மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரேம்குமார் , பிரபா பிரேம்குமார் தயாரிக்க, எஸ் பிக்சர்ஸ் வெளியீட்டில் ஜி வி பிரகாஷ் குமார், கவுரி கிஷன், வெங்கட் பிரபு, ஆர் ஜே விஜய் நடிப்பில் ,
கோகுல் பினாய் ஒளிப்பதிவில், ஜஸ்டின் பிரபாகரன் இசையில் முத்தையன் படத் தொகுப்பில், கிஷோர் சங்கரோடு சேர்ந்து எழுதி விக்னேஷ் கார்த்திக் இயக்கி இருக்கும் படம் .
வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்து கொள்ளப் போகும் ஓர் இளைஞன் ( பிரகாஷ் குமார்) எதிர்பாராத விதமாகப் பார்க்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில்,
சிறுவயதில் அவன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் தன்னம்பிகையூட்டிய ஒரு பள்ளித் தோழி ( கவுரி கிஷன்), புகழ் பெற்ற பாடகியான நிலையில் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறாள்.
அந்தப் பேட்டியில் அவளுக்கும் அவனுக்கும் மட்டுமே தெரிந்த ஒரு பழைய நடந்த சம்பவத்தைக்குறிப்பிட்டு நெகிழ்கிறாள் . முகம் தெரியாத அந்தப் பையன்தான் என் உள்ளம் கவர்ந்தவன் (CRUSH) என்கிறாள். சிலிர்த்துப் போய் அவளைச் சந்திக்க முயல , தவிர்க்கவே முடியாத காரணங்களால் அது தள்ளிப் போகிறது
கஷ்டப்பட்டு அவளை நெருங்கும் நிலையில் அவள் கனடா பறந்து போகிறாள். அவன் மனம் நொறுங்கி நைந்து போன நிலையில் ஒரு விபத்தில் சிக்க,
சட்டென்று கண் விழித்தால் வேறொரு இடம்.
அங்கே அவன் பெரும் பணக்காரனாக புகழ் பெற்ற இசையமைப்பாளராக இருக்க, தவற விட்ட தேவதையே மனைவியாகவும் பிரபல பாடகியாகவும் இருக்கிறாள் . வெங்கட் பிரபு கவுதம் மேனன் என்ற பெயரில் இருக்கிறார் . பயில்வான் ரங்கநாதன் புகழ் பெற்ற இசையமைப்பாளராக இருக்கிறார்.
மணி ரத்னம் கால்பந்துப் பயிற்சியாளராக இருக்கிறார் . விஜயகாந்த் பிரதமராக இருக்கிறார் . இங்கே கைவிடப்பட்ட விஜய்யின் ரோகன் அத்தியாயம் ஒன்று படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது ( புரியுதா? இல்லன்னா இன்னொரு தடவை படிக்கவும் . வேற வழி இல்லை)
அவனது அதிர்ச்சியையும் குழப்பத்தையும் மனைவி புரிந்து கொள்ள முடியாமல் தவிக்க , ஒரு நிலையில் மீண்டும் இங்கே , அதாவது விபத்தில் அடிபட்டானே.. இந்த சூழலுக்கு வருகிறான் .
கோமாவில் இருந்து எழுந்து இருப்பதை உணர்ந்து வெளியே வந்தால் , சக நண்பன் ஒருவன் இங்கே பாடகியாக இருப்பவளிடம் ,’ நான் தான் சிறு வயதில் உனக்கு தன்னம்பிகையூட்டி நீ பிரபல பாடகி ஆகக் காரணம்’ என்று பொய்யாக நம்ப வைத்து,அவளைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் சூழல் .
ஒரு நிலையில் மீண்டும் அங்கே அவன் போக… , அப்புறம் இங்கே வர … அப்புறம்அப்புறம் அங்கே இங்கே போகவர, நடந்தது என்ன என்பதே படம்
இதுவரை நீங்கள் படித்ததில்..
‘இங்கே’ என்பது நாம் வாழும் இந்த உலகம்/ பிரபஞ்சம் . அங்கே என்பது இணை உலகம் / பிரபஞ்சம் (PARELLEL WORLD/ UNIVERSE ) . இங்கே நடக்கும் சம்பவங்கள் உண்மை . அங்கே நடக்கும் சம்பவங்கள் என்பது ,மாற்று உண்மை (ALTERNATE REALITY) .
இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் என்னவென்றால் … வேண்டாம், எல்லோரும் தாங்க மாட்டார்!
பொதுவாக ஹாலிவுட் படங்களில் ஆக்ஷன் படங்களில் வரும் இந்த விஷயத்தை காதல் கதைக்குப் பயன்படுத்தி அட என்று ஆச்சர்யப்பட வைக்கிறார்(கள்) இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்(மற்றும் கிஷோர் சங்கர் )
இப்படியாக தமிழ் சினிமாவில் அரைச்ச மாவையே அரைக்கும் நபர்கள் முகத்தில் அரைகிலோ நெருப்பை அள்ளிக் கொட்டிவிட்டு , துவைச்ச துணியையே துவைப்போர் முதுகில் துவரை மிளாறு கொண்டு அடித்திருக்கிறது இருக்கிறது இந்தப் படக் குழு.
இப்படி ஒரு கதையைத் தயாரிக்க முன் வந்த மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் பிரேம்குமார் , பிரபா பிரேம்குமார் ஆகியோருக்கு குஷ்பூவுக்கு கட்டிய கோயிலை விட பெரிய அளவில் கோலாகலமாக ஒரு கோவில் கட்டலாம் .
வித்தியாசமான இந்தக் கதையை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார் பிரகாஷ் குமார் . எளிய பாடகியாக , இணை உலக ரம்மியப் பொண்டாட்டியாக ஜொலிக்கிறார் கவுரி . கவனிக்க வைக்கிறார் ஆர் ஜே விஜய்
மாற்று உலகத்தில் வரும் தலைகீழ் வெங்கட் பிரபு, பயில்வான் ரங்க நாதன், பிரதமர் கேப்டன் ,வாய் பேச முடியாத கூல் சுரேஷ் இப்படி சில விஷயங்கள் கலகல லக லக .
கோகுல் பினாயின் ஒளிப்பதிவு இரண்டு உலகங்களையும் வண்ணம் மற்றும் இருள் ஒளிப் பயன்பாட்டால் வித்தியாசமாகக் காட்டி அசத்துகிறது .
மாற்று உலகத்துக்கான ஜஸ்டின் பிரபாகரனின் பாடல்கள் இசை , பின்னணி இசை யாவும் சிறப்பு
ஒரு காலத்தில் பெரும்பாலான , காதல் புதுக் கவிதைகளின் முதல் வரியாக இருந்து , பின் கிண்டல் செய்யப்பட்டுக் காணமல் போன , அடியே என்ற வார்த்தையை, அந்த ஒற்றை வார்த்தையை மட்டும் ஓர் உன்னத கவிதையாக்கி… அதையே படத்துக்குப் பெயராக வைத்து, மானசீகமாகக் கை குலுக்க வைக்கிறார் இயக்குனர் .
இந்த.. நமது உலகத்தில் நாயகனின் , நாயகியை மிஸ் செய்து விபத்தில் சிக்குவது வரையிலான காட்சிகளும் அவை படமாக்கப்பட்ட விதமும் மனதுக்குள் ஏற்படுத்திய கனம் அபாரம்
அடுத்து இணை உலகம் / பிரபஞ்சத்துக்குப் போய் மாற்று உண்மையில் வரும் ஆரம்பக் காட்சிகள் ஏற்படுத்தும் கிளர்ச்சிகளும் சுவையும் அற்புதம் . இங்கே செத்துப் போன நாயகனின் பெற்றோர் அங்கே உயிரோடு இருப்பதும் அவர்கள் தங்கள் லட்சியத்தில் வெற்றி பெற்றும் இருக்கும் காட்சி சிகரம். பெற்றோரை இழந்தவர்கள் உருகிப் போவார்கள்.
ஆனால் திரைக்கதை எழுதும்போது யார் கண் பட்டதோ தெரியவில்லை, இதற்குப் பிறகு சடார் என முதல் அடி வாங்குகிறது அடியே .
அங்கே நாயகனுக்கு எதுவுமே தெரியவில்லை என்பதும் அதனால் வரும் குழப்பங்களும் ஒரு நிலையில் சுவாரஸ்யத்தைக் குறைக்கின்றன . இந்தத் திரைக்கதை போக வேண்டிய பாதை இது இல்லையே என்று படபடக்கிறது மனசு.
