‘அக்கா குருவி’யாக தமிழில் பறக்கும் Children of Heaven

இயக்குனர் சாமி இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைக்க 8 பேர் சேர்ந்து தயாரித்திருக்கும் படம் அக்கா குருவி. புகழ்பெற்ற இயக்குனர் மஜித் மஜிதி இயக்கிய Children of Heaven என்ற மாபெரும் வெற்றிபெற்ற பெர்ஸியன் திரைப்படத்தின் மறுஉருவாக்கம்தான் அக்கா குருவி. இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படகுழுவினர்கள் கலந்து கொண்டு பேசியதில் இருந்து… 
 
இயக்குனர் அமீர் பேசியபோது,”இயக்குனர் சாமி அவர்களுக்கும் எனக்கும் தொழில் ரீதியாக பெரிய நட்புறவு என்று எதுவும் கிடையாது. இந்த விழாவிற்கு வருகை தரவேண்டும் என்று கடந்த 5 நாட்களுக்கு முன்னர் அழைத்திருந்தார். அப்போது என்ன படம் இயக்கியுள்ளீர்கள் என்று கேட்டபோது, உயிர், மிருகம் படங்களை இயக்கியுள்ளேன் என்றார். நான் உயிர் படத்தை மட்டும் பார்த்துள்ளேன். மற்ற படங்களை பார்க்கக் கூடிய சூழல் இல்லை. இந்த விழாவிற்கு நான் வந்ததன் காரணம் சாமி என்கின்ற படைப்பாளியை விட சாமி இயக்கியுள்ள படைப்பிற்காக வருவது தான் என்னுடைய முதல் நோக்கம். 
 
“Children of Heaven” என்ற திரைப்படம், உலகில் இருக்கக்கூடிய அனைத்து சினிமா ரசிகர்களையும் கட்டிப்போட்ட ஒரு திரைப்படம். மஜித் மஜிதி என்ற இயக்குனர் உலகில் இருக்கக்கூடிய அனைத்து சினிமாவையும் தன் காலடியில் கொண்டு வந்து புரட்சி செய்த ஒரு இயக்குனர். Children of Heaven படத்தை பார்க்காதவர்கள் சினிமாவில் இல்லை. அனைவரும் பார்த்திருப்பார்கள். 
 
இந்த படத்தை பற்றி இசைஞானி இளையராஜா இது போன்ற படங்களை ஏன் இங்கு எடுப்பதில்லை என்று ஒரு கேள்வியை கேட்டார். அதில் சில சிக்கல்கள் உள்ளது, இது போன்ற நிறைய திரைப்படங்கள் உள்ளது. அதை எல்லாம் இயக்க வேண்டுமென்றால், இயக்குனரே கதை, வசனம், திரைக்கதை, போன்று என்னவெல்லாம் உள்ளதோ அது அனைத்தையும் பார்ப்பவராக இருக்க வேண்டும். அப்போது தான் தயாரிப்பாளர்கள் வாய்ப்பு தர தயாராகவுள்ளனர்.
 
இல்லை கதை வேறு ஒருவருடையது, இயக்கம் மட்டும் தான் நான் என்று சொன்னால், அதற்கு நான் எழுத்தாளரை வைத்தே இயக்கிவிடுவோமே தனியாக இயக்குனர்கள் எதற்கு? என்று இது போன்ற நடைமுறை சிக்கல்கள் உள்ளது.
 
குறிப்பாக முதல் படம் இயக்கும் ஒரு இயக்குனருக்கு அந்த படம் வெற்றி அடைந்துவிட்டது என்று சொன்னால் அவர் அடுத்து எடுக்கும் படம் ரீமேக் படமாக இருந்தால் அதை யாரும் விரும்புவதில்லை. பத்திரிகையாளர்களே கேலிக்குரிய ஒரு விஷயமாக கிண்டலடித்து விடுகிறார்கள். ஆனால், அண்டை மாநிலமான தெலுங்கு, பிற மாநிலமான ஹிந்தி மொழி படங்கள் பெரிய ஹிட் மாஸ் ஹிட் என்று செய்தி வந்தால், அதே படத்தை இங்குள்ள ஒரு பெரிய ஹீரோவை வைத்து ரீமேக் செய்தால், அந்த படத்திற்கு கிடைக்கும் ஆதரவு, விளம்பரம், வரவேற்பு அனைத்தும் அதிகமாக இருக்கும். ஆனால், இது போன்ற கலைப் படங்களை இயக்குவது கத்தி மீது நடப்பது போல் இருக்கும். அந்த படத்தின் தரம் குறையாமல் நம் மண்ணின் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு இயக்க வேண்டும். அதே படத்தை இயக்கி தோல்வியடைந்து விட்டால் இயக்குனர் பெரும் விமர்சனத்திற்கு ஆளாவார்கள். 
 
