ஆவி குமார் @ விமர்சனம்

PICTURES0233

ஆக்ஷன் டேக் மூவீஸ் சார்பில் ஸ்ரீதர் நாராயணன், எஸ்.சிவ சரவணன் ஆகியோர் தயாரிக்க, உதயா, கனிகா திவாரி, நாசர், ஜெகன் ஆகியோர் நடிப்பில்,  தாய் முத்துச் செல்வனின் கதை (!?) திரைக்கதை வசனத்தில் கே.காண்டீபன் என்பவர் இயக்கி இருக்கும் படம் ஆவி குமார் .

எத்தனை  டிகிரி சென்டிகிரேட் என்று பார்ப்போம் .

ஆவிகளுடன் பேசும் திறமை உள்ள குமார் (உதயா) , இறந்து போன தன்னுடைய முன்னோர்களுடன் பேச விரும்பும் நபர்களுக்காக , பல தரப்பட்ட ஆவிகளுடன் பேசும் தொழிலை  செய்கிறான் .

 அவன் ஆவிகளுடன் பேசுவது  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகவும் வந்து சக்கைப் போடு போட, குமார்  எல்லோரும் அறிந்த பிரமுகர் ஆகிறான். ஆனால் அவனைக் கல்யாணம் செய்து கொள்ள மட்டும் எந்தப் பெண்ணுக்கும் விருப்பம் இல்லை. முதலிரவு அறையில் எத்தனை ஆவிகள் கூட இருக்குமோ என்பது உட்பட, ஒவ்வொரு பெண்ணுக்கும்  ஒவ்வொரு பயம். 

பார்க்கும் பெண்கள் எல்லாம் அவனைத்  திருமணம் செய்து கொள்ள மறுக்க , மனம் வெறுத்துப் போய் ஆவிகளுடன் பேசும்  வேலையைக் கைவிடும் நிலைக்கு வருகிறான்  குமார் .

தொலைக்காட்சிக்காக  மலேசியாவில் நடக்கும் ஒரு நிகழ்வோடு ஆவிகளுடன் பேசும் அந்த வேலைக்கு முழுக்குப் போடுவது என்று  முடிவு செய்கிறான் . மலேசியாவில் அந்த நிகழ்ச்சி நடக்க, சிறப்பு விருந்தினராக வரும் போலீஸ் அதிகாரி ஒருவர் (நாசர்),  ”ஆவி குமார் செய்வது வயிற்றுப் பிழைப்புக்கான பொழுது போக்குச் செயல் மட்டுமே . அதில் உண்மையில்லை” என்கிறார்.

Copy of IMG_0280

குமார் அதை மறுக்கிறான். அவன் சொல்வது உண்மை என்றால் தங்களுக்கு தேவைப்படும் ஒரு கொலைக் கேசில் குற்றவாளி யார் என்று இறந்தவரின் ஆவியைக் கேட்டுச் சொல்லச் சொல்கிறார் . இறந்தவரின் ஆவியோடு பேசி குமார் தகவல்களை பெற்று உண்மையான குற்றவாளி யார் என்பதை தொலைக்காட்சி நேரலையில் ஓப்பனாக சொல்கிறான்.

நகைக்கும் போலீஸ் அதிகாரி,   அந்தக் கொலையை செய்த குற்றவாளி   தானே குற்றத்தை ஒத்துக் கொண்டு ஜெயிலில் இருப்பதாகக் கூறுகிறார் . ”நான் சொல்லும் நபர்தான் உண்மையான கொலைகாரன்” என்று  குமார் மறுத்துப் பேச, அது மலேசிய போலீசை அவமானப்படுத்துவதாக அர்த்தப்படுகிறது.

எனவே ‘மீண்டும் துவங்கும் இந்த வழக்கு முடியும் வரை குமார் மலேசியாவை விட்டு போகக் கூடாது’ என்று போலீஸ் கூறுகிறது. குமார் குறிப்பிடும் நிஜமான குற்றவாளியும் குமாரைக் கொலை செய்யக் குறி வைக்கிறான்.

