முன்னேயே அப்படிதானே இருப்பாருன்னு கலாய்க்கவெல்லாம் கூடாது .
இது அதோ அந்த பறவை போல பட விவகாரம் !
அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’. ஆக்ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்க, அருண் கதை எழுதியுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் ஜோன்ஸ், நடிகை அமலாபால், இயக்குனர் கே.ஆர்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினருடன் நடிகர், இயக்குனர், அரசியல் பிரமுகர் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ், இயக்குனர் திருமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
திரையிடப்பட்ட முன்னோட்டத்தில் அமலா பாய்ந்து சுழன்று சேற்றில் அமிழ்ந்து , மரம் ஏறி ஏறி சண்டை போட்டு இருப்பது தெரிந்தது
விழாவில் தயாரிப்பாளர் ஜோன்ஸ் பேசும்போது, ‘பல படங்களை ஜான் மேக்ஸ் உடன் இணைந்து தயாரித்துள்ளேன். மைனா படத்தில் இருந்து அமலாபால் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். அதோ அந்த பறவை போல படத்தில் அவரின் அர்ப்பணிப்பு ரொம்ப உணர்வுப்பூர்வமானது. இந்த விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் மனதார வரவேற்கிறேன். மிக வித்தியாசமான கதை. அமலாபாலிடம் இந்தக் கதையை சொன்னதும் ஓ.கே என்றார். கதைப் பிடித்ததால் இந்தப்படத்தை இயக்குநர் கே.ஆர்.வினோத் சிறப்பாக இயக்கி தந்துள்ளார்’ என்றார்.
நடிகை அமலாபால் பேசும்போது, ‘இந்தப் படம் ரொம்ப சந்தோசத்தைக் கொடுத்தது. தயாரிப்பாளருக்கு கண்டிப்பா நல்ல லாபத்தை கொடுக்கும். காரணம் படத்தோட கதை. ஒரு இளம்பெண் எந்த உதவியுமே இல்லாம தனி ஆளா காட்டுல சிக்கிக்கிட்ட பிறகு அதுல இருந்து எப்படி வெளியில வர்றாங்கறதுதான் படம். இன்னிக்கு நாடு இருக்கற நிலையில பெண்கள் பாதுகாப்புங்கறது எந்த அளவுக்கு இருக்குங்கிறது தான் பெரிய விவாதமா இருக்கு. இந்த சூழ்நிலையில இப்படி ஒரு படம் வர்றது ஒட்டுமொத்த பெண்களுக்கான படமாக இருக்கும்.
இந்த படத்தோட டீம் பக்காவா திட்டமிட்டு உழைச்சாங்க. கதை சொல்லும் போது கூட பக்காவா பிளான் பண்ணித்தான் வந்திருந்தாங்க. இந்த படத்துக்காக புதுசா ‘கிரவ்மகா’ என்னும் தற்காப்பு கலையை கத்துக்கிட்டேன். ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் கூட ஒரு சண்டை போட்டுருக்கேன். அந்த சண்டை பெரிசா பேசப்படும். கதை ஆசிரியர் அருண் அவ்வளவு திறமையா இந்த கதையை எழுதி இருந்தாரு. படம் ஷூட் போறதுக்கு முன்னாடியே எனக்கான ஸ்டண்ட் காட்சிகளை ஷூட் பண்ணி டெமோ காட்டி எனக்கு நம்பிக்கை கொடுத்தாங்க.
இயக்குனர் வினோத், நிர்வாக தயாரிப்பாளர் கவாஸ்கர், கதாசிரியர் அருண் இவர்கள் எல்லாம் பெரிய போராட்டத்தைச் சந்தித்து இருக்கிறார்கள். இவர்கள் கஷ்டம் முன்னாடி படத்தில் நான் பட்ட கஷ்டம் எல்லாம் ஒன்றுமே இல்லை. ரொம்ப இளமையான டீம். இவர்கள் இருக்கிற படத்தில் நான் இருக்கிறது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. ஒரு ஹீரோயின் காட்டுக்குள் ஆக்ஷன் பண்ணா எப்படி இருக்கும் என்று ஒரு பேச்சு இருந்தது. ஆனால் கதை அதை சரி செய்துவிடும். எங்க டீமில் எல்லாரும் பெண்கள் பலத்தை உணர்ந்தவர்கள். தயாரிப்பாளர் ஜோன்ஸ் மைனாவில் இருந்தே நல்ல நண்பர்.
