ஆக்ஷன் டேக் மூவீஸ் சார்பில் ஸ்ரீதர் நாராயணன் மற்றும் சிவசரவணன் தயாரிக்க , வோல்மார்ட் பிக்சர்ஸ் சார்பில் செங்கல்பட்டு சாய் வெளியிட உதயா , கனிகா திவாரி, ஜெகன், முன்டாசுப்பட்டி முனீஸ் காந்த் ஆகியோர் நடிப்பில் காண்டீபன் இயக்கி இருக்கும் படம் ஆவி குமார் .
முதலில் விஜய் ஆண்டனி சில பாடல்களுக்கு இசை அமைக்க அப்புறம் ஸ்ரீகாந்த் தேவா சில பாடல்களை கொடுத்து பின்னணி இசையும் வழங்க, இப்படியாக இருவரும் சேர்ந்து இசை அமைத்த படம் இது .
ஆவிகளுடன் பேசி ஜோசியம் சொல்லும் ஆவி அமுதா என்ற பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறோம் அல்லவா ? அதில் அமுதா என்ற பெண்ணுக்குப் பதில் குமார் என்ற ஆண் இருந்தால் எப்படி இருக்கும் என்பதே இந்தப் படம் . குமாராக தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பனின் மகனும் இயக்குனர் ஏ எல் விஜய்யின் அண்ணனுமான நடிகர் உதயா .
படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் கலைப்புலி எஸ் தாணு, சிவ சக்தி பாண்டியன், டி.சிவா, ராதா கிருஷ்ணன் , பைவ் ஸ்டார் கதிரேசன் உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க பிரமுகர்கள் மற்றும் கலைப்புலி சேகரன் , விவேக் , பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள் .
உதயாவின் தொடர் விடா முயற்சியையும் உழைப்பையும் பாராட்டிப் பேசிய விவேக் “அவரைப் போல நம்பிக்கையான நபரைப் பார்க்க முடியாது . இந்தப் படம் அவருக்கு மிகப் பெரிய வெற்றித் திருப்பு முனையாக அமைய வேண்டும்” என்று கூறி விட்டு , தொடர்ந்து ” சிறிய படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் எல்லாம் மிகக் கஷ்டப்படுகிறார்கள் . கத்தரிக்காயை கூட ஒரு காய்கறி வியாபாரி தண்ணீர் தெளித்து பாதுகாத்து நான்கைந்து நாட்கள் கடையில் வைத்து விற்கிறார் .ஆனால் சின்னப் படங்களுக்கு மூன்று நாட்களுக்கு மேல் தியேட்டர் கிடைப்பது இல்லை . தேரின் சக்கரங்களில் சிக்கும் எறும்பு போல பெரிய படங்களுக்கு இடையில் சின்ன படங்கள் மாட்டி நசுங்கிப் போகின்றன . குடும்பப் படத்துக்கு நூன் ஷோ மட்டும் கொடுக்கிறார்கள். பெண்கள் எப்படி காலை காட்சிக்கு வர முடியும்? இப்படி எல்லா தரப்பாலும் சின்ன படங்கள் பாதிக்கப்படும் நிலை மாற வேண்டும்” என்றார் .
விவேக்கின் கருத்தை மறுத்துப் பேசிய கலைப்புலி சேகரன் “பெண்களுக்கு நூன் ஷோதான் வசதி. வீட்டு வேலைகளை முடித்து விட்டு பெண்கள் நூன் ஷோவுக்கு கூட்டம் கூட்டமாக வந்து படம் பார்த்த பொற்காலம் ஒன்று இருந்தது . எனவே அது பிரச்னை இல்லை . ஒரு காம்ப்ளக்சில் ஐந்து தியேட்டர் இருந்தால் எல்லா தியேட்டரிலும் பெரிய நடிகர் நடித்த படத்தை திரையிடுகின்றனர். இது மாற வேண்டும் . காம்ப்ளக்சில் உள்ள ஒரு தியேட்டரில் பெரிய நடிகர் படத்தைப் போட்டு விட்டு மற்ற தியேட்டர்களில் சின்னப் படங்களை போட வேண்டும் .
தனது படங்கள் ரிலீசின் போது ஒரு டிக்கட் 3௦௦ ரூபா விற்க ரஜினிகாந்தே காரணமாக இருக்கிறார் . அப்புறம் அவருக்கு பிரச்னை வராமல் எப்படி இருக்கும் ? ரஜினிதான் என்றில்லை . பலரும் இப்படியே நடந்து கொள்கிறார்கள். தியேட்டர் அதிபர்களுக்கு ஒரு வேண்டுகோள் . உங்கள் தியேட்டரில் காலைக் காட்சியை சின்னப் படங்களுக்கு கொடுங்கள் . சின்னப் படங்களுக்கு மட்டுமே கொடுங்கள் . மற்ற காட்சிகளை பெரிய படங்களுக்கு கொடுங்கள் . ஒரு சின்னப் படத்துக்கு தரும் காலைக் காட்சியை ரெண்டு வாரம் வரை மாற்றாதீர்கள் . எல்லோருக்கும் நல்லது நடக்கும் ” என்றார் .
இதைத் தொடர்ந்து பேசிய தயாரிப்பாளரும் பத்திரிகை தொடர்பாளர் சங்கத் தலைவருமான விஜய முரளி ” இனி 15 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயார்க்கப்படும் படங்கள் வருடத்தின் முக்கியமான பண்டிகை நாட்களில் மட்டுமே திரையிட முடியும் . ஆனால் 15 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் எப்போது வேண்டுமானாலும் திரையிடலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ள நிலையில், நிலைமை சரியாகும் ” என்றார்
ஆவி குமார் படம் பற்றிப் பேசிய ஏ எல் அழகப்பன்
“இந்தப் படம் எல்லோரையும் கவரும் . படம் பார்க்கும்போது நான் சொல்வது எவ்வளவு பெரிய உண்மை என்பதை எல்லோரும் உணர்வார்கள் . அதிலும் கிளைமாக்ஸ் போர்ஷனில் முனீஸ்காந்த் அசத்தி இருக்கிறார் ” என்று கூற , அதையே இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவும் வழி மொழிந்தார் .
படத்தின் முன்னோட்டத்தையும் சில பாடல்களையும் திரையிட்டார்கள் . முன்னோட்டம் மிரட்டியது . மலேசியாவில் எடுக்கப்பட்ட பாடல்கள் சிறப்பாக இருந்தன . கதாநாயகி பல இந்திப் படங்களில் நடித்தவராம். ஹிரித்திக் ரோஷன் சகோதரியாக அவர் நடித்த படம் அவர் ஆடிப் பாடிய பாடல் செம ஹிட்டாம் .
உதயா மிக சிறப்பாக செய்து இருக்கிறார் .
வாழ்த்துகள் உதயா !