குமார் அங்கேயே தங்க வேண்டிய நிலையில்,   தன் நண்பன் (ஜெகன் ) உதவியுடன் வாடகைக்கு வீடு பார்க்க, ஒரு அப்பார்ட்மென்ட் வாடகைக்கு கிடைக்கிறது . அங்கே குமார் மட்டும் தங்குகிறான் . அந்த வீட்டில் ஒரு இளம்பெண்ணின் (கனிகா திவாரி) ஆவி இருக்கிறது .

தான் செத்துப் போனதே அந்த பெண்ணுக்கு தெரியவில்லை. அதோடு அந்தப் பெண்ணைப் பற்றி எந்த விவரமும் அவளுக்கே தெரியவில்லை . ‘எல்லா விவரமும் தெரிந்த’ ஆவிகளைப் பார்த்தே பழகிய குமாருக்கு,  இது புது அனுபவம் . அந்த ஆவி மீது அவனுக்கு காதலும் வருகிறது

PICTURES0634

அந்தப் பெண்ணைப் பற்றி விசாரிக்கும்போதுதான்  ‘அவள் சாகவில்லை;கோமா ஸ்டேஜில் ஒரு மருத்துவமனையில் இருக்கிறாள்’ என்பது தெரிய வருகிறது. அவள் பெயர் அபிராமி என்பதும் அவள் அங்கேயே பணியாற்றிய டாக்டர் என்பதையும்  குமார் அறிகிறான்.

ஒரு தொழிலதிபர் செய்த ஒரு சுற்றுச் சூழல் சீர்கேட்டுக் குற்றத்தை அவள் கண்டுபிடித்ததால்,  அவளை ஒரு கூட்டம் திட்டமிட்டு கொலை செய்ய முயன்றதும் , கொன்று விட்டதாக நம்பிக் கொண்டு இருப்பதும் புரிகிறது.

கோமா ஸ்டேஜில் அபிராமியின்  நிலைமை மிகவும் மோசமாகிறது . அவளை இனி காப்பாற்ற முடியாது என்று  இறந்தவளாக முடிவு செய்கிறது மருத்துவமனை . அவளது உடல் உறுப்புகளை தானம் கொடுப்பதற்காக எடுத்து விட,  அபிராமியின் பெற்றோர் முடிவு செய்கிறார்கள்.

ஆனால் தன்னோடு இப்போது அருவமாகப் பழகிக் கொண்டு இருக்கும் அபிராமியைக்  காப்பாற்றி அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான் குமார் . அருவ நிலையில் உள்ள அபிராமியின் ஆன்மாவும் பிழைத்து வாழ ஆசைப்படுகிறது.

இன்னொரு பக்கம் அபிராமி சாகவில்லை கோமா ஸ்டேஜில்தான் இருக்கிறாள் என்பதை அறியும் கொலைகாரத்  தொழிலதிபரின் கும்பல் அபிராமியை எப்படியாவது கொல்ல வேண்டும்  என்று மீண்டும் களம் இறங்குகிறது .

அபிராமி  பிழைத்தாளா? செத்தாளா? குமாருடன் சேர்ந்து வாழ்ந்தாளா? இல்லையா? என்பதுதான்,  இந்த ஆவி குமார் படம்

ரீஸ் விதர் ஸ்பூன் என்ற நடிகையும் மார்க் ரஃப்ஃபலோ என்ற நடிகரும் இணையராக  நடிக்க, மார்க் லெவி என்பவர் எழுதிய ‘ஈஃப் ஒன்லி இட் வேர் ட்ரூ’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு,  மார்க் வாட்டர்ஸ் என்பவர் இயக்கி,  2005 ஆம் ஆண்டு வெளிவந்த  ஹாலிவுட் படம் ‘ஜஸ்ட் லைக் ஹெவன்’.

மேற்படி’ஈஃப் ஒன்லி இட் வேர் ட்ரூ  நாவலை படமாக்கும் உரிமையை ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் வாங்கி வைத்திருக்க மீட்டருக்கு மேல் போட்டுக் கொடுத்து அதை அவரிடம் இருந்து வாங்கி படமாகும் உரிமையை பெற்று படமாக்கினார் மார்க் வாட்டர்ஸ் .