அதன் பிறகு நாயகன் இங்கு வந்த நிலையில் நண்பனின் துரோகம் வெளிப்படும் அந்த இடைவேளைத் திருப்பம் அட என்று ஆச்சர்யப்பட வைக்கிறது. படம் மயிரிழையில் சேதாரம் இன்றி தப்பித்தது என்று சந்தோஷமாக நிமிர்ந்து உட்கார்ந்தால் இடைவேளைக்குப் பின் ஏகப்பட்ட தடுமாற்றங்கள் குழப்பங்கள் .
இந்தப் படத்துக்கு என்று எழுதப்பட்ட இடைவேளைக்கு அப்புறமான திரைக்கதை தொலைந்தும் மறந்தும் விட்ட நிலையில், அவசர கோலத்தில் எதையோ எழுதி எடுக்க,
போடுவதாகச சொன்ன பிரியாணிக்குப் பதில் , அதிமுக மாநாட்டில் வீணாமல் போன சோற்றை குவித்து அள்ளிக் கட்டி வந்து கொட்டி விட்ட கதையாகிறது படம்.
இரண்டு உலகங்களிலும் நாயகி ஒரே பெயரிலும் பாடகியாகவும் இருப்பதைக் கூட நாயகனின் ஆழ் மனதில் அவளுக்கு இருக்கும் உயரிய இடத்தின் விளைவு என்று எடுத்துக் கொள்ளலாம் . ஆனால் மற்ற எல்லா நபர்களும் இங்கும் அங்கும் வேறு வேறு நபராக இருக்கும் போது நாயகன் மட்டும் ஒரே ஆள் என்று கதை பண்ணி இருப்பது முக்கியச் சிக்கல் .
‘இல்லை இல்லை . அது தனிப்பட்ட வகையில் அது நாயகனின் மாற்று உண்மை உலகம் என்பதால் அவன் ஒற்றை ஆள் என்பதுதான் சரி’ என்றால்… , அப்போ அவனுக்கு மாற்று உலகில் எதுவுமே தெரியவில்லை என்பது தேவை இல்லாத ஆணி .
”கிடையாது கிடையாது ..அது தேவையான ஆணிதான்” என்றால் , அங்கே பயில்வான் ரங்கநாதன் இசை அமைப்பாளராக இருப்பதும் விஜயகாந்த் பிரதமர் ஆக இருப்பதும் அவனது தனிப்பட்ட மாற்று உண்மை உலகில் எப்படி நிகழும்?
எனில் இப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான கதை கொண்ட படத்தில் அவை எல்லாம் சும்மா வெட்டி சுவாரஸ்யம் என்பது எந்த வகையில் ஏற்றுக் கொள்ள முடியும்? அபத்தம்
அது மட்டுமின்றி ஒரு நிலையில் சரியான காட்சிகள் இல்லாத நிலையில் இது போன்ற தலைகீழ் விசயங்களை அடுக்கிக் கொண்டே போய் அந்த உத்தியையே போரடிக்க வைத்து விட்டார்கள்.
(அதுவும் ‘தமிழ்த் திணிப்பை எதிர்த்து இந்தியாவெங்கும் போராட்டம்’ என்று எல்லாம் படத்தில் சொல்வது வயித்தெரிச்சல் . சம்மந்தப்பட்ட படைப்பாளிகளின் அறிவுசார் மமதை (INTELLECTUAL ARROGANCE ) கூட.! அகன்ற திரை முழுக்க வரும் அடிக்கடி வரும் அந்தத் தன்னம்பிக்கைக் கடிதத்தில் கூட என்ற வார்த்தைக்குப் பதில் ‘குட’ என்று தப்பாக எழுதியும் இருக்கிறார்கள் )
ஒரு நிலையில் தேவையே இல்லாமல்அங்கும் இங்கும் போய் வரும் மணிக் கணக்கு எல்லாம் சொல்லும்போது, எதாவது கணக்கு அல்லது இயற்பியல் வகுப்புக்கு வந்துட்டமோ என்று பீதியில் உறைந்து போய் விடுகிறார்கள் ரசிகர்கள் .
ஒரு படத்தின் கதை எளிமையாக இருந்தால் காட்சிகள் புதுமையாக இருக்க வேண்டும் . கதையே புதுமையாக சுவாரஸ்யமாக இருந்தால் காட்சிகள் எளிமையாகவும் ஈர்ப்பாகவும் இருக்க வேண்டும் .
