
பீகாக் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஹேமந்த் அவந்திகா மோகன் இணையராக நடிக்க எஸ் என் துரைசிங் இயக்கி இருக்கும் படம் ஆலமரம். இந்த சினிமா மரம் விழுது விடுமா என்று பார்ப்போம்.
கிராமத்து மனிதனான கருத்த பாண்டி திடீரென காணாமல் போகிறான் . கொஞ்சகாலத்துக்கு பிறகு அந்த ஊருக்கு பேய் பிடித்த ஓர் இளம் பெண்ணை அழைத்து வரும் ஒருவன் , “என் தங்கையின் உடம்பில் கருத்த பாண்டி ஆவியா இருக்கான் ” என்று கூற , கருத்த பாண்டி இறந்த விசயமே அப்போதுதான் அனைவருக்கும் தெரிகிறது .
அந்தப் பெண்ணை விட்டு விட வேண்டும் என்று பூசாரி சொல்ல , ”ஒரு நாள் இந்த ஊரில் இருந்து விட்டு அப்புறம் போகிறேன்” என்கிறான் கருத்த பாண்டி. அதன்படி அந்த பெண்ணின் உருவத்திலேயே ஊர் முழுக்க போகிறான் .
அந்த ஊரில் இருந்த ஒரு அழகான பூக்காரி தன்னை விரும்ப, அது பிடிக்காமல் தன்னை கொன்று விட்டு அந்த பூக்காரியையும் மணந்து கொண்ட தன் முதலாளியை கருத்த பாண்டி , அந்த ஆவி பிடித்த அந்த பெண்ணின் உருவத்திலேயே போய் கொல்கிறான்.
அதன் பிறகும் அந்த ஊரை விட்டு போக விரும்பாமல் ”ஊர் ஓரமாக உள்ள ஆலமரத்தில் தங்கிக் கொள்வேன்” என்கிறான். ஊரும் ஒத்துக் கொள்கிறது .

இது நடந்து பல ஆண்டுகளுக்கு பிறகு….
பல நாள் தங்கி விரதம் இருந்து திருமணத்தடை கழிக்க, அந்த ஊரில் உள்ள கோவிலுக்கு வரும் இளம்பெண்ணுக்கும் (அவந்திகா மோகன்), அதே ஊரில் தோல்பாவைக் கூத்து நடத்திக் கொண்டு பால் வியாபாரம் பார்க்கும் ஒரு விதவைப் பெண்மணியின் தம்பிக்கும் (ஹேமந்த்) காதல் வருகிறது.
அந்த காதலுக்கு நாயகனின் நண்பனான சடையன் பெரும் உதவியாக இருக்கிறான் . யாருமே வர அஞ்சும் ஆலமரத்துப் பகுதியில் நண்பன் சடையனின் காவலில் இருவரின் காதலும் வளர்கிறது.
அதே நேரம் அந்த ஊரில் இருக்கும் அக்னி மற்றும் நட்சத்திரம் என்று இரண்டு பணக்காரர்கள் நாயகியை விரும்ப, அவர்களின் காதலை நிறைவேற்றித் தருவதாக இருவரிடமும் தனித் தனியாக சொல்லும் சடையன் இருவரிடமும் இருந்தும் நிறைய பணம் கறக்கிறான்.
இன்னொரு பக்கம் நாயகியை எடுத்து வளர்ந்த அப்பா போன்ற ஒருவரே அவளை திருமணம் செய்து கொள்ள ஆசைப் படுகிறார். பிறகு நாயகியின் கண்ணீர் காரணமாக மனம் மாறுகிறார். ஆனால் அந்த பெரியவரின் தம்பிகளுக்கு அவரது மனமாற்றம் பிடிக்கவில்லை .
ஒரு நிலையில் ஆசைப்படும் எல்லோரும் நாயகியை நெருக்க , அவளை கல்யாணம் செய்து கொள்ள நாயகன் முடிவு செய்கிறான். ஆனால் கல்யாணத்துக்கு முதல்நாள் நாயகன் கொல்லப்படுகிறான்.
கருத்த பாண்டி ஆவி இருக்கும் ஆலமரத்தின் கீழ் காதலை வளர்த்துக் கொண்ட நாயகனை கொன்றது யார்……?
— என்பதுதான் இந்த ஆலமரம்.

எஸ் என் துரைசிங்கின் திரைக்கதையில் நல்ல நகைச்சுவைக் காட்சிகள் இருக்கின்றன.
முழுக்க முழுக்க கிராமத்து முகங்கள் காரணமாக நேட்டிவிட்டி நன்றாக இருக்கிறது
ஹேமந்த் உற்சாகம் காட்டி இருக்கிறார். அவந்திகா மோகன் அழகான பல்வரிசை தெரிய சிரிக்கிறார் .

சில காட்சிகளே வந்தாலும் கருத்தபாண்டியின் ஆவி ஏறிய பெண்ணாக நடித்து இருக்கும் சிந்து கவனம் கவர்கிறார்.
சடையனாக நடித்திருக்கும் நடிகரின் குரல் பேச்சு இரண்டும் நன்றாக இருக்கிறது .
ராம் ஜீவனின் இசையில் சில் சில்லா, ஆலமரக் காத்தாட, தேரு வருது பாடல்கள் இனிமை . ஆலமரக் காத்தாட பாடல் அடிக்கடி முணுமுணுக்க வைக்கிறது

மெனக்கெடலும் நேர்த்தியும் படம் முழுக்க தேவைப்படுகிறது .
கிளைமாக்ஸ் எதிர்பாராத ஒன்று.
ஆல மரம்…. மரம் !