தமிழ் சினிமாவில் ஒரு படம் தயாரித்துவிட்டு காணாமல் போகும் தயாரிப்பாளர்களுக்கு இடையே, தொடர்ந்து படங்கள் தயாரிப்பது ஒரு சில தயாரிப்பாளர்கள் தான்.
அந்த வரிசையில் புதிதாக இடம் பிடித்திருக்கிறார் எம்.ஏ.ஹபீப்.
தனது முதல் தயாரிப்பான ‘சேதுபூமி’யைத் தொடர்ந்து அவர் தயாரிக்கும் இரண்டாம் படம்‘அக்பர்’
தயாரிப்பாளர் எம்.ஏ.ஹபீப் அது பற்றிக் கூறும்போது ,
“ராயல் மூன் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் நான் தயாரித்த முதல் படம் ‘சேதுபூமி’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி இந்த அக்பர் படத்தையும் இயக்குகிறார். தமன் ஹீரோவாக நடிக்கிறார்.
முத்துராமலிங்கம் ஒளிப்பதிவு செய்கிறார். வி.டி.பாரதி – வி.டி.மோனிஷ் இசையமைக்கிறார்கள். இப்படி முழுக்க முழுக்க ‘சேதுபூமி’ படத்தில் பங்கேற்றவர்களுக்கு தான், இந்த படத்திலும் வாய்ப்பு அளித்துள்ளேன்.
கதாநாயகி மட்டும் புதுமுகம். அநேகமாக மும்பை அல்லது பெங்களூரில் இருந்து கதாநாயகி ஒருவரை தேர்வு செய்ய உள்ளோம். அதற்கான பணியில் இயக்குநர் ஈடுபட்டுள்ளார்.
‘அக்பர்’ என்ற தலைப்பைக் கேட்ட உடன், இது என்ன வரலாற்று படமா? என்று கேட்கிறார்கள். ’அக்பர்’ வரலாற்று படம் இல்லை என்றாலும், தமிழ் சினிமாவின் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் படமாக இருக்கும்.
படத்தின் முழு கதையும் ராமநாதபுரம் மாவட்டத்தில்தான் நடக்கிறது. ‘சேதுபூமி’ படத்தில் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் உணர்வுகளை சொன்னது போல,
இந்த படத்தில் அம்மாவட்டத்தில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் எப்படி சொந்த பந்தங்கள் போல பழகுகிறார்கள் என்பதை எதார்த்தமாக சொல்லப் போகிறோம்.
அதற்காக இப்படத்தின் கதை விவாதத்தைக் கூட இயக்குநர் ராமநாதபுரத்திலே நடத்துகிறார்.
இப்படத்தின் மற்றொரு சிறப்பு அம்சம், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகள் அனைவரையும்,
80 மற்றும் 90 களில் முன்னணி கதாநாயகிகள் மற்றும் கதாநாயகர்கள் வலம் வந்தவர்களாக தேர்வு செய்துள்ளோம்.
தற்போது கதை விவாதத்தில் உள்ள ‘அக்பர்’ படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய உடனே, எனது மூன்றாவது படத்தின் தயாரிப்பு பணிகளையும் தொடங்க திட்டமிட்டுள்ளேன்.
ஒரு படம் முடிவதற்குள் எதற்கு அடுத்த படத்தை தொடங்குகிறீர்கள்?, என்று என்னிடம் கேட்கிறார்கள்.
நான் சேதுபூமி படம் தயாரிக்கும்போதே கூறினேன், தமிழ் சினிமா கலைஞர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற முடிவில் நான் இருக்கிறேன் என்று .
அதனால், நான் தொடர்ந்து பல படங்கள் தயாரிப்பேன். அதன் மூல பல புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுப்பேன்.” என்று தயாரிப்பாளர் எம்.ஏ.ஹபீப் தெரிவித்தார்.