ஆஹா ஓஹோ புரடக்ஷன்ஸ் சார்பில் ராம் என்பவர் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, நீரஜா, ஷாஜி , இளவரசு ஆகியோர் நடிப்பில் குபேர் .ஜி. என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் ஆரண்யம் . ஆரண்யம் என்றால் காடு . பசுமை எவ்வளவு என்று பார்ப்போம்
நூதன முறையில் திருடும் ஒரு கும்பலின் தலைவன் அரவிந்த் (ராம்). அவர்கள் செய்யும் ஒரு திருட்டை கேமரா மொபைலில் படம் படித்து ஃபேஸ் புக்கில் ஷேர் செய்து, அதனால் அவர்களை போலீசில் சிக்க வைக்கிறாள் திவ்யா (நீரஜா).
அதனால் கோபம் அடையும் ராம் & கோ திவ்யாவின் செல்போனை திருடுகிறது . ராமை வசமாக சிக்கவைக்க திவ்யா முயலும்போது அவன் நல்லவன் என்று அவள் உணர்ந்து கொள்கிறாள். அந்த வகையில் அவன் மீது அவளுக்கு காதல் வருகிறது
அவனை அடிக்கடி சந்திப்பதற்காக, செல்போனை அவனிடமே விட்டு வைக்கிறாள் திவ்யா. ராமும் திவ்யாவை காதலிக்கிறான்.
காதல் ஜோடிகள் காதலில் தீவிரமான நிலையில், தனது திருட்டுக் கேஸ்களை டீல் செய்யும் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லபாண்டிதான் திவ்யாவின் தந்தை என்பது அரவிந்துக்கு தெரிகிறது. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி காதல் ஜோடிகளை பிரிப்பதை ஒரு வெறியோடு செய்பவர் அவர்.
திவ்யாவும் தன் தந்தையை எண்ணி நடுங்குகிறாள். ஒரு காதல் ஜோடியை பிரிப்பதற்காக பெற்ற மகளான தன்னையே , சம்மந்தமில்லாத அந்த இளைஞன் மீது ஈவ் டீசிங் புகார் கொடுக்க வைக்கும் தன் தந்தை , தங்களை என்னை செய்வாரோ என்பது அவளது பயம்.
மகளின் காதல் விஷயம் அறியும் செல்லபாண்டி ராமைக் கொல்ல அடியாட்களை அனுப்புகிறார்.
அப்பாவுக்கும் ரவுடிகளுக்கும் பயப்படும் திவ்யா. ராமுடன் ஓர் ஆரண்யத்துக்கு சென்று, உயர்ந்த நீர் வீழ்ச்சிக்கு வந்து அங்கிருந்து குதித்து விடுகிறாள். அதை எதிர்பாராத ராம், அவளை[ப் பிரிய முடியாமல் தானும் குதிக்கிறான் . வெள்ளத்தில் சிக்கி ……
ஒரு நிலையில் கரையேறுகிறது காதல் ஜோடி .
இந் நிலையில் ஆரண்யத்தில் அந்தப் பகுதியில் உள்ள வன விலங்குகள் எல்லாம் அங்கிருந்து ஓடுகின்றன . காதல் ஜோடி ஆரண்யத்துக்குள் சுகமாக பொழுது கழிக்க,
மகளைத் தேடும் இன்ஸ்பெக்டருக்கு , தான் அனுப்பிய ரவுடிகள் ராமைக் கொல்லவில்லை என்பது புரிகிறது . மகள் தனது காதலனோடு ஆரண்யத்துக்குள் போன தகவலும் தெரிய வருகிறது .
இருவரையும் கண்டு பிடித்து ராமைக் கொன்று மகளை மீட்க , ரவுடிகளோடும் துப்பாக்கியோடும் ஆரண்யத்துக்குள் நுழைகிறார் இன்ஸ்பெக்டர் .
ராமைக் காப்பாற்ற அவனது தந்தை குமரேசனும் (இளவரசு) வருகிறார்.
அப்புறம் என்ன நடந்தது என்பதே ஆரண்யம் .
ஓர் ஆக்சன் கிளைமாக்சுக்கான பில்டப்பை கொடுத்து விட்டு , ஒரு நிலையில் திரைக்கதையில் சட்டென்று பின்னோக்கிப் பயணித்து எதிர்பாராத அதிர்ச்சியான நெகிழ்ச்சியான கிளைமாக்ஸ் சொல்லி படத்தை முடிக்கிறார்கள்.
சாலக்குடி அருவியும் , தாய்லாந்து காடு லொக்கேஷனும் படத்துக்கு பெரிய பலம் . இரண்டாம் பகுதியில் நம்மை கடைசிவரை கட்டிப் போடும் கயிறு இதுதான்
நாயகன் ராம் கதபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார். இயல்பாக நடித்திருக்கிறார்.
இயல்பான தோற்றம், பெரிய கண்கள் , கன்னத்தில் குழி விழும் சிரிப்பு என்று யதார்த்த அழகியாக கவர்கிறார் நீரஜா . ஆனால் நடிப்புதான் வரவே மாட்டேங்குது . பதட்டம் , பயம் , காதல் எதுவுமே வரல. கட்டிப் பிடிக்கும் காட்சிகளில் கூட எட்டி நின்று கவனமாக கட்டிப் பிடிக்கிறார் . கவனமான காதலி.
கேரக்டரின் தன்மையால் லேசாக பயமுறுத்துகிறார் ஷாஜி.
சகாதேவனின் ஒளிப்பதிவு காடுகளை படமாக்கிய விதத்தில் பாஸ் மார்க் வாங்குகிறது.
