. அதுக்காக தனியா தம் அடிச்சு டிரைனிங் எல்லாம் எடுத்தேன் ” என்றார்
“இந்தப் படத்தின் இயக்குனர் துரைசிங் மிகச்சிறந்த திறமைசாலி . கொஞ்சம் தாமதமாக இயக்குனர் ஆகிறார் .ஆனால் கண்டிப்பாக ஜெயிப்பார்.படத்தில் எல்லோரும் சிறப்பாக பங்காற்றி இருப்பது காட்சிகளை பார்க்கும்போது தெரிகிறது. எல்லோருக்கும் வாழ்த்துகள் ” என்றார் இயக்குனர் ராஜ்கபூர் .

“படத்துக்கு எல்லோருடைய வரவேற்பையும் வேண்டுகிறேன் .
அது அடுத்தடுத்த படங்கள் எடுக்க அடித்தளமாக இருக்கும் ” என்றார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சர்வேஷ்
எஸ்.என் . துரைசிங் பேசும்போது ” பாக்யராஜிடம் இருந்து விட்டு பின்னர் ஜி எம் குமாரிடம் வேலை செய்யப் போனேன் .
இரண்டு காட்சிகளை கொடுத்து வசனம் எழுதி வரச் சொன்னார் ஜி எம் குமார் . எழுதிக் கொடுத்தேன் .
ஜி எம் குமார் பக்கத்தில் இருந்து அதை படித்த லிவிங்ஸ்டன் ” இவன் நம்ம டைரக்டர் (கே.பாக்யராஜ்) மாதிரியே எழுதறான் ‘ என்று பாராட்டினார் .
இடையில் சில குடும்ப சூழ்நிலைகள் காரணமாக ஊருக்கு போய் விட்டேன் .
அதுதான் தாமதம் . இந்தப் படத்தை சுவாரஸ்மாக எழுதி இயக்கி இருக்கிறேன் .
ஹீரோ ஹேமந்த் நன்றாக நடித்தார் .
அவந்திகா மோகன் எக்சலன்டான நடிகை .
என் படத்துல நான் அவங்களை ஒப்பந்தம் செய்யும்போது அவங்க மலையாளத்துல ஒரு படம்தான் நடிச்சு இருந்தாங்க. ஆனா நாங்க இரண்டாவது கட்ட படப் பிடிப்புக்கு போறதுக்குள்ள அவங்க அஞ்சாறு படம் நடிச்சுட்டாங்க .
மறுபடியும் கால்ஷீட் தருவாங்களான்னே பயந்தோம் . ஆனா அவங்க அம்மா எங்ககிட்ட ‘ஒத்துக்கிட்டதை மறுக்க மாட்டோம்’னு சொன்னாங்க .
நல்லபடியா வந்து முடிச்சுக் கொடுதாங்க.

பேயா நடிக்கிற கேரடருக்குதான் ஆளே கிடைக்கல . அப்போதான் சிந்து வாய்ப்பு கேட்டு வந்துது.
கேரக்டரை சொல்லி தம் அடிக்கணும்னு சொன்னேன் . ‘அவ்வளவுதான சார் . பண்ணிடுவோம்’னு சொல்லிட்டு இன்னொன்னு சொல்லி ‘அதுவும் பண்ணனுமா?’ன்னு கேட்டுச்சு . அதை இங்க வெளிய சொல்ல முடியாது .
நடிப்புல அவ்வளவு ஆர்வம் . சிந்து இந்த படத்துக்காக நிஜமாவே ரத்தம் சிந்தி நடிச்சுது.
நிஜமான ரத்தம் ! படத்துல சங்கிலி கட்டின ஒரு நாயை இழுத்துட்டு போற சீன்ல கீழ விழுந்து அடிபட்டு .. இரும்புச் சங்கிலி அந்தப் பொண்ணோட கையை நசுக்கி ரத்தம் கொட்டி … ரொம்ப நன்றி சிந்து .
நாங்க நல்லா எடுத்து இருக்கோம் . இனி மக்கள் ஆதரவு வேணும் ” என்றார் .
ஆலமரம் வெற்றி விழுதுகளை வளர்க்கட்டும் !