சிறுவன் பிரவீன் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறான். நிச்சயமாக அவனுக்கு தேசிய விருது கிடைக்கும். மேலும் இந்த படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. என்னோடு நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தில் வேலை செய்த அனைவரும் இப்படத்தை ஒரு ஃபேஷனாக எடுத்து வேலை செய்தார்கள். இந்தப்படத்திற்காக நான் கற்றுக்கொண்ட தற்காப்பு கலை, எனக்கு நிஜ வாழ்க்கையிலும் ரொம்ப தைரியத்தைக் கொடுத்துள்ளது. கதை பிடித்திருந்தால் மட்டுமே படத்தில் நடிப்பேன். கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க நிறைய நடிகைகள் இருக்கிறார்கள்’ என்றார்.
எஸ்.வி.சேகர் பேசும்போது, ‘அதோ அந்த பறவை போல பாட்டு வரி தான் இப்படத்தின் தலைப்பு. நம்மிடம் இப்படியான படங்கள் வருவதற்கு இப்போது தான் வாய்ப்பு வந்துள்ளது. சினிமாவில் இரண்டு வகை. ஓடும் படம், ஓடாத படம் அவ்ளோ தான். சினிமாவில் ராமராஜன் பசுமாடு வைத்து பால் கறக்கும் படம் ஓடிவிட்டால் அதேபோல் பத்துப்படம் எடுப்பார்கள். ஏன் என்றால் இது வியாபாரம். நாங்கள் படம் எடுத்த காலத்தில் பத்து லட்சத்திலேயே படத்தை எடுத்து விடுவோம். நாம் சரியான பட்ஜெட்டில் படம் எடுக்க வேண்டும். இப்போது ஒரு நாளைக்கு நாற்பது லட்சம் ஆகிறது.
சினிமாவில் மட்டும் தான் உள்ளே வந்து நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. முதலில் சினிமாவை தெரிந்துகொண்டு உள்ளே வரவேண்டும். இந்தப்படத்தில் பெரிய பிளஸ் அமலாபால். அவருக்கு எல்லா மொழிகளிலும் மார்க்கெட் இருக்கு. இந்த படத்தை ரொம்ப பிரமாதமாக எடுத்திருக்கிறார்கள். அமலாபாலின் தையரித்தை நான் பாராட்டுகிறேன். சினிமாவிற்கு சென்சார் தேவையே இல்லை என்பது என் கருத்து. நம்பிக்கை வேற ஓவர் நம்பிக்கை வேற. சரியான நேரத்தில் படத்தை வெளியீடுங்கள். என் படம் எப்போது வெளியானாலும் ஓடும் என்று ஓவர் நம்பிக்கை வைக்காதீர்கள். அதனால், இப்படத்தை அப்படி சரியான நேரத்தில் வெளியீட்டு வெற்றி காண வாழ்த்துகிறேன்’ என்றார்.
இயக்குனர் கே.ஆர்.வினோத் பேசும்போது, ‘என்னோட குடும்பத்தினர், நண்பர்கள் இல்லாமல் எனக்கு இந்த மேடை அமைந்திருக்காது. என் உழைப்பை நம்பி வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. மற்றும் என்னுடைய படக்குழுவினருக்கு நன்றி. எங்கள் படத்தில் அமலாபால் ஹீரோயின் இல்லை, ஹீரோ. அவரை அப்படித்தான் அழைத்து வருகிறேன்.
அமலாபாலுக்கு இந்தபடம் ரொம்ப சிறப்பா இருக்கும் என்று நம்புகிறோம். சண்டைக்காட்சிகள் எல்லாம் நாங்கள் முன்கூட்டியே திட்டமிட்டு அமலாபாலிடம் காட்டினோம். அதைப் பார்த்து பயிற்சி செய்து படத்திற்கு தயாரானார். அதை அப்படியே படப்பிடிப்பில் மிகச்சிறப்பாக செய்துவிட்டார். 60 அடி உயரமுள்ள மரத்தில் இருந்து இறங்குவது, சண்டை போடுவது என நடிப்பில் அமலாபால் அசத்தியுள்ளார். குறிப்பாக சேற்றுக்குள் இறங்கி மூச்சு விடாமல் நடிக்க வேண்டும் அதை நாங்கள் நினைத்து பார்க்க முடியாதளவிற்கு நடித்து கொடுத்தார். இந்த தைரியம் யாருக்கு வரும். . எல்லாருக்கும் பிடிக்கும் வகையில் படம் சிறப்பாக வந்திருக்கிறது’ என்றார்.