எஸ்.ராமின் இசையில் இனிமை கம்மி . இன்னும் முயன்று இருக்க வேண்டும் . சும்மா தாரா தாரா தீரா என்று பின்னணி இசையில் ஒப்பேற்றுகிறார்.
படத்தின் ஆரம்பக் காட்சிகளில் நாடகத்தன்மை இருந்தபோதும் சில காட்சிகள் எதிர்பார்த்தபடியே இருந்தாலும் ஒரு நிலையில் படத்தின் மீது ஆர்வம் ஏற்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.
ராம் என்பது திவ்யாவுக்கு காதல் வருவதற்கான காரணம் ரொம்ப வீக் மற்றும் டூ மச் . ஆனால் அந்தக் காதலை வளர்க்க செல்போனை ராமிடமே விட்டுவைத்து திவ்யா போடும் நிபந்தனைகள் ரசனைக்குரியான . அதே நேரம் அந்தக் காட்சிகளில் இருக்கும் சுவாரஸ்யத்தை ,அவற்றை விவரித்த வகையிலும் படமாக்கிய வகையிலும் இன்னும் நன்றாக கொடுத்து இருக்கலாம் .
வண்ண வண்ணப் பூக்கள் வினோதினி மாதிரி காட்டுக்குள் நீரஜாவின் ஆடைக் குறைப்பு காட்சிகள் ஜில் தட்ட வைத்தாலும் அசந்தர்ப்பமாக வரும் பாடல்கள் வேகத் தடை .
ரவுடிகள் கூட எல்லாம் தொடர்பு வைத்துக் கொண்டு எல்லா தவறுகளையும் செய்யும் ‘நார்மல்’ இன்ஸ்பெக்டர் செல்லப் பாண்டி, காதல் ஜோடிகளை பிரிப்பதில் மட்டும் ‘அப்நார்மலாக’ ஏன் இந்த அளவுக்கு கொடூரமாக நடந்து கொள்கிறார் என்பதற்கு….
ராம் மீது நீரஜாவுக்கு காதல் வருவதற்கு சொன்ன மாதிரி ஒரு ஒப்புக்கு சப்பாணி காரணம் கூட சொல்லாதது தப்பு.
அப்படி சொல்லாததால் அந்த இன்ஸ்பெக்டர் கேரக்டர் மீது வர வேண்டிய பயம் வரவில்லை. அது அவரது இயல்பான குணாதிசயம்தான் என்றால், அது சரியாக சொல்லப்படவில்லை.
பாரஸ்ட் ரேஞ்சராக வரும் சிங்கமுத்துவின் , மூன்றாம் பிறை பட உல்டா காமெடி டிராக் லேசாக புன்னகைக்க வைக்கிறது . அது ஒன்றும் ஆஹா ஓஹோ விஷயம் இல்லைதான் . ஆனால் தொட்டுவிட்ட பிறகு அதை இன்னும் சிறப்பாக காமெடியாக்கி , பொன்மேனி உருகுதே பாட்டை எல்லாம் வைத்து , ரயில்வே ஸ்டேஷன் சீன வரை கொண்டு போய் இருந்தால் அது படத்துக்கு பலமாகவே இருந்திருக்கும் .
காமெடி என்ற பெயரில் காமெடியே இல்லாத கரடி காட்சிகள் தேவை இல்லாத ஒன்று . (ஒரு நல்ல சுவாரஸ்யமான படத்துக்கு காமெடி இருந்தாக வேண்டும் என்ற கட்டாயமே இல்லை . காமெடி இல்லாத நிலையில் அந்தக் காட்சிகளை எடிட்டிங் டேபிளிலேயே கொலை செய்வதில் தப்பே இல்லை).
ஒரு வணிக ரீதியிலான திரைக்கதையில், காதல் ஜோடியின் போராட்டத்தை காட்டும்போது அது இயல்பான நிகழ்வுகளாக இருப்பதும் , அதில் இருந்து அவர்கள் எப்படி ஜெயித்தார்கள் என்று காட்டுவதும் , ஜெயிக்கவில்லை எனில் அவர்கள் எவ்வளவு போராட்டத்துக்குப் பிறகு பரிதாபமாகத் தோற்றார்கள் என்று சொல்வதுமே, ஒரு வெற்றிப் படத்துக்கான கதை வளர்ப்பாக இருக்கும் .
அப்படி இல்லை என்னும்போதும் எதிர்பாராத அந்த கிளைமாக்ஸ் ….. குபேர் ஜி, நிஜமாகவே குபீர் ஜி !
அது கொடுக்கும் நெகிழ்ச்சியான அழுத்தமும் மனம் கனக்க வைக்கிறது . திரைக்கதையின் ஒரு பகுதி என்ற வகையில் கொண்டாட வைக்கிற காட்சி அது . ஆனால் படத்தின் முடிவு என்ற வகையில் ?
இந்தக் கதை இதோடு முடியவில்லை என்ற உணர்வு ஏற்படுகிறது . படத்தில் வரும் இந்த கிளைமாக்சை ஆண்ட்டி கிளைமாக்ஸாக வைத்துக் கொண்டு , அதில் இருந்து பயணித்து ஓர் அசத்தலான அட்டகாசமான கிளைமாக்சைக் கொடுத்து இருந்தால் ஆரண்யம் ஆட்டிப் படைத்திருக்கும் .
எனினும் காட்டுத்தனமான காதலும் காதலிக்க சொல்லும் காடும் ஆரண்யத்தை ஆராதிக்கச் சொல்கிறது .
ஆரண்யம் …. குளிர்ச்சி .