டிரிப்பிள் வி ரெகார்ட்ஸ் சார்பில் வினோத்குமார் தயாரிக்க விஜய் வசந்த் ஹீரோவாக நடிக்க ராஜ பாண்டி இயக்கிய ‘என்னமோ நடக்குது’ படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது மட்டுமின்றி,
பலரது இதயங்களையும் வென்ற படம் .
அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அதே டிரிப்பிள் வி ரெகார்ட்ஸ் வினோத்குமார் விஜய் வசந்த் ராஜ பாண்டி கூட்டணியில் தில்லாக உருவாகி இருக்கும் படம் ‘அச்சமின்றி’
நாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் சமுத்திரகனி, கருணாஸ், ராதாரவி, வித்யா, சரண்யா, தேவதர்ஷினி, சண்முகசுந்தரம், கும்கி அஸ்வின், ரோகினி, தலைவாசல் விஜய்,
இவர்களுடன் வில்லன்களாக பரத்ரெட்டி, ஜெயகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள் . ஒளிப்பதிவு – A.வெங்கடேஷ் இசை – பிரேம்ஜி அமரன். பாடல்கள் – யுகபாரதி, எடிட்டிங் – பிரவீன்.K.L
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் முன்னோட்டதத்தையும் பாடல்களையும் திரையிட்டனர் .
பரபரப்பாக விறுவிறுப்பாக கமர்ஷியல் கவிதை இரண்டுங் கலந்த கலவையாக இருந்தது முன்னோட்டம் . பாடல்களும் அருமை
நிகழ்ச்சிக்கு நாயகன் மற்றும் தயாரிப்பாளரின் தந்தையான வசந்த் அண்ட் கோ வசந்த குமார், வெங்கட் பிரபு உள்ளிட்ட சென்னை 28 படக் குழுவினர் , நடிகர் கிருஷ்ணா , இயக்குனர் ஆர் கே செல்வமணி
மற்றும் பொன்வண்ணன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர்
நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றிய நாயகன் விஜய் வசந்த் ” இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் வெங்கட் பிரபு உள்ளிட்ட சென்னை 28 படக் குழுவுக்கு நன்றி .
வெங்கட் பிரபு சார்தான் என்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். என்னமோ நடக்குது என்ற வெற்றிப் படத்தை எனக்குத் தந்த ராஜ பாண்டி இந்தப் படத்தையும் அருமையாக உருவாக்கி உள்ளார் .
ஒத்துழைப்பு கொடுத்த — கொடுக்கிற — கொடுக்கப் போகிற அனைவருக்கும் நன்றி ” என்றார்
இயக்குனர் ராஜபாண்டி பேசும்போது ” என்னமோ நடக்குது படத்தின் கதையை கேட்டு என்னை இயக்குனராக அங்கீகரித்த வசந்த குமார் ஐயா
மற்றும் இந்த படத்தையும் என்னையே இயக்க வைத்த தயாரிப்பாளர் வினோத் நாயகன் விஜய் வசந்த் ஆகியோருக்கு நன்றி .
அச்சமின்றி படத்தின் கதை என்ன என்றால் பிக் பாக்கெட்காரனாக சந்தோஷமாக வாழ்ந்து வரும் விஜய் வசந்தை.
ஒரு கட்டத்தில் போலீஸ் உளவாளி என தவறாக புரிந்து கொள்கிறார் சிருஷ்டி டாங்கே. இருவரும் காதலிக்கிறார்கள்.
ஒரு சூழலில் ஏன் எதற்காக என்றே தெரியாமல் சில கும்பல்கள் அவர்களை துரத்துகின்றன. ஒரு புலனாய்வின் திருப்பத்தில். போலீஸ் அதிகாரியான சமுத்திரக்கனியையும் அதே கும்பல் துரத்துகிறது.
மூவரும் சந்திக்கும்போது தங்களைத் துரத்துவதற்கான பின்னணியில் மிகப்பெரிய மனிதர்களின் சதியும், ஊழலும் இருப்பதும் தெரிய வருகிறது.
அதை எப்படி அவர்கள் சமாளித்தார்கள், குற்றவாளிகளை எப்படி தண்டித்தார்கள் என்பது இந்த படத்தின் திரைக்கதை.
கல்வி முறையில் உள்ள ஊழல்களும், அரசியல்களும் எப்படி சமுதாயத்தை பாதித்துக் கொண்டிருக்கிறது. அதற்கான தீர்வு என்ன என்ற கருத்தை
ஒரு குற்றத்தின் பின்னணியில் விறுவிறுப்பாக உருவாக்கி உள்ளோம். அச்சமின்றி சிலர் செய்யும் தவறுகளை அச்சமின்றி தட்டிக் கேட்பதே “ அச்சமின்றி “ திரைப்படம். ” என்றார் .
சரண்யா பொன்வண்ணன் தன் பேச்சில்
“இதுவரை என்னை எல்லோரும் பாசமுள்ள அப்பாவி அம்மாவாகவே பார்த்து இருப்பீர்கள் . அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டு,
சரண்யா இப்படி கூட நடிப்பாரா என்று எண்ணும் அளவுக்கு இது வித்தியாசமான கேரக்டர் . அது என்ன என்பதை இப்போது சஸ்பென்சாக வைத்து உள்ளார்கள் ” என்றார் .
நான் இந்தப் படம் முழுக்க அவ்வளவு அழகாக பிரெஷ்ஷாக இருப்பதாக சரண்யா மேடம் சொன்னங்க . அதுக்கு காரணமான கேமராமேன் வெங்கடேஷுக்கு நன்றி ” என்றார் .
தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது பேச்சில்
” நாங்கள் எங்கள் போப்டா திரைப்படப் படிப்பு இன்ஸ்டிடியூட்டில் நல்ல திரைக்கதைக்கான உதாரணமாக ராஜ பாண்டியின் முதல் படமான என்னமோ நடக்குது படத்தைத்தான் சொல்கிறோம் ” என்றார்
படத்தின் இசையமைப்பாளரான பிரேம்ஜி பேசும்போது
” ராஜ பாண்டி இயக்கிய முதல் படமான என்னமோ நடக்குது படத்துக்கும் நான்தான் இசை . இதுக்கும் நாந்தான் இசை .
இந்தப் படத்தின் பாடல்கள் நன்றாக வந்ததும் எங்க இருந்து காப்பி அடிச்சன்னு கேட்கறாங்க . என் பெரியப்பா இளையராஜா இருக்கும்போது நான் ஏன் மத்த இடத்துல இருந்து காப்பி அடிக்கணும்.
அவரோட தெலுங்குபட டியூன் ஒண்ணை நான் இந்தப் படத்துக்காக காப்பி அடிச்சு இருக்கேன் . முடிஞ்சா கண்டு பிடிங்க ” என்றார் .
” நான் இந்தப் படம் முழுக்க அவ்வளவு அழகாக இருப்பதாக சரண்யா மேடம் சொன்னாங்க . என்னை அவ்வளவு அழகா காட்டிய ஒளிப்பதிவாளர் வெங்கடேஷுக்கு நன்றி” என்றார் சிருஷ்டி டாங்கே
யுவன் சங்கர் ராஜா தனது பேச்சில்
” பிரேம்ஜி அமரன் நல்ல இசை கொடுப்பதில் ஆச்சர்யம் இல்லை . ஏன் என்றால் இசை எங்கள் குடும்பத்தில் எல்லாருடைய ரத்தத்திலும் இருக்கிறது .
பிரேம்ஜி நடிப்பதை குறைத்துக் கொண்டு நிறைய இசை அமைக்க வேண்டும் ” என்றார் .
நன்றிகூறிப் பேசிய தயாரிப்பாளர் வினோத்குமார்
” கல்வி மற்றும் பள்ளிகளின் தரம் பற்றியதொரு முக்கியமான விசயத்தை இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறோம் .
அது எல்லோருக்கும் தேவையான ஒன்று . இது மாணவர்கள் பெற்றோர்கள் எல்லோரும் பார்க்க வேண்டிய படம் ” என்றார் .