கே ஆர் இன்ஃபோடைன்மென்ட் சார்பில் கே ஆர் வெளியிட ராமலிங்கம் தயாரிக்க, விதார்த், பருத்தி வீரன் சரவணன் , அருந்ததி நாயர், ஹலோ கந்தசாமி, ஜார்ஜ் மரியான், பொன்ராம், பாரதி கண்ணன், செம்மலர் அன்னம் நடிப்பில் ரவி முருகையா எழுதி இயக்கி இருக்கும் படம்.
அப்பா இல்லாத நிலையில் சொன்ன பேச்சுக் கேட்காத மகனை ( விதார்த்) , தனது தம்பியிடம் (பருத்தி வீரன் சரவணன்) ஒப்படைத்து திருத்தச் சொல்கிறார் தாய் .
தம்பியும் வெட்டி நபர் என்பதால் இருவரும் சேர்ந்து வெட்டியாக இருக்கிறார்கள்.
அந்த ஊர் இளம் பெண்கள் (அருந்ததி நாயர் , செம்மலர் அன்னம்) ஊருக்கு யாரும் அழகான ஆண் வந்தால் மடக்கிப் போடுவது என்று பிறந்தது முதலே நிமிண்டலுக்கு ஆளாகி இருக்கிறார்கள் .
இளைஞனுக்கும் , அந்த பெண்களில் வெள்ளைத் தோல் கொண்டவளும் மளிகைக் கடை வைத்திருக்கும் பெண்மணியின் மகளுமான பெண்ணுக்கும் , விலை மாதுவை பேசி முடிவு செய்வதை விட அதிவேகமாக காதல் வந்து விடுகிறது.
அரசு பணம் பெற கழிவறைத் திட்டத்துக்காக வீட்டருகில் ஆள் வைத்துக் குழி தோண்ட , அதில் பொற்காசுகள் கொண்ட பானை இருக்கிறது . மாமன் மச்சான் மற்றும் குழி தோண்டிய நபர் மூவரும் பணத்தைப் பிரித்துக் கொள்ள திட்டமிட, பல்வேறு குழப்பங்களால் நகை ஆசாரி,
பக்கத்து வீட்டுக்காரர் ( ஹலோ கந்தசாமி) , காதலி, பஞ்சாயத்துத் தலைவர், பாம்புப் பிடிப்பவர், இன்ஸ்பெக்டர் என்று பங்கு கேட்பவர்கள் பெருகிக் கொண்டே போக என்ன ஆச்சு என்பதே படம் .
ரத்தம் , வன்முறை, கெட்ட வார்த்தை இல்லாத படம். அது முதல் ஆறுதல் . லாஜிக் இல்லாவிட்டாலும் கிராமத்தை உணர வைக்கும் காட்சிகள், மண்வாசனை என்று படம் பயணிக்கிறது .
விதார்த் , பருத்தி வீரன் சரவணன், பொன்ராம், ஹலோ கந்தசாமி ஆகியோர் நடிப்பில் கவனிக்க வைக்கிறார்கள் . குடிசையில் சமைக்கப்படும் குண்டு இட்லி மாதிரி இருக்கிறார் அருந்ததி நாயர்
வெட்டியான மாமன் மச்சான் உறவு அந்த வீடு கவனிக்க வைக்கிறது
நாடகப் பாணி என்றாலும் ஆங்காங்கே நகைச்சுவை முளைக்கிறது . சின்னச் சின்ன சூழல்கள் புன்னகைக்க வைக்கின்றன.
கதாநாயகியின் ஓடிப் போகும் ஒவ்வொரு முயற்சியும் தோற்றுப் போவதும் அவர் நைசாக வீட்டில் வந்து படுப்பதும் செம் ரகளை .
சில காட்சிகளே ஆனாலும் செம்மலர் அன்னம் கவனிக்க வைக்கிறார் . அவரது கேரக்டரை நீட்டித்து இருந்தால் இன்னும் நல்ல நகைச்சுவை கிடைத்து இருக்கும் . விட்டு விட்டார்கள் .
திரைக்கதையை ஆரம்பத்தில் ரொம்ப லூசில் விட்டு விட்டதும் ஒரு நிலைக்கு மேல் எப்படா முடியும் என்ற உணர்வு ஏற்படுவதும் பழைய பாணி படமாக்கலும் மைனஸ் .
காமடிதான் . ஆனால் காமடி மாதிரி
எனவே பொற்காசுகள் என்று சொல்ல முடியாவிட்டாலும் செப்புகாசுகள் என்று சொல்லலாம்
