
நாம் எல்லோரும் பெருமைப் படக்கூடிய இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் நடிப்புக்காக தன் உயிரையே பணயம் வைக்கத் தயங்காத நடிகனான விக்ரம் நடிப்பில் உருவாகி, உலகறிந்த ஹாலிவுட் நடிகர் ஆர்னால்டு சுவார்ஷ்நெகர் கலந்து கொண்ட — உலகத் தமிழ் சினிமா ரசிகர்கள் ஒட்டு மொத்தமாக எதிர்பார்க்கிற –ஒரு தமிழ் படத்தின் பாடல் வெளியீட்டு விழா என்ற அளவுக்கு ஐ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி வடிவமைக்கப்படவில்லை என்றாலும்….
நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இல்லை .

மேடையில் லேசர் வடிவத்தில் உதய சூரியன் எல்லாம் வந்து போனது. (அந்த அற்புதக் காட்சியை ஜெயா டிவி யில் வரவிருக்கும் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் )
தெலுங்கு நடிகர் ராணா டகுபதிக்கு ஆர்னால்டு பக்கத்தில் இருக்கை ஒதுக்கி இருந்தார்கள், ஆனால் பயபுள்ள கடைசிவரை நிகழ்ச்சிக்கு வரவே இல்லை. ஆனால் அவர் பெயரை அடிக்கடி அறிவித்து சொம்படித்துக் கொண்டே இருந்தார்கள்
அரங்கு பிரம்மாண்டமாக இருந்தாலும் ஒலி அமைப்பு நன்றாக இல்லை. பிரபலங்கள் ஸ்டைலாக போஸ் கொடுப்பது போல தலையில் கை வைத்து தலைவலியை சமாளித்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சித் தொகுப்பாளராக சின்மயி வந்த உடனேயே எரிச்சல்தான் வந்தது . இவ்வளவு பெரிய நிகழ்ச்சிக்கு ஒரு நல்ல தொகுப்பாளினி கிடைக்க வில்லையா ?
சக தொகுப்பாளராக வந்த நடிகர் பாபி சிம்ஹா வேட்டி சட்டையில் வந்து மைக் பிடித்து ஆரம்பித்தது நன்றாக இருந்தது . ஆனால் என்ன நினைத்தாரோ பத்து நிமிடத்தில் அவரும் கோட்டு சூட்டுக்கு மாறினார்.
ஒரு நிகழ்ச்சிக்கும் அடுத்த நிகழ்ச்சிக்கும் இடையே மேடையை இருட்டாக்கி விட்டு நிமிடக் கணக்கில் காக்க வைத்தார்கள். அப்போதே வி ஐ பி க்கள் மட்டுமல்ல .. ரசிகர்களும் பெரு மூச்சு விட ஆரம்பித்தார்கள் .
சூப்பர் ஸ்டார் ரஜினி, யுனிவர்சல் ஸ்டார் ஆர்னால்டு சுவார்ஷ் நெகர் ஆகியோர் வந்தபோது அரங்கமே அதிர்ந்தது . இந்த அரங்கை அதிர வைத்த லிஸ்டில் பவர் ஸ்டாரும் இருந்ததுதான் காலக் கொடுமை.

படத்தில் வரும் கெட்டப்பில் ஒரு பாடலுக்கு அதே அசுரன் கெட்டப்பில் தோன்றிய விக்ரம் மிக அற்புதமான ஒரு பர்ஃபார்மன்ஸ் கொடுத்தார். மிரட்டல் ! அசத்தல் ! கூடவே எமி ஜாக்சனும்!
பாடி பில்டர்ஸ் ஷோ ஒன்று நடக்க, பாடி பில்டர்களை பாராட்ட தானாக மேடை ஏறிய ஆர்னால்டு, அப்படியே நாலு வார்த்தை பேசி விட்டு போய் விட்டார் .

அட ஆமாங்க!
ஐ படத்தின் ஆடியோ ரிலீஸ் நடந்த போது அங்கே ஆர்னால்டு இல்லை .கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் வெளியிட ரஜினி காந்த் பெற்றுக் கொண்டார் .ஐ படத்தின் மேக்கிங் காட்டப்பட்டபோதும் அங்கே ஆர்னால்டு இல்லை . அப்புறம் எதுக்கு ஆர்னால்டை கொண்டு வந்தாங்கன்னே தெரியல .
இதை விட பெரிய கொடுமை .. நடனம் ஆடிய விக்ரம் அந்த மேக்கப்பை கலைத்துக் கொண்டு இருக்க, தவறான திட்டமிடல் காரணமாக ஆடியோ லாஞ்ச் சமயத்தில் விக்ரமே மேடையில் இல்லை . ஆடியோ லாஞ்ச புகைப்படத்தில் அவரை நீங்கள் பார்க்க முடியாது .

