பொங்கலுக்கு வருவதாக நவம்பர் மாதமே அறிவிக்கப்பட்ட என்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு வெளிவராமல் போனதற்கு ஆயிரம் காரணங்கள் அவிழ்த்து விடப்பட்டன.
அஜித்துக்கு கிளைமாக்ஸ் பிடிக்கவில்லை . கவுதம் மேனனுக்கும் அஜித்துக்கும் லடாய். அஜித் மரணம் அடைவது போன்ற கிளைமாக்ஸ் தயாரிப்பாளருக்கு பிடிக்கவில்லை…. என்று அது ஒரு பெரிய லிஸ்ட் .
ஆனால் இது எதுவுமே காரணம் இல்லை என்கிறார் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் .
” என்னை அறிந்தால் படம் வெளிநாடுகளிலும் நிறைய இடங்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது . சில நாடுகளில் அந்தந்த நாட்டின் சட்டங்களுக்கு ஏற்ற மாதிரி வெளியீடு அனுமதி பெற வேண்டி இருந்தது. பொங்கலுக்கு ஒரு வாரம் முன்புதான் படம் முழுக்க ரெடியானது என்ற நிலையில் எங்களுக்கு கால அவகாசம் இல்லை . எல்லா நாடுகளிலும் முறைப்படி ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதே எங்கள் திட்டம் . அதனால்தான் பொங்கலுக்கு வரவில்லையே தவிர வேறு காரணம் இல்லை ” என்கிறார் அவர்.
இவர் இப்படி சொன்னால் அது போலவே படத்துக்கு இரண்டு கிளைமாக்ஸ் எடுக்கப்பட்டது என்ற செய்தியை திட்டவட்டமாக அல்லது திட்ட சதுரமாக மறுக்கிறார் கவுதம் மேனன் . “எனக்காக உங்கள் கதையில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது என்பதுதான் அஜீத் சார் சொன்ன விசயம் . அப்படி இருக்க இரண்டு கிளைமாக்சுக்கு என்ன அவசியம் ?” கேள்வியையே பதிலாக தருகிறார் கவுதம் மேனன்.
ஆகையால் ரசிகப் பெரு மக்களே !
ஒரு மனிதனின் வயது மாற்றங்களுக்கு ஏற்ப , அஜீத் பல தோற்றங்களிலும் அஜித் தோன்றும் என்னை அறிந்தால் படம் தேதி மாற்றங்களுக்கு உள்ளானாலும், பிப்ரவரி ஐந்தாம்தேதி கண்டிப்பாக ரிலீஸ் ஆகிறது .
இதை அடுத்து அஜித் நடிக்கும் படத்தையும் ஏ எம் ரத்தினமே தயாரிக்க, அதை இயக்கப் போவது சிறுத்தை, வீரம் ஆகிய படங்களை இயக்கிய சிவா .