ஐபிசி தமிழ் செய்தி நிறுவனம் நடத்திய குறும்படப் போட்டியில் வென்ற ஆனந்த் ரமணன் அதே ஐ பி சி நிறுவனத்துக்காக இயக்கி இருக்கும் படம் ஆறாம் நிலம் .
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்று நிலங்களை ஐந்து வகையாகப் பிரித்தான் தமிழன் .
ஆனால் இந்த ஐந்திலும் அடங்காமல் ……ஆம் பாலையிலும் கூட அடங்காமல் அதை விட மோசமான நிலையில் சிக்கிச் சிதறி ஆறாம் நிலமாகக் கிடக்கும் இன்றைய ஈழத்தைப் பற்றிய படம்தான் இது .
போர் முடிந்ததும் எல்லாம் முடிந்து விடும் என்பதுதான் உலகின் பொதுப் புத்திச் சிந்தனை . ஆனால் உண்மை அப்படி இல்லை. அநியாயமாகப் போரிட்டு ஆக்கிரமிக்க முயன்று அடிவாங்கிய நாடுகளில் கூட போர் முடிந்த பின்னும் எளிய மக்களின் துயரங்கள் தொடரும்.
அப்படி இருக்க ,

மனித இனம் தோன்றிய காலம் தொட்டு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தனது அடையாளமாக இருந்த நிலத்தை இழக்காமல் தக்க வைத்துக்கொள்ளப் போராடிய ஓர் இனம்…
அதில் தோற்ற பிறகு அந்தப் போர் எப்படி அதோடு முடிந்ததாக அமையும் ?
அதன் துயரம் நினைக்கச் சகிக்காத கொடுமையாக இருக்கும் அல்லவா ?
அந்தக் கொடுமையை வலிக்க வலிக்கச் சொல்கிறது ஆறாம் நிலம் .
முல்லைத் தீவின் பெயர் மூலத்துவா என்றும் கிளிநொச்சியின் பெயர் கிரானிகா என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஈழம் இருந்ததற்கான அடையாளமே சிங்கள அராஜகத்தால் முற்றாக அழிக்கப்படுவதை செய்திகளாகக் கூட கடப்பவர்கள் குறைவு .
மீறி அதைக் கேள்விப்பட்டபோது ஒரு நொடியாவது உள்ளம் துடித்த உணர்வு மிக்க மனிதர்களுக்கு , அந்த இன மொழி நில அடையாள அழிப்பின் அக்கிரமத்தை விலாவாரியாகக் காட்டுகிறது இந்தப் படம் .
போர்க்காலத்தில் போராளிகளை மட்டுமல்ல…
அவர்களுக்கு உதவியவர்கள் , கருத்தியல் ரீதியாக ஆதரித்தவர்கள் மட்டுமல்ல..
தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக பல பேரை மிருகத்தினும் கேவலமாக வேட்டையாடின சிங்கள ராணுவமும் அரசும்.
அப்படி கைது செய்யப்பட்டுக் கொண்டு போகப்பட்ட தனது கணவன் இருக்கிறானா இல்லையா ? அவனைப் பார்க்க முடியுமா ? முடியாதா? என்று போராடும் ஒரு மனைவி, மற்றும் அவளது மகள், மற்றும் மாமியார் (கொண்டு போகப்பட்ட கணவனின் தாய்) …

இந்த மூவரின் கதையே படத்தின் அடி நாதம் . கூடவே சில நல்ல துணைக் கதாபாத்திரங்கள்
எவ்வளவோ போராடியும் இருக்கிற கஷ்டத்தில் பணத்தைக் கொடுத்தும் குடும்பத் தலைவனைப் பார்க்க முயலும் அந்தக் குடும்பத்துக்கு நடந்தது என்ன என்பது அடிப்படைக் கதைப் போக்கு .
இதுவே மனம் கனக்கும் வகையில் விவரிக்கப்பட்டு இருக்க,
அதோடு நில்லாமல்…
ஒரு காலத்தில் இனவெறி அன்னியர்கள் உள்ளே நுழையாமல் தடுக்க வைக்கப்பட்ட கண்ணி வெடிகளை நீக்கும் பணியை சிங்கள அரசு திட்டமிட்டுத் தமிழர்களிடமே கொடுக்க, அவற்றை நீக்கும் முயற்சியில் வெடித்துச் சிதறும் தமிழர்கள்…

