ஆர் கே பி என்டர்டைன்மென்ட் சார்பில் ரவிச்சந்திரன் தயாரிக்க , கிஷோர் ரவிச்சந்திரன், சிரா ஸ்ரீ, நித்யா ஷெட்டி, தம்பி ராமையா , நரேன் நடிப்பில் ஏ பி ஜி ஏழுமலை இயக்கி இருக்கும் படம் அகவன் . அகவன் என்றால் உள்ளிருப்பவன் என்று படத்தில் பொருள் சொல்கிறார்கள் . அதுவே தப்பு . அகன் என்றால்தான் அந்தப் பொருள் வரும் .
அகவன் என்றால் முக்கிய விஷயம் சொல்பவன் என்பதே பொருள் . (மயில் இடும் சத்ததிற்கும் அகவல் என்று பொருள்)
குறுந்தொகை பாடல் 23 அகவன் மகள் என்ற சொல்லுக்கு குறி சொல்லும் பெண் என்கிறது . (அதாவது அகவல் செய்கிற பெண் என்று பொருள்)
‘அகவன் மகளே அகவன் மகளேமனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்அகவன் மகளே பாடுக பாட்டேஇன்னும் பாடுக பாட்டே அவர்நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே’ – என்பது அந்தப் பாட்டு .

தவிர ஆசிரியப் பா என்ற தமிழ் செய்யுள் வடிவத்தின் இன்னொரு பெயர் அகவல் பா . முருகனைப் பற்றி கந்தர் அகவல் என்ற நூலும் உண்டு .
சரி படம் சரியாக இருக்கிறதா ? பேசுவோம்
அண்ணனை நம்பாமல் நடந்து கொண்ட காரணத்தால் அவன் மரணத்துக்கு காரணம் ஆகி விட்டோம் என்ற குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி , திருச்சியில் இருந்து திண்டிவனம் வந்து சிவன் கோவில் ஒன்றில் ஊழியராக பணியாற்றும் இளைஞன் முருகவேல் (கிஷோர் ரவிச்சந்திரன்). துணைக் காவலாளி இழுத்து ( தம்பி ராமையா)
கோவில் வாசலில் பூக்கடை வைத்திருக்கும் அக்கா தங்கைகள் தெய்வானை ( சிரா ஸ்ரீ) , துளசி ( நித்யா ஷெட்டி) இருவரும் முருகவேலை காதலிக்கிறார்கள் .

கோவிலுக்குள் பேய் இருப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள். ஆராய்ந்தால் தேவயானி சில ரகசியமான வேலைகளை செய்வது தெரிகிறது.
அதைத் தொடர்ந்த கதை போக்கு வரலாற்று காலத்துக்குப் போகிறது. மாமன்னன் ராஜ ராஜ சோழன் ஆண்ட காலத்தில், பெருவெள்ளம் வந்து மக்கள் விதை நெல் அழிந்து உணவு உற்பத்தி செய்ய முடியாமல் போவதைத் தடுக்க,
கோவில் கலசங்களில் தானிய விதைகளையும் மூலவர் சிலைக்கு கீழே ஆழத்தில் தங்கம் முதலிய பொக்கிஷங்களையும் புதைத்து கோவில்களை கட்டிய வரலாறு சொல்லப் படுகிறது .

அது பற்றி ஆராய்ந்து எழுதும் ஒரு மாணவனின் ஆராய்ச்சியை அங்கீகரிக்காத பேராசிரியர் ஒருவர் அதே நேரம் அந்த உண்மைகளை புதையல் எடுக்கும் மாபியா கும்பலுக்கு சொல்ல,
அந்த கும்பல் அரசியல்வாதிகள் , பணக்காரர்கள் ஏழைகள், பணத்தேவை உள்ள எளிய மக்கள் என்று சகலரும் அடங்கிய அணி மூலம் பொக்கிஷத்தை கண்டு பிடித்து களவாட முயல்கிறது .
அந்த பொக்கிஷம் முருகவேல் காவல் செய்யும் கோவிலுக்குள் இருப்பது தெரிய வருகிறது.
கொள்ளைக் கும்பலுக்கு அந்த ரகசியத்தின் முழுமையை சொல்ல ஆராய்ச்சி மாணவன் மறுக்க, அவனை சித்திரவதை செய்து அவன் மனைவியை கொன்று ஆராய்ச்சி முழுமையை பெற்று கொள்ளையடிக்க கொள்ளைக் கும்பல் முயல , இதில் நல்ல போலீஸ் கெட்ட போலீஸ் , அப்பாவி வேஷம் கட்டும் ஆபத்தான நபர்கள் எல்லோரும் சேர , நடந்தது என்ன என்பதே இந்த அகவன் .

