2000 ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியான திருநெல்வேலி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர், நடிகர் உதயா. தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் மகன் .
அதன் பிறகுதான் உதயாவின் தம்பி ஏ எல் விஜய் இயக்குனர் ஆனார் . ஸ்டார் இயக்குனராகவும் ஆனார். நடிகை அமலா பால் விஜய்க்கு மனைவியானார். உதயாவைப் பின்பற்றி அவரது அப்பா அழகப்பனே நடிகர் ஆனார் . உதயாவின் சகோதரி மகனான சிறுவன் நடிகர் ஆனார் . உதயாவின் மனைவி பாடகர் ஆனார் . இப்படி, அந்தக் குடும்பமே முழுக்க கலைக்குடும்பம் ஆகி விட்டது .
ஆனால் இந்தப் பதினைந்து வருடங்களில் உதயா நடித்த மொத்தப் படங்களின் எண்ணிக்கை பதினேழு பதினெட்டுதான். இதில் வெளிவந்த படங்கள் ஒன்பது மட்டுமே . சுமார் எட்டுப் படங்களுக்கு மேல் வெளியாகவில்லை வெளியாகாத படங்கள் எல்லாம் ஏதோ பூஜை மட்டும் போட்டோ, அல்லது சில நாட்கள் மட்டும் ஷூட்டிங் போனதோடோ நின்று விடவில்லை.
திரையிடத் தயாராக பொட்டி ரெடியாகி, இதோ இன்னும் சில நாட்களில் ரிலீஸ் என்ற ஸ்டேஜ் வரை வந்து , அப்புறம் வராமல் போய் , வராமலேயே போன படங்கள் சில. எண்பது சதவீதம் தொண்ணூறு சதவீதம் படப்பிடிப்பு முடிந்த பிறகு நின்று போன படங்கள் சில.
தனுஷ் மற்றும் செல்வராகவனின் தந்தையான, இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் இவர் நடித்த காதல் ஜாதி முழுக்க முடிந்தும் வெளிவராத படம். இளையராஜா இசையில் அருமையான பாடல்களோடு உருவான அந்தப் படம், அப்போது ஆடியோ விற்பனையில் சக்கைப் போடு போட்டது.
விண்ணைத்தாண்டி வருவாயா என்பது இவர் நடித்த படத்தின் பெயர்தான். அது தாமதம் ஆனதால் கவுதம் மேனன் அந்தப் பெயரில் சிம்பு திரிஷாவை வைத்து அதே பெயரில் படம் எடுத்து அசத்தி விட்டார் . வி டி வி கணேஷ் (விண்ணைத் தாண்டி வருவாயா கணேஷ் ) என்ற பெயரில் ஒரு தயாரிப்பாளர் கம் நடிகரே உருவாகி ‘இங்கே என்ன சொல்து?’ என்கிறார் . (உதயாவின் மனசு என்னென்ன சொல்லும் ?)
ராம்கோபால் வர்மாவின் இணை இயக்குனர் இயக்கத்தில், இவர் நடிக்க ஆரம்பித்த கோட்சே படம் அப்போது பெரிதாக பேசப்பட்டது . ஆனால் படம் எடுத்து முடிக்கப் படவில்லை.
இந்த விசயங்களை எல்லாம் இப்போது பெரிதாக சலனமே இல்லாமல் சகஜமாகக் குறிப்பிடும் உதயாவிடம் “இதற்கெல்லாம் காரணம் என்ன என்று சுய பரிசோதனை செய்து பார்த்தீர்களா ?” என்று கேட்டேன் .
” நான் சரியாக இருந்ததாகவே பட்டது. ஆனால் அப்புறம் யோசித்துப் பார்த்தேன். நிறுவனங்கள் பற்றி யோசிக்காமல் கதையில் மட்டுமே குறிக்கோளாக இருந்திருக்கிறேன். கதை முக்கியம்தான் . அதே நேர்ரம் நிறுவனங்களும் முக்கியம். என் அப்பா தயாரிப்பாளர் என்பதால் என்னை வைத்து படம் ஆரம்பித்தால் என் அப்பா பணம் போட்டு படத்தை முடித்து வைப்பார் என்று அவர்கள் நம்பி இருக்கலாம்.
ஆனால் நான் நடிகன் என்பதில் மட்டுமே உறுதியாக இருந்தேன் . அதனால் சில படங்கள் நின்று போயிருக்கக் கூடும். இதெல்லாம் காரணங்கள் .
நான் ஒன்றும் பெரிய நடிகனாக இன்னும் ஆகவில்லை. ஆனால் கொடுத்த வேலையை சிறப்பாக செய்யணும். அதற்குரிய சம்பளம் பெற வேண்டும் என்று இருந்தேன். அதனால்தான் இந்த பின்னடைவுகள். நான் நடிகனாக ஆன இந்த பதினைந்து வருடத்தில் பல அனுபவங்களை சந்தித்து விட்டேன் .
நேரம் , உழைப்பு , திறமை எல்லாவற்றையும் கொட்டி நாம் உருவாக்கிய படம் ரிலீசுக்கு தயராக வந்த பிறகும் வெளிவராமல் போவதில் ஏற்படும் வலி சாதாரணமானது அல்ல. ரொம்ப கொடுமையானது. இப்போது பல விசயங்களிலும் தெளிவாகி விட்டேன் ” என்கிறார் .
“நீங்கள் ஹீரோவாக அறிமுகம் ஆன , திருநெல்வேலி படத்தில்தான் விவேக் முதன் முதலில் சமூக அக்கறைக் கருத்துகளை நகைச்சுவையில் கலக்க ஆரம்பித்தார் . அந்தப் படம் விவேக்குக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. அதன் பிறகு அவர், நீங்கள் நடிக்கும் படத்தில் நடித்து உதவ வந்தாரா?”
– என்று ஒரு பத்திரிகை சகா, கேட்டு முடிப்பதற்குள் பதில் சொல்ல ஆரம்பித்த உதயா ,
“நடிச்சார் சார் . நடிச்சுக் கொடுத்தார் .என் மேல நிறைய அன்பும் அக்கறையும் கொண்டவர் அவர். நான் சம்மந்தப்பட்ட எந்த நிகழ்வுக்கும் அழைப்பைப் பற்றிக் கூட கவலைப் படாமல் அவரா வந்து வாழ்த்திட்டுப் போவார் . வரும் வெள்ளிக் கிழமை வெளியாகும் ஆவி குமார் படத்தின் ஆடியோ விழா அண்மையில் நடந்த போது, அதற்கு வந்து மனதார வாழ்த்தி விட்டுப் போனார் ” என்றார் .
“ஆவி குமார் என்ன மாதிரியான படம் ?”
ஆவிகளுடன் பேசும் ஆவி அமுதா என்ற பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள் அல்லவா ? பெண்ணுக்கு பதில் ஒரு ஆண் இருந்தால் எப்படி இருக்கும் . அந்தக் கேரக்டரில் ஆவி குமார் ஆக, நான் நடித்து இருக்கிறேன். படத்தின் எண்பது சதவீதம் மலேசியாவில் எடுக்கப்பட்டு உள்ளது.
ஆவிகளுடம் பேசும் ஓர் இளைஞன் கல்யாணத்துக்குப் பிறகு அந்தத் தொழிலை விட்டு விட முடிவு செய்கிறான் . கடைசியாக ஓர் ஆவியிடம் பேச மலேசியா போகிறான் . அங்கே அவனுக்கு என்ன நடந்தது என்பதுதான் படம்.
ரகளையான காமெடி, காதல் மற்றும் திகில் படம். நான் நடித்த படங்களிலேயே பெரிய பட்ஜெட் படம் இதுதான். படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனருக்கு இந்த நேரத்தில் என் மனப்பூர்வமான நன்றிகளை சொல்லிக் கொள்கிறேன்.
அடுத்து உத்தரவு மகராஜா என்ற ஒரு வித்தியாசமான கதை அம்சம் கொண்ட ஒரு படத்தில் நடிக்கிறேன். அதை அடுத்து இரண்டு படங்கள் பேசிக் கொண்டு இருக்கிறேன் .
இனி இடைவெளி இருக்காது . வருடம் ரெண்டு படங்கள் வெளிவரும் . ஸ்டெடியாக இருப்பதற்கு ரெடியாகி விட்டேன் ” என்கிறார், உற்சாக ஊற்றாக உதயா .
வாழ்த்துகள் புரோ.