பள்ளியில் படிக்க வரும் தமிழ்ப் பிள்ளைகளின் தமிழ்ப் பெயரை நீக்கி விட்டு அவர்களுக்கு சிங்களப் பெயர் வைத்து , தமிழ் படிக்க விடாமல் சிங்களம் படிக்கச் சொல்லி வற்புறுத்தும் சிங்கள அரசு…
அதற்கு சம்மதித்தால்தான் குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகள் கிடைக்கும் என்று நிபந்தனை விதிக்கும் சிங்கள அதிகாரிகள், அதற்கு துணை போகும் -கருணாக்கள் போன்ற — கீழ்மட்டத் தமிழ் அதிகாரிகள்…
தமிழர்களின் நிவாரணத்துக்காகப் போராடும் தமிழர்கள் கூட ஒற்றுமையாக இல்லாமல் தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து போராடுவது , அதனால் பலவீனமாகும் போராட்டங்கள்..
தமிழினம் அங்கு ஓகோ என்று வாழ்ந்த காலத்தில் பிறந்து வளர்ந்து இன்று கையறு நிலையில் வாழும் வயது முதிர்ந்த தமிழர்களின் குமுறல்கள்..

சிங்களர்கள் மட்டுமின்றி அவர்களுக்கு துணை போகும் சில தமிழ் அதிகாரிகளும் தமிழ்ப் பெண்கள் மீது நிகழ்த்த முயலும் பாலியல் அத்து மீறல்கள் ..
ஓரிரு பெண்கள் அதற்குப் பணிந்தாலும் பெரும்பான்மைத் தமிழ்ப் பெண்கள் அவற்றை எதிர்த்து வறுமையிலும் ஒழுக்கத்துடன் , பெண் புலிகளாக வாழும் பாங்கு …
இப்படியாக இன்றைய ஈழத்தின் கையறு நிலையைப் பாசாங்கு இன்றிச் சொல்கிறது இந்த படம் .
இப்படி ஒரு படத்திலும் அருமையான டைரக்டோரியல் ‘டச்’களால் கவர்கிறார் இயக்குனர் ஆனந்த் ரமணன் .
பல்லாங்குழி ஆடும் பேத்தி தனக்கு மட்டும் அல்லாது பாட்டிக்கும் சேர்த்து தானே விளையாடுவதைக் காட்டி அதன் மூலம் பாட்டியின் இறப்பைப் புரிய வைக்கும் இடம் ஓர் உதாரணம் .

நாயகியாக நடித்து இருக்கும் நவயுகா குகராஜா , தனது வலியுணர்த்தும் வலிமையான நடிப்பால் இதயங்களில் நிறைகிறார் . பண்பட்ட நேர்த்தியான நடிப்பு.
தமிழ் திரையுலகுக்கு வருக தமிழ் மகளே ! நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
குழந்தை ஜீவேஸ்வரன் அன்பரசி, நாயகன் மன்மதன் பாஸ்கி , பாட்டியாக நடித்து இருப்பவர் (எங்கும் அவர் பெயர் குறிப்பிடப் படவில்லை), மாற்றுத் திறனாளி ஆட்டோ ஓட்டுனர் , எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர் . வாழ்த்துகள் . வரவேற்பு !
சிவ சாந்தகுமாரின் ஒளிப்பதிவு நம்மையும் களத்துக்குள் கொண்டு போய் நிறுத்தி கலங்கடிக்கிறது . வாழ்த்துகள்

சிந்தக்கா ஜெயக்கொடியின் இசை சில இடங்களில் பலவீனமாகவும் சில இடங்களில் சிறப்பாகவும் இருக்கிறது . (பட்ஜெட் காரணம்?)
சஜீத் ஜெயகுமாரின் படத் தொகுப்பில் சில ஷாட்கள் தேவைக்கு மேலும் நீள்கின்றன.
உலகம் எங்கும் போக வேண்டிய படத்துக்கு இப்படியா கடமைக்கு , தெளிவின்றி, நல்ல எழுத்துருக்கள் இன்றி மோசமாக சப் டைட்டில் போடுவது? என்னப்பா நீங்க !
முழுக்க முழுக்க ஒலிக்கும் ஈழத்தமிழ் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் தருகிறது . ஈழத் தமிழ் இசைத் தமிழ் !
மேதகு படத்துக்குப் பிறகு ஈழப் பின்னணியில் இன்னொரு நல்ல படம் ஆறாம் நிலம் .

உலகெங்கும் நியாயமான விடுதலைக்குப் போராடி அநியாயமாக ஒடுக்கப்பட்ட இனங்களின் பிரதி(நிதி)யாகவே இந்தப் படத்தை எடுத்துக் கொள்ள முடிகிறது
ஹிட்லர் இறந்து பல்லாண்டுகள் ஆகியும் இன்னும் அவன் யூதர்களுக்கு இழைத்த வன்முறைக் கொடுங்கோன்மை பற்றிப் படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
அப்படி எனில் ஈழ அழிப்பு பற்றி இன்னும் நடக்கும் அந்தக் கொடுமை பற்றி இன்னும் எவ்வளவு படங்கள் வர வேண்டும்.?
ஆறாம் நிலம் …. ஆறா ரணம் !
su.senthilkumaran@gmail.com