ஆரம்ப காலகட்டத்தில் இருந்து எனக்கு இது மிகவும் ஆச்சர்யமான ஒரு விஷயமாக உள்ளது. பெயர் குறிப்பிடாமல் சொன்னால் தெலுங்கு மொழியில் சில்வர் ஜூபிலி வாங்கிய ஒரு படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார்கள். அந்த இயக்குனர் காட்சி மாறாமல் அப்படியே இயக்கியுள்ளார். ஆனால், அந்த படத்திற்கு ஆனந்த விகடன் பத்திரிகையில், இயக்குனர் மிக சிறப்பாக திரைக்கதை அமைத்துள்ளார் என்று எழுதியுள்ளனர். காட்சி மாறாமல் எடுத்த ரீமேக் படத்திற்கு கிடைத்த விமர்சனம் தான் இது. இது போன்ற விமர்சனங்களுக்கிடையில் இயக்குனர்கள் சிக்கிக் கொள்கிறோம் என்பதே நிதர்சனம்.
 
இளையராஜா அவர்கள் கேட்ட கேள்வி நியாயமான கேள்வி, இது சாமிக்கு மட்டுமல்ல பல இயக்குனர்களுக்கும் தோன்றியிருக்கும் எனக்கும் தோன்றியது. இந்த படத்தை இயக்குகிறோம் என்று சொன்னால் பருத்திவீரன் என்ற சொந்த ஊர் கதையை இயக்கிவிட்டோம். ராம் என்று சொந்த கதையை இயக்கிவிட்டோம். அது போன்ற படத்தை இயக்கிவிட்டு ஒரு ரீமேக் கதையை இயக்குவதா? என்று வியாபார ரீதியாக பயம் வருகிறது.
 
இதை இயக்கினால் மார்க்கெட் இறங்கிவிடுமோ? மக்கள் மத்தியில் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற கேள்விகள் எழுகிறது. இங்கு கலர் சட்டை போட்டுக் கொண்டு விமர்சனம் செய்ய நிறைய பேர் உள்ளனர். அவர்களிடம் யார் சிக்குவது? பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு யார் பதில் சொல்லுவது? என்று பல சிரமங்கள் உள்ளது.
 
Children of Heaven போன்று 20க்கும் மேற்பட்ட படங்கள் ரீமேக் செய்வதற்கு தயாராக உள்ளது. ஆனால், இது போன்ற அச்சுறுத்தல்கள் தான் அதை தடுக்கிறது. ஆனால், அந்த வகையில், மனம் திருந்திய மைந்தனாக சாமி இருக்கிறார். அவரின் முந்தைய படங்கள் சர்ச்சைக்குரிய படங்களாக இருந்ததால் அவர் இந்த பாதையை தேர்ந்தெடுத்துள்ளார். அவர் சரியான பாதையை தேர்ந்தெடுத்தாரா என்பதை விட அவர் சரியான படத்தை தேர்வுசெய்துள்ளார் என்பதே மறுக்க முடியாத உண்மை.
 
இந்த படத்தை பார்த்துவிட்டு யாரும் குறை கூறவே முடியாது. இந்த படத்தை அவர் எவ்வளவு குறைவாக எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தாலும் கூட அந்த படத்தின் தரம் குறையாது. ஏனென்றால், அந்த கதையின் கரு அப்படி. ஆனால் அவர் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளேன். கிளைமாக்ஸ் காட்சியில் சிறிய மாற்றம் செய்துள்ளேன் என்று தெரிவித்தார். அது கேட்பதற்கு நன்றாக இருந்தது. பார்ப்பதற்கும் நன்றாக தான் இருக்கும்.
 
மிக முக்கியமாக சொல்ல வேண்டிய விஷயம் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி வணீக ரீதியாக வெற்றியடைய வேண்டும் என்பது தான். இந்த படத்தில் பணியாற்றிய குழந்தைகள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 
 
இசைஞானி இளையராஜாவின் பாட்டை கேட்கும்போதே அவர் இப்படத்திற்காக என்ன செய்திருப்பார் என்று தெரிகிறது. முதல் முறை கேட்ட பாடலே எனக்குள் இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது. 
 
இதையெல்லாம் தாண்டி இசைஞானிக்கான அங்கீகாரம் என்னவென்றால், இயக்குனர் சாமி என்னிடம் ஒரு மின்னஞ்சலை காண்பித்தார். அதாவது இந்த விழாவிற்கு மஜித் மஜிதி வரவேண்டும் என்று ஒரு மின்னஞ்சலை அனுப்பியுள்ளனர். ஆனால், அதற்கான செலவுகள் அதிகம் என்ற காரணத்தால் படக்குழுவினர்களால் அவரை அழைத்து வரமுடியவில்லை.
 
அவரை அழைத்து வர நானும் சில வழிகள் சொன்னேன். மஜித் மஜிதியை அழைத்து வந்த பெருமை இதை மன்னனிற்கு சேரும் என்பதாலும், அவரை போன்ற இயக்குனர்கள் வரும் பொழுது இன்னும் ஒரு உத்வேகம் பிறக்கும் என்பதற்காகவும் ஆனால் அது சாத்தியமடையவில்லை. 
 
இருப்பினும் இவர்கள் ” அக்கா குருவி ” படத்தை அவருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதை பார்த்த அவர், படம் உங்களின் மண்ணிற்கேற்றவாறு படத்தின் தன்மையும், உணர்வும் குறையாமல் மிக சிறப்பாக உருவாக்கியுள்ளீர்கள். அதிலும் இசை மிகவும் அற்புதம் என்று அவர் தரப்பில் இருந்து படத்தை பாராட்டி மின்னஞ்சலை இந்த குழுவினருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
 
ஒரு இசைக்கலைஞன் தமிழக மக்களை மட்டுமல்ல உலகிலுள்ள தமிழ் பேசும் மக்களை மட்டுமல்ல, பெர்சியன் மொழி பேசும் ஒரு இயக்குனரையும் கூட கட்டிப்போட்ட இளையராஜாவிற்கு பாரத ரத்னா விருது என்பது ஒன்று அல்ல ஐந்து தருவதற்கு கூட தகுதி இருக்கிறது. நாம் தெளிவாக சொல்ல வேண்டியது, ஆளுநர் பதவியோ ஜனாதிபதி பதவியோ பாரத ரத்னா விருதை விட பெரியது இல்லை என்பதுதான்”என்றார்.  என்றார்.
 
இயக்குனர் இரா.பார்த்திபன் பேசியபோது,”இங்குள்ள அனைவரும் பேசியதும் வீண், நான் பேசப்போவதும் வீண், இந்த படத்தை பார்த்து அதை பற்றி பேசிய குழந்தைகள் தான் உண்மையை பேசியவர்கள். பெரியவர்கள் அனைவருமே ஒருவர் பேசியதை விட மற்றொருவர் சிறப்பாக பேச வேண்டும் என்று நினைப்பார்கள். நான் உட்பட அப்படித்தான். சமீபத்தில் கூட ஒரு படத்தின் விமர்சனங்களின் போது பெரியவர்கள் அனைவரும் அழகாக பேசினார்கள். ஆனால், சிறுவன் ஒருவன் சொன்ன கேடித்தனமான கருத்து தான் வைரல் ஆனது. ஏனென்றால், அவன் சொன்னது மிகவும் யதார்த்தமாக இருந்தது. எதற்காக இதை சொல்கிறேன் என்றால் அது போன்ற குழந்தைகளின் விமர்சனம் தான் இந்த படத்திற்கான சரியான விமர்சனம். 
 
நான் ஆரம்பத்தில் சொன்னது போல் அனைவர் பேசியதும் வீண் தான். சமீபத்தில் கூட பர்வீன் சுல்தானா அவர்கள் அமீரை ஒரு பேட்டி எடுக்கிறார். அதில் அவர் கேட்ட ஒரு கேள்விக்கு அமீர் ஒரு சிரிப்பை மட்டுமே சிரித்தார். அந்த சிரிப்பில் சுமார் ஒரு 1500 அர்த்தங்கள் அடங்கியிருக்கும் ஒரு பூங்கொத்து போல. நானும் அவரின் பேச்சிற்கு ரசிகன் தான். இன்றும் அழகாக பேசினார். நிறைய தேவையான விஷயங்களை கூறினார்.
 
எதற்காக நல்ல படங்களை இயக்குவதற்கு யாரும் முன்வரவில்லை என்பதற்கு அழகாக பேசினார். நான் ‘உள்ளே வெளியே’ என்று ஒரு படத்தை இயக்கினேன் அதற்கு காரணம் நான் இயக்கிய ‘சுகமான சுமைகள்’ படம் தான். நான் அதை குடும்பத்துடன் பார்க்க வேண்டும் என்பதற்காக மிகவும் ஒழுக்கமாக இயக்கினேன். ஆனால், அதை என் குடும்பம் மட்டுமே பார்த்தது. அந்த படத்தால் நான் 75 லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்தேன்.
 
அது நான் சம்பாதித்த பணம் மட்டும் இல்லை. சம்பாதிக்க போகும் பணத்தையும் சேர்த்து போடப்பட்ட பணம். அந்த பொருளாதார பிரச்சனை.. நம் வாழ்க்கையிலேயே விளையாட ஆரம்பித்து விட்டது. எனக்கு தெரிந்து ரஹ்மான் சார் சொல்வது போல் இரண்டு பாதை உள்ளது. ஒன்று காதல் மற்றொன்று வெறுப்பு. அதில் நாம் தேர்தெடுக்க வேண்டியது காதலை தான் என்பார். அது போல, தேர்ந்தெடுத்தலே மிக முக்கியமான ஒன்று என நினைக்கிறேன்.
 
அதை இயக்குனர் சாமி அவர்கள் தேர்ந்தேடுத்தது CHILDREN OF HEAVEN. அதை விட சிறந்த தேர்வு இசைஞானி இளையராஜா. ஒரு ஏழு நல்ல இதயங்கள் சாமி அவர்களை இயக்குனர்களாக தேர்வு செய்துள்ளனனர். இதற்கான விளைவு, அமீர் சொன்னது போல் இந்த படத்தை எவ்வளவு குறையாக இயக்கியிருந்தாலும், அது குறையாக இருக்காது. சாமி என்னுடன் பணிபுரிந்தவர் என்பது இந்த படத்தை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. இதற்கு முன்னதாக இவர் இயக்கிய படங்களை பார்க்கும் பொழுது, பொறாமையாக இருக்கும் ஐவரும் இது போன்ற சர்ச்சையான படங்களை இயக்குகிறார் என்பதனால். 
 
இயக்குனர் ஹச்.வினோத்தும் என்னுடன் உதவி இயக்குனராக சில காலங்கள் பணியாற்றியுள்ளார். அவர் அஜித் அஜித் என்று போகும் சமயத்தில், சாமி மஜித் மஜித் என்று போயிருக்கிறார். அவரின் சோர்விற்கு காரணம் அவர் இயக்குனராக மட்டுமல்லாமல், இப்படத்திற்கு தயாரிப்பாளராக இருப்பதும் ஒரு மிக முக்கிய காரணம். ஆனால், அவர் என்னை விட ஒரு படி மேல்தான். நான் ஒரு செருப்பை வைத்து படம் இயக்கினேன், இவர் இரண்டு ஷூவை வைத்து படம் இயக்கியிருக்கிறார். 
 
நான் ஒத்த செருப்பு படத்தை இயக்கும் போது எவ்வளவு கஷ்டப்பட்டேனோ, அது வெளியாகி ஓடிடி தளத்திற்கு சென்றவுடன் உலக பெருமையெல்லாம் கிடைத்தது. இப்போது கூட அமீர், நீங்கள் உங்கள் படத்தை வியாபாரம் செய்துவிட்டீர்களா என்று கேட்டார். யாரும் இது வரை என் வீட்டின் பக்கம் அல்ல தெருவின் பக்கம் கூட வரவில்லை என்று சொன்னேன். இந்த மாற்றங்கள் எப்போது நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. இரவின் நிழல் படம் உள்ளே வெளியே படத்தை போன்றிருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால், எவ்வளவு காலம் தான் இந்த பொருளாதார சிக்கல்களை