அந்தக் கதையை அப்படியே எடுத்துக் கொண்டு சினிஷ் என்பவர் உருவாக்கிய என்றென்றும் என்ற தமிழ்ப் படம் ஒன்றரை வருடம்  முன்பு வந்தது.

பிறகு ஒரு ஆறு மாதம் கழித்து அதே கதையை எடுத்து கொண்டு சில சில மாற்றங்களை செய்து,  ஏகப்பட்ட கந்தர கோலங்களோடு ‘இருக்கு ஆனா இல்லை’ என்ற படமும் வந்தது (முழு விவரத்துக்கு படித்துப் பாருங்கள்  https://wh1026973.ispot.cc/review-of-irukku-aanaa-illa/)

கோமா ஸ்டேஜில் உள்ள பெண் ஆவியாக வருகிறாள் என்பது நிஜமாகவே வித்தியாசமான சுவாரஸ்யமான ஐடியாதான் . எனினும் அது லாஜிக் இல்லை என்று ஹாலிவுட்டில் புறக்கணித்து விட்டார்கள். ஆனால் நம்ம படைப்பாளிகளை அந்த ஐடியா தூங்க விடாமல் செய்ததன் விளைவே இந்தப் படங்கள் .

IMG-20150616-WA0004

ஆனால் இந்த ஆவிகுமார் படத்தில் அந்த அப்பார்ட்மென்ட், ஒரு பெண்ணின் ஆவி , அவள் சாகாமல் கோமா ஸ்டேஜில் இருப்பது போன்ற விசயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு கொஞ்சம் முன்னே பின்னே நாம பலமுறை பார்த்துப் பழகிய விசயங்களையும் சேர்த்து காமெடியும் கொண்டு வந்து இருக்கிறார்கள்.

குமார் ஆவிகளுடன் பேசுபவன் என்பதில் லாஜிக் பலம் கொஞ்சம் கூடுகிறது. (ஆனால் ஜஸ்ட் லைக் ஹெவன் படத்தில்,  ஆவிகள் பற்றி  எதுவும் தெரியாத கதாநாயகனின்  கண்ணுக்கு மட்டும் அந்தப் படத்தின் கதாநாயகி எலிசபத் தெரிவதற்கு சொல்லப்படும் காரணம் , அது ஒரு கவிதை. அது வேறு விஷயம்  )

தவிர, ஆக்ஷன் காட்சிகள் ஆவிகுமார் படத்துக்கு எக்ஸ்ட்ரா பலம் கொடுக்கிறது . குமார் , அபிராமி இருவரையும் கொலை செய்ய வில்லன் குரூப் முயலும் காட்சிகளை திடுக்கிட வைக்கும்படி எடுத்து இருக்கிறார் இயக்குனர் காண்டீபன்.

இரண்டாம் பகுதியின் இரண்டாம் பாகத்தில் வரும் முனீஸ்காந்த் —  தேவதர்ஷினி காமெடி ஜோடி கலகலப்பு ஏற்றுகிறது.

ஆக ரொம்பவும் போராடி ஜஸ்ட் லைக் ஹெவனின்  வண்ணம் மாற்ற முயன்று …அதில் கொஞ்சம் வெற்றியும் பெற்று இருக்கிறார்கள் இந்த ஆவிகுமார் ஆட்கள் .

 கேரக்டருக்குள் தன்னை பொருத்திக் கொண்டு நடித்திருக்கிறார் உதயா. ஆக்ஷன் காட்சிகளில் பரபரப்பாக நடிக்கிறார்

 வாவ் ! கதா நாயகி கனிகா திவாரி . கொள்ளை அழகு ! செம செம செம ! நன்றாக நடிக்கவும் செய்கிறார் .

IMG-20150616-WA0008

விஜய் ஆண்டனி மற்றும்  ஸ்ரீகாந்த் தேவா இசையில் போ போ போ பாடல் கேட்ட ராகம் என்றாலும் இனிய ராகம் . வா வா தமிழ் பையா கிளப் சாங் முணுமுணுக்க வைக்கிறது .

கிராமத்து வெள்ளந்தி நடிப்பில் பட்டாசு வெடிக்கிறார்கள் முனீஸ்காந்தும்  தேவதர்ஷினியும் . சபாஷ்

ஆவி குமார் …. வெது வெதுப்பு !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →