கதிரவன் ஸ்டுடியோஸ் சார்பில் எம் எஸ் கதிரவன் தயாரிக்க, பூவரசன், அனுபமா பிரகாஷ், விக்கி ஆதித்யா , சத்யா , யோகி பாபு, சபரி, நிவிஷா, பவர் ஸ்டார் சீனிவாசன் நடிப்பில்,
ஏ. கேசவன் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் அவளுக்கென்ன அழகிய முகம். படம் அழகியதா ? இல்லை அழுகியதா ? பேசலாம் .
கல்யாணம் ஆனவள் என்பது தெரியாமலே ஒரு பெண்ணைக் காதலித்து அவள் கல்யாணம் ஆனவள் என்பது தெரிந்து காதல் தோல்வியாளன் ஆன ஒருவன் ,
காதலித்த பெண்ணின் வீட்டில் உள்ள ஓர் ஆன்ட்டியை கட்டிப்பிடித்து அதைக் காதலி பார்த்து விட்டதால் ஓர் அறையும் காதல் தோல்வியும் வாங்கிக் கொண்டு வந்த ஒருவன் ,
மலையாளப் பெண்ணைக் காதலித்து ,காதல் விஷயம் தெரிந்த அவளது பெற்றோர் கேரளாவுக்கு அழைத்து,
ரகசிய திருமணத்துக்கு ஏற்பாடு செய்ய, காதலியைக் கடத்திக் கொண்டு வர திட்டமிட்டநிலையில் மது போதையில் விமானத்தைத் தவறவிட்டு ,
லேட்டாகப் போய் காதலி கல்யாணக் கோலத்தில் நிற்பதைப் பார்த்து விட்டு யாரோ ஒருவன் போல திரும்ப வந்து காதல் தோல்வியை அடைந்த ஒருவன் ..
இந்த மூவரும் சேர்ந்து ஒரு காதல் ஜோடியை சேர்த்து வைக்க உதவ முன் வருகின்றனர் . உடன் பவர் ஸ்டார் சீனிவாசன்.
பக்கத்து வீட்டில் தோழிகளோடு தங்கி இருக்கும் காவ்யாவுக்கும் (அனுபமா பிரகாஷ்) காதல் . அப்பா அம்மா மீது காவ்யாவுக்கு பாசம் அதிகம்.
அண்ணன் அன்னிக்கு சம்மதம் . ஆனால் ஜாதி வெறி கொண்ட காவ்யாவின் குடும்பம் கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்ளுமா என்ற நிலை .
எனவே , குடும்பத்தோடு காவ்யா கலந்து கொள்ளும் ஒரு கல்யாண வீட்டில் அவளை சந்தித்து மேற்கொண்டு திட்டமிட , கிருஷ்ணாவும் நண்பர்களும் போக , அங்கே நடந்த ஒரு கலவரத்தில் காவ்யாவின் அப்பாவை கிருஷ்ணா அடித்து விடுகிறான் .
யார் என்ன என்று தெரிய வரும் நிலையில் காவ்யாவின் பெற்றோரே கிருஷ்ணாவை மன்னித்து அவனுக்கு மகளைத் தர சம்மதித்தாலும்
”என் அப்பாவை அடித்தவனோடு வாழ முடியாது . அவனோடு கல்யாணம் வேண்டாம்” என்கிறாள் காவ்யா .
காவ்யாவின் மனம் மாறியதா இல்லையா என்பதே இந்த அவளுக்கென்ன அழகிய முகம்.
சர்வர் சுந்தரம் படத்தில் இடம் பெற்ற அவளுக்கென்ன அழகிய முகம் பாடல் இசையோடு படம் துவங்குகிறது .
படம் முழுக்க பழைய பாடல்களை அவற்றின் தீம் மியூசிக்குகளை பயன்படுத்தி இருக்கிறார்கள் . அவற்றின் சில நகைச்சுவையாகவும் இருக்கின்றன .
ஒரு சில இடங்களில் வசன நகைச்சுவையும் செல்லுபடி ஆகிறது .
வைரமுத்துவின் வரிகளில் டேவிட் ஷோர்ன் இசையில் பாடல்கள் இனிமை . பெரும்பாலும் பின்னணியில் பழைய பாடல்களே பயன்படுத்தப் படுவதால்,
பின்னணி இசைக்கு வேலை கம்மி . யோகி பாபு , பவர் ஸ்டார் எல்லாம் படத்தில் இருக்கிறார்கள் . அவ்வளவுதான் .
அடுத்தவன் பொண்டாட்டியை காதலித்தவன் கதை , ஆன்ட்டியை கட்டிப்பிடித்து காதலியை இழந்தவன் கதை .. இரண்டையும் ,
சீரியசாக சொல்வதா ? காமெடியாக சொல்வதா ? என்பதில் இயக்குனருக்கு குழப்பம் . எனவே சாதாவாக நகர்கின்றன காட்சிகள் .
கேரள நர்ஸ் கதை நல்லாத்தான் போச்சு . ஆனா இயக்குனருக்கு சொந்த ஊர் கேரளா போல முழுப்பெயர் கேஷவன் குட்டி போல .
அதனால்தான் காதலியைக் காப்பாற்ற பிளான் செய்து விட்டு காதலன் தண்ணி அடித்து மட்டையாவது போலவும் , காதலிக்கு திருமணம் ஆகி விட்ட நிலையில்,
அவளுக்கு முன்னாள் போய் நின்று காதலியின் குடும்பத்துக்கு பயந்து சர்ச்சில் இந்துக் கடவுளை கும்பிட்டு காமெடி பண்ண,
காதலி காறித் துப்ப , பயந்து கொண்டு விழுந்தடித்துக் கொண்டு திரும்பி வருவது போலவும் காட்சி வைத்து இருக்கிறார் .
நிஜத்தில் கேரளப் பெண்களை காதலித்து அவர்கள் அழைப்பின் பேரில் அவர்களைக் காப்பாற்றிக் கொண்டு வர கேரளா போகும்
எத்தனை மேற்குத் தமிழ்நாட்டு தமிழ் இளைஞர்கள் கேரளாவில் மலையாளிகளால் கொன்று புதைக்கப் படுகிறார்கள் தெரியுமா ?
அவை சாதாரண வழக்காகக் கூட பதியப்படாமல் போகின்றன என்பதை விஷயம் தெரிந்த யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் .
இந்த நான்கு காதல் ஜோடிகளும் யார் என்றே தெரியாத நிலையில் ஓரிரு இடங்களில் சந்தித்துக் கொள்வதாக காட்சி வைத்து இருக்கிறார்கள் .
வைத்தது போதாது என்று வசனத்தில் வேறு சொல்கிறார்கள் ஆனால் அதனால் திரைக்கதைக்கோ படத்துக்கோ என்ன பயன்?
தன்னை அடித்த கிருஷ்ணாவை காவ்யாவின் அப்பா மன்னித்து விட்ட போதும் காவ்யாவால் தாங்க முடியவில்லை என்பது நிஜமாகவே அட்டகாசமான விசயம்.
அந்த உணர்வை வைத்து கிளைமாக்சில் வீடுகட்டி விளையாடி இருக்க வேண்டாமா ?ரெண்டு நிமிஷம் சும்மா மழையில் அழ விட்டு விட்டு , “படத்தை முடிக்க டைம் ஆச்சு . அவன மன்னிச்சிடும்மா ” என்று ,
கேமராவுக்குப் பின்னாடி இருந்து டைரக்டர் கொடுத்த குரலுக்கு “ஒகே சார் ” சொல்வது போல கிருஷ்ணாவை மன்னிக்கிறாள் காவ்யா .
அப்புறம் என்ன வணக்கம்தான் .
திரைக்கதையில் இன்னும் சிறப்பான அம்சங்களும் அக்கறையான படமாக்கலும் மொத்தத்தில்,
சிரத்தையும் நேர்த்தியும் இருந்து இருந்தால் பேரழகு முகமாகவே இருந்திருக்கும் .
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462