
சில்வர் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் சிவ ரமேஷ்குமார் தயாரிக்க , தம்பி ராமையாவின் மகன் உமாபதி நாயகனாக அறிமுகமாக,
ரேஷ்மா ரத்தோர், கருணாகரன், ஆர். பாண்டிய ராஜன், மனோபாலா, ஆடுகளம் நரேன், ஆகியோர் நடிக்க ,
ஆர். இன்பசேகர் இயக்கி இருக்கும் படம் அதாகப் பட்டது மகாஜனங்களே . ”அதனால் மகாபடமே ..”என்று ஜனங்கள் பாராட்டும்படி இருக்கிறதா ? பார்க்கலாம்.
கிடார் கலைஞரான தாத்தா, தபேலா கலைஞரான அப்பா (பாண்டியராஜன்) குடும்பத்தில் பிறந்து கிடார் கலைஞனாக வாழும் நாயகன் (அறிமுகம் உமாபதி) ,
தனது நண்பன் ஒருவனுக்கு செய்யும் உதவியாக ஒரு பங்களாவில் மூன்று மணி நேரம் வாட்ச் மேன் வேலை செய்கிறான் .
அப்போது பங்களா உள்ளே நுழையும் ஒரு கும்பல் , பணம் நகை எதையும் களவாடாமல் எதோ ஒரு முக்கிய பொருளை தேடி விட்டுப் போயிருக்கிறது .
நாயகனின் பெயர் முகவரி தொலை பேசி எண் எல்லாம் பொறிக்கப்பட்ட கிடாரும் காணாமல் காணாமல்போகிறது .
போலீஸ் விசாரணையில் ஆள் மாறாட்டம் தெரியாமல் போனாலும் , தொலைந்து போன கிடார் மூலம் தன் மீது போலீஸ் சந்தேகப்படுமோ என்பது நாயகனின் பயம் .
எந்த பலமும் இல்லாமல் வெட்டி பந்தா மூலமே தாதாவாக காட்டிக் கொள்ளும் நண்பனின் (கருணாகரன்) உதவியை நாடுகிறான் நாயகன் .
பங்களா உரிமையாளரான தொழில் அதிபர் (ஆடுகளம் நரேன்) , தனது தொழில் பங்குதாரர்கள், வீட்டில் உள்ள ஒரு முக்கியப் பொருளை திருட,
ஆள் அனுப்பி இருப்பார்களோ என்று சந்தேகப்பட்டு , உண்மையைக் கண்டு பிடிக்க துப்பறியும் நிறுவனம் ஒன்றின் உதவியை நாடுகிறார் .
அந்த துப்பறியும்ஆ ளுக்குப் பதில் வீட்டுக்குள் போக முடிவு செய்கிறான் நாயகன் .
தொழில் அதிபரின் அப்பாவுக்கு புல்லாங்குழல் கற்றுத் தரும் ஆசிரியராக உள்ளே போகிறான் . அங்கே போனால் முன்பே அவன் பார்த்து ரசித்த இளம்பெண் ஒருத்திதான் (ரேஷ்மா) ,
தொழில் அதிபரின் மகள் என்பது தெரிகிறது . காதலும் வருகிறது .
தொழில் அதிபர் வீட்டில் திருடப்பட இருந்தது எது? திருட அனுப்பியது யார் ? நாயகனின் கிட்டார் எங்கே ? அவன் போலீசில் சிக்கினானா ? காதல் என்ன ஆச்சு என்பதே இந்த அதாகப் பட்டது மகா ஜனங்களே !
மிக எளிய கதை, கொஞ்சம் செண்டிமெண்ட் , கொஞ்சம் காமெடி , கொஞ்சம் ஜுஜுபி , கொஞ்சம் உல்லல்லாயி என்று முயன்று இருக்கிறார் இயக்குனர் . பெரிதாக சேதாரம் இல்லை .
நண்பனை நாயகன் நிஜமாகவே பெரிய ரவுடி என்று நம்ப, அதை தக்க வைக்க நண்பன் பல ரவுடிகளிடம் வாங்கும் அடிகளும் செய்யும் ஐடியாக்காளும் சொல்லும் சமாதானங்களும் சிரிக்க வைக்கிறது .
அந்த சூழலுக்கு இமான் போட்டு இருக்கும் பின்னணி இசையும் காமெடி .
ஒரு நிலையில் அது ஓவர் டோஸ் போல தோன்றினாலும் மீண்டும் நாம் அதற்கு செட் ஆகி சிரிக்க ஆரம்பிக்கிறோம் . குட் !
பாடல்கள் நன்றாக இருக்கிறது . எனினும் அடிப்படைக் கதையில் பாடல்களுக்கு இடம் இல்லாத நிலையில் அசந்தரப்பமாக வருவதால் வீரியம் குறைவதையும் சொல்ல வேண்டும்
வாவ் உமாபதி !
மிக அட்டகாசமான் நடனம் ஆடி வசீகரிக்கிறார் . ஒவ்வொரு ஸ்டெப்பையும் சிறிதும் இழப்பின்றி முழுவதுமாக அழகாக ரசனையாக அவர் ஆடும் விதம் அபாரம் .
பாடல் காட்சிகளை ரசிக்க இவரது நடனமும் ஒரு முக்கியக் கரணம் . உயரம் இரண்டும் பிளஸ் .
பேசும் முறையில் பயிற்சி வேண்டும் . நடிப்பிலும் இன்னும் முயற்சி வேண்டும் . போகப் போக வரும் . எனவே உமாபதிக்கு கொடுப்போம் ஒரு சிவப்புக் கம்பள வரவேற்பு !
ரேஷ்மா ரத்தோர் வெகு இயல்பான பெண் தோற்றத்தில் ஜஸ்ட் லைக் தட் நடிக்கிறார் . கிளைமாக்சில் முக்கியத்துவம் கொடுத்து அந்த கேடக்டரின் அவசியத்தை காப்பாற்றுகிறார் இயக்குனர் .
ஆடுகளம் நரேன் வழக்கம் போல நல்ல நடிப்பு .
அதே நேரம் வெகு ஜனத்தை ஈர்த்து மயக்கும் வண்ணம் எந்த முயற்சியும் இல்லாமல் நகர்ந்து கொண்டே போகிறது படம் .
கதை கூட ஒகே தான். ஆனால் இன்னும் நேர்த்தியான அடர்த்தியான — சம்பவங்கள் நிறைந்த திரைக்கதை தேவைப்படுகிறது .
அதனால் அதாகப் பட்டது மகாஜனங்களே … அதுதான் ஜனங்களே !