இந்த புதுமையான அறிவியல் கற்பனைக் கதையில் மேற்கொண்டு கால எந்திரம் விசயங்களை எல்லாம் , ‘அது மாறினா இது மாறும்’ என்று கவுதம் மேனனாக இருக்கும் வெங்கட் பிரபு சொல்வதும் அது தொடர்பான காட்சிகளும் எல்லாம் தேவையற்ற சுமை . சந்திரயான் – 3விஞ்ஞானிகள் பார்த்தால் அவர்களுக்கே கூட தலை சுற்றலாம்.
ஒரு நிலையில் நினைத்த உடன் நாயகன் அந்த உலகத்துக்கும் இந்த உலகத்துக்கும் போய் போய் திரும்புவது கூட நல்ல விஷயம்தான் . ஆனால் போய் என்ன செய்கிறார் என்பதில்தான் ஏகபோக ஏமாற்றம் .
சிகிச்சை, ஆராய்ச்சி என்று எல்லாம் சீப்பு இல்லாமல் தலை சீவியதற்குப் பதில் நிஜமாகவே அவன் மாற்று உண்மை உலகத்துக்குப் போனான் என்று சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் . காட்சி அனுபவம் உயரிய தளத்திலேயே இருந்திருக்கும் . இப்போது என்னடாவென்றால் , மல்லிகைப் பூ கேட்டால் மல்லிகைப் பூ என்று காகிதத்தில் எழுதிக் காட்டிய கதையாகி விட்டது இப்போது .
இப்படி ஒரு கதையை எடுத்துக் கொண்டு கடைசியில் விக்கிரமன் படப் பாணியில் பாட்டுப் போட்டு படத்தை முடிப்பதை எல்லாம் எஸ் ஏ ராஜ்குமாரே மன்னிக்க மாட்டார்
படத்தின் திரைக்கதை எப்படி இருந்திருக்க வேண்டும் ?
இங்கே இருந்து மாற்று உலகத்துக்குப் போன நாயகனுக்கு அங்கே எந்த குழப்பமும் இல்லை . சந்தோசமாகவே இருந்தான். ஆனால் அதன் விளைவாக எதிர்வினையாக அங்கிருந்த மாற்று உலக நாயகன் இங்கே வந்து விட்டான் .
அந்த நிலையில் இங்கே நாயகியை , நாயகனின் நண்பன் பொய் சொல்லி நம்ப வைத்து ஏமாற்றி கல்யாணம் வரை போயிருக்க, அதைப் பார்த்து ரசிகர்கள் அதிர , இங்கே வரும் மாற்று உலக நாயகன் ‘என்னடா இது நம் மனைவியை இன்னொருத்தன் கல்யாணம் பண்ணிக்கப் போறான்’ என்று அதிர ,
மேலே சொன்ன குறைகள் எல்லாம் இல்லாமல் திரைக்கதை பயணிக்க,
அங்கே இருக்கும் நம்ம உலக நாயகன், விவரிக்க முடியாத மற்ற யாருக்கும் தெரியாத ஒரு விதமான யாரையோ இழந்த உணர்வில் இருக்க,
ஒரு நிலையில் இங்கு வந்த மாற்று உலக நாயகன் மீண்டும் அங்கே தன் உலகத்துக்குப் போய் , “உன் காதலியை ஒருத்தன் ஏமாத்திக் கல்யாணம் பண்ணிக்கப் போறான் டா ” என்று சொல்லிப் புரிய வைக்க ,
அவன் அங்கே இருந்து கிளம்புவதில் விஞ்ஞான சிக்கல் என்று சொல்லி ஒரு பரபரப்பான கதைப் போக்கில் எல்லாம் சுபமாக முடிந்து இருந்தால் , வணிக ரீதியாக அடியே ஒரு பெரிய வெற்றிப் படமாக ஆகி இருக்கும்.
அது இல்லாததால் பாதிக் கிணறு தாண்டியவன் பள்ளத்தில் விழுந்த கதையாக ஆகி விட்டது
என்றாலும் இவ்வளவு பேச வைத்ததே ஒரு படத்தின் வெற்றிதானே .
வித்தியாசமான கதையுள்ள படங்கள் தமிழில் வராதா என்று விரதம் இருந்து காத்துக் கிடந்தவர்களுக்கு தேனியில் இருந்து அடிக்கும் தென்றல் சாரலாக வந்திருக்கிறது அடியே .
பார்க்க ரசிக்க ஒரு பக்கா படம் !