“தமிழ் நாட்டுக்கு இந்தியாவுக்கு முதன் முதலாக வந்திருக்கிறேன். ஷங்கரின் திறமையை மதிக்கிறேன். ஷங்கர் ஹாலிவுட் வரட்டும் . அவர் இயக்கத்தில் நான் நடிக்கிறேன் ” என்று ஷங்கரை பெருமைப் படுத்திய ஆர்னால்டு ‘ஐ வில் பே பேக்’ என்ற தனது முத்திரை பதித்த வசனத்தை பேசி விட்டுப் போனார். ஆர்னால்டு போன கொஞ்ச நேரத்தில் இரண்டு பாடல்களை பாடி விட்டு ஏ ஆர் ரகுமானும் கிளம்பிப் போனார்
அனா யங் என்ற சீனப் பெண்மணியின் பப்புள் ஷோ (சோப்புக் குமிழ் மேஜிக்) ஒன்று காட்டினார்கள் .
அட… நேரடியாக நிகழ்ச்சிக்கு போக வேண்டியதுதானேப்பா .அவர் வேறு எங்கோ செய்த மிக அட்டகாசமான ஷோ ஒன்றை திரையில் காட்டினார்கள் . ஆனால் அவர் இங்கே செய்து காட்டிய நிகழ்ச்சி அந்த அளவுக்கு சிறப்பாக இல்லாமல் இருக்க , ”போதும் போம்மா” என்று ரசிகர்கள் கத்தி விட்டார்கள் . குறுக்கே நுழைந்த சின்மயி அவரை பாதியிலேயே அப்புறப்படுத்தினார் .
விஜய் டிவியில் இருந்து வந்த ஒரு குழு நிகழ்ச்சி வடிவமைப்பை செய்ததாம். அத்தனை குழப்பத்துக்கும் அவர்கள்தான் காரணமாம்.
படத்தின் ஒரு பகுதிக்காக விக்ரம் தனது எடையை 25 கிலோ குறைத்து எலும்பும் தோலுமாய் நிற்பதை வீடியோவில் பார்த்தபோது கண்ணீரே வந்தது. அந்தக் காட்சி ரஜினியையே அதிர வைத்து விட்டது என்பது அவர் பேசும்போது தெரிந்தது.
”இப்படி எல்லாம் உடம்பை வருத்திக்க எப்படி முடியுது?” என்ற கேள்விக்கு ” ஷங்கர் போன்ற இயக்குனர்கள் உருவாக்கற படைப்புகள்ல நடிக்கக் கிடைக்கற வாய்ப்புகளுக்கு முனாடி இந்த கஷ்டம் எல்லாம் ஒண்ணும் இல்லை ” என்று விக்ரம் சொன்னது பெருந்தன்மையின் உச்சம்.
மேடையில் அழகாக ஒரு ரேம்ப் வாக் நடந்து ரசிகர்களை அசத்தவும் தவறவில்லை விக்ரம் .

சிறப்பு விருந்தினர்களில் மிச்சம் இருந்து கடைசியாக பேசிய ரஜினி ” ஷங்கர் மிக அற்புதமான இயக்குனர். எந்திரன் இல்ல.. ஐ இல்ல … ஷங்கரோட பெஸ்ட் படங்கள் இனிமேதான் வரப் போகுது.
நடிப்புக்காக…தான் நடிக்கிற கேரக்டருக்காக… இந்த அளவுக்கு உடம்பை வருத்தி இன்னும் சொல்லப் போனா தியாகம் பண்ற நடிகர் தமிழ் நாட்டுல .. இந்தியாவில.. ஹாலிவுட்ல… ஏன் , உலகத்துலேயே யாரும் இல்லை ” என்று உணர்ச்சிகரமாக பேசினார் .

ஷங்கர் , விக்ரம் , ஏ .ஆர் . ரகுமான் போன்ற சினிமா மேதைகளின் படம் என்பதால் ஐ படத்துக்கு ஒரு பெருத்த எதிர்பார்ப்பு உண்டு . அதற்கேற்ப விழாவை இன்னும் சிறப்பாக நடத்தி இருக்கலாம்