ஆத்யன் @ விமர்சனம்

adhyan 5

டி.ரஞ்சித் குமார் தயாரிப்பில் புதுமுகம் அபிமன்யூ நல்லமுத்து மற்றும் சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடிக்க, கதை திரைக்கதை வசனம் எழுதி ராம் மனோஜ்குமார் இயக்கி இருக்கும் படம் ஆத்யன் . 

ஆத்யன் என்றால் அனைத்தும் அறிந்தவன் என்று பொருள் . இந்த ஆத்யன் அறிந்திருப்பது என்ன ? பார்க்கலாம் . 
தமிழ் நாட்டில் கோயம்புத்தூர் பகுதியில் இருந்து ஜப்பானுக்குப் போய் செட்டில் ஆன குடும்பத்தில் பிறந்த தமிழ் இளைஞன் ஆத்யன் (அபிமன்யூ நல்லமுத்து ) . தமிழை நேசிக்கும் அவன் , ஓர் தமிழ்நாட்டுப் பெண்ணையே மனைவியாக அடையும் லட்சியத்தில் இருப்பவன் . அவனுக்கு முக நூல் மூலம் சென்னைப் பெண் அனாமிகாவின் (சாக்ஷி அகர்வால்) அறிமுகம் கிடைக்கிறது . அறிமுகம் நட்பாகி,  நட்பு காதலாகிறது . 
adhyan 9999
காதலியைப் பார்க்க சென்னை வருகிறான் ஆத்யன் . சென்னையில் இறங்கிய அவன் சட்டென்று சட்டென்று தூங்கி ஆழ்ந்த உறக்கத்துக்குப் போகிறான். அனாமிகாவை சந்திப்பதற்கு முன்பு அவனுக்கு ஒரு கால் டாக்சி டிரைவரின் அறிமுகம் கிடைக்கிறது .
அந்த டிரைவரிடம் தான் காதலியைத் தேடி வந்திருப்பதை சொல்கிறான் ஆத்யன் . கால் டாக்சியிலும் சட்டென்று தூங்கி விடுகிறான் .  தான் தங்கும் வீட்டிலும்  சட் சட்டென்று தூங்கி விடுகிறான் அவன் .
 அனாமிகாவைத்  தொடர்பு கொண்டு பேசி , அவளை சந்திக்க திட்டமிட்ட நிலையில் கூட,  ஆத்யன் எதிர்பாராதவிதமாக தூங்கி விட , அவளை சந்திக்க முடியாமல் போகிறது .
adhyan 999
அதனால் ஆத்யனின் காதல் பொய் என்று எண்ணிக் கொண்டு,  போய் விடுகிறாள் அனாமிகா. 
ஆத்யனுக்கு அறிமுகமான அந்த கால் டாக்சி டிரைவர்,  ஒரு பிரபல ரவுடி, அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் மூவரும் பால்யகால நண்பர்கள். ஒரு முக்கிய வழக்கில் வசமாக சிக்கிக் கொண்ட அந்த ரவுடியைக் காப்பாற்ற யாரவது ஒரு அப்பாவியைக் குற்றவாளியாக்க முடிவு செய்து, ஆள்  தேடி அலைகிறான் இன்ஸ்பெக்டர் .
அந்த இன்ஸ்பெக்டரிடம் ஆத்யன் பற்றிய எல்லா விவரங்களையும் சொல்லும் கால் டாக்சி டிரைவர், ஆத்யனைக் குற்றவாளியாக்கி ஜெயிலுக்கு அனுப்பி விட்டால் , ரவுடி நண்பனைக் காப்பாற்றலாம் என்று சொல்கிறான் . 
adhyan 9
அதன் படியே ஆத்யனை கடத்தும் இன்ஸ்பெக்டர் , ஆத்யன் அடிக்கடி தூங்குவதைப் பார்த்துக் குழம்பிப் போய் டாக்டர் ஒருவரிடம் ஆலோசனை கேட்கிறார் .  
ஜப்பானில் இருந்து நீண்ட நேரம் விமானத்தில் வந்ததால்,  இரவு பகல் மாற்றத்தின் இயல்பில்,  ஆத்யனுக்கு  ஏற்படும் வேறுபாடு காரணமாக,  ‘ஜெட் லாக்’ என்னும் பிரச்னைக்கு அவன் ஆளாகி இருக்கிறான் என்பதை சொல்கிறார் டாக்டர். ,  நல்ல இருட்டு அல்லது முழு வெளிச்சத்தில்  தொடர்ந்து அவன் தூங்கினால் விரைவில் சரியாகி விடும் என்றும் சொல்கிறார் . 
அதன்படி ஆத்யனை இன்ஸ்பெக்டர் தனது தனி இடத்தில் கட்டிப் போட்டு நன்றாகத்    தூங்க விட, தூங்கி எழுந்த ஆத்யன்  அடியாட்களை அடித்துப் போட்டுவிட்டுத்  தப்பிக்கிறான்  . 
adhyan 8
ஆத்யனின் போனை முன்பே பறித்து வைத்திருந்த இன்ஸ்பெக்டர்,  அதன் மூலம் முக நூல் வழியே அனாமிகாவை தொடர்பு கொண்டு,  அவளை ஒரு இடத்துக்கு வரச் சொல்லி…. அவளைக் கடத்தி வைத்து விட்டு,  அதை வைத்து ஆத்யனை தன்வசம்  வர வைக்கத்  திட்டமிடுகிறார். .  . 