சிறப்பான நோக்கம் கொண்ட கதை செய்து இருக்கிறார்கள் . அது பழந்தமிழரின் அறிவு, அன்பு , நற் குணங்கள் , குறிப்பாக ராஜ ராஜ சோழனின் மாட்சி என்று வரலாற்று உண்மைகளின் அடிப்படையில் போவது மிக அற்புதம்.
தமிழர் வரலாற்றில் ஒலைச்சுவடிகளுக்குள் புதைந்து கிடக்கும் ரகசியங்கள் ஏராளம் . ஓலைச் சுவடிகள் அழிக்கப்பட்டதால் அழிந்த கலை இலக்கிய மற்றும் பொருள் பொக்கிஷங்கள் ஏராளம் ஏராளம் .
தமிழில் உள்ள இரண்டு சதவீத ஓலைச் சுவடிகள் படிக்கப்பட்டதன் மூலமே நமக்கு திருக்குறள் உட்பட இவ்வளவு இலக்கியங்கள் கிடைத்து உள்ளன.

ஓலைச் சுவடிகள் படிக்கும் கல்வியை உருவாக்கினால் இன்னும் நிறைய உண்மைகள் தெரிய வரும் என்று படம் சொல்லும் விஷயம் போற்றுதலுக்கு உரியது . மனமார்ந்த பாராட்டுகள் இயக்குனர் ஏழுமலைக்கு.
தமிழ் — தமிழர் , குறிப்பாக ராஜ ராஜ சோழனின் பெருமை கூறும் வசனங்களை ரசித்து எழுதி இருக்கிறார் ஏழுமலை . சிறப்பு
பாலா பழனியப்பனின் ஒளிப்பதிவில் இரவு நேரக் காட்சிகள் மிக சிறப்பு . கிராமத்து இரவின் பூடகத்தை யதார்த்தத்தை கண் முன் கொண்டு வருகின்றன இயக்குனர் ஏழுமலையின் காட்சி அமைப்புகளும் பாலா பழனியப்பனின் ஒளிப்பதிவும் .
பகல் மற்றும் இரவு நேர ஏரியல் காட்சிகள் அருமை . லோக்கேஷன்களை மிக சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார்கள் இருவரும்.

அட்டகாசமான பின்னணி இசையால் படத்துக்கு யானை பலம் சேர்த்து இருக்கிறார் இசையமைப்பாளர் சத்யா . பாடல்களிலும் புதுப் புது ஒலிகளால் கவர்கிறார் . ஆனாலும் பாடல்கள் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கலாம் . யுக பாரதியின் பாடல் வரிகளும்!
நடிக நடிகையர்கள் ஒகே . வழக்கம் போல ஆங்காங்கே காமெடி வெடி போடுகிறார் தம்பி ராமையா. துளசியின் தோழியாக வரும் அந்த உடன் படுக்கை உடன் படிக்கை விளக்கம் சொல்லும் தோழி கலகலக்க வைக்கிறார்.
திரைக் கதையை இன்னும் நறுக்கு தெரித்தாற் போலவும் இன்னும் வலுவாகவும் சொல்லி இருக்கலாம் . இவ்வளவு கதாபாத்திரங்கள் தேவை இல்லையே .

படத்தொகுப்பு இன்னும் சிறப்பாக இருந்திருக்கணும் . படத்தின் நீளம் அதிகம் .
‘எங்க அண்ணனை நானே கொன்னுட்டேன்’ என்று சொல்லி ஷாக் கொடுக்கும் முருகவேல் அப்புறம் சொல்லும் பிளாஷ்பேக் பொங்கு ஆட்டம்.
அவரை போலீஸ் விரட்டுது . அப்புறம் அவரே போலீஸ் என்கிறார்கள் . இப்படி பல குழப்பங்கள்.

கோவிலில் புதைந்து கிடக்கும் பொக்கிஷங்களை எடுத்தால் நம் நாட்டின் செல்வா வளம் பெருகும் . மக்கள் வாழ்க்கைத்தரம் பெருகும் . வெளிநாட்டுக்கு எல்லாம் வேலைக்கு போய் கஷ்டப்படத் தேவை இல்லை என்கிறார்கள் .
யாருகிட்ட ? நம்ம அரசியல்வாதிகள் கிட்ட ? விளங்கிடும் .
மொத்தத்தில் ,
அகவன் .. அகவும் அடிப்படைக்கதையால் அகத்துக்குள் போய் அகன் ஆகிறான் .