அதன்படியே , முக நூல் மூலம் ஆத்யன் போல இன்ஸ்பெக்டர் அனுப்பும் செய்திகளை நம்பி,  இன்ஸ்பெக்டர் சொல்லும் இடத்துக்கு அனாமிகா வர…..
அப்புறம் என்ன நடந்தது என்பதே , இந்த ஆத்யன். 
adhyan 6
கதாநாயகனாக நடித்து இருக்கும் அபிமன்யூ நல்லமுத்து,  ஓர் இளம் ஆக்ஷன் ஹீரோவுக்கு தேவையான தகுதிகளோடு இருக்கிறார்.  கிளைமாக்சில் அபாரமாக சண்டை போடுகிறார் . இன்னும் நடிப்பும் சிறப்பாக வந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கும் திறனும் இருந்தால் சினிமாவில் ஜொலிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு . 
சாக்ஷி அகர்வால் ஒகே . அவரது இரண்டு சண்டைக்கோழித் தோழிகளின்  கதாபாத்திரங்களை இன்னும் சிறப்பாக கையாண்டு இருக்கலாம் என்றாலும் அந்த கேரக்டரைசேஷன்கள்  கவனிக்க வைக்கிறது . 
adhyan 3
நிறுத்தி நிதானமாக ஷாட்கள் எடுத்து இருக்கிறார் இயக்குனர் .  சில திருப்பங்களை முதலில் சொல்லி விட்டு , பிறகு நடந்தது என்ன என்பதை பிளாஷ்கட்டில் சொல்லும் உத்தி புதுசு இல்லை என்றாலும் பாராட்டுக்குள்ளாகிறது. 
எம் .ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவும் பாராட்டுக்குரியது. 
ஜெட்லாக் என்பது எல்லோரும் அறிந்த ஓர் விஷயம் இல்லை . நம் நாட்டுக்குள் விமானத்தில் பயணம் செய்பவர்கள்…. சொல்லப் போனால் சில பக்கத்து நாடுகளுக்கு பயணம் செய்கிறவர்கள் கூட ஜெட்லாக் பிரச்னைக்கு ஆளாக மாட்டார்கள் .
adhyan 2
அவர்களுக்கு எல்லாம் கூட ஜெட்லாக்குக்கு ஆளாகிறவர்கள் சட் சட்டென்று தூங்கி விடுவார்கள் என்பதுகூடத்  தெரியாது .
அமெரிக்க போன்ற வெகுதூர நாடுகளில் இருந்து நீண்ட நேரம் பயணித்து வருபவர்கள் மட்டும்  ஜெட்லாக் பிரச்னைக்கு ஆளாவார்கள். அவர்களுக்கு மட்டுமே இந்த திடீர் தூக்க சிக்கல் வரும் 
எனவே ஜெட்லாக் என்பது பற்றி படத்தின் ஆரம்பத்திலேயே விஷுவலாக விளக்கி விட்டு,  அப்புறம் கதைக்குள் போயிருந்தால் ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் கூடி இருக்கும் . ( இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் தனது ஜெட்லாக் அனுபவத்தை சொன்னாரே… அதை படத்தின் ஆரம்பத்தில் சேர்த்து இருந்தால் கூட ரசிகன் கிளியராகி இன்னும் ஆர்வமாக படத்தை எதிர்கொண்டு இருப்பான்).
adhyan 1
அது இல்லாததால் படத்தின் ஒரு பகுதிவரை ,  ‘ஆத்யன் ஏதோ பிரைன் டியூமர் நோயாளி போலிருக்கிறது ….! ‘  என்ற உணர்வே,  வெகு ஜன ரசிகனுக்கு எழுகிறது.  
ஜெட்லாக் பற்றி டாக்டர் சொல்லும் காட்சியில் கூட அதை ஜஸ்ட் லைக் தட் ஒரு வார்த்தையில் சொல்கிறார். அதற்குப்  பதில் எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் புரியும்படி,  அதை அழுத்தமாகச்  சொல்லி இருக்கலாம் . 
அதே போல….
adhyan 99
இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப் படாத ஜெட்லாக் என்ற விஷயம் இந்தப் படத்தில் ஒரு சப்ஸ்டிடியூட் ஆகத்தான் வருகிறது . அதனால் மெயின் கதைக்கு எந்த உத்வேகமும் கிடைக்கவில்லை . அதைத் தவிர்த்து ஜெட்லாக் என்ற இன்டரஸ்டிங் மேட்டருக்கு ஏற்றபடி காட்சிகளையும் ஃபிரஷ்ஷாக புதுமையாக வைத்து இருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் . 
மொத்தத்தில் ஆத்யன்… அபிமன்யு நல்லமுத்துக்கு நல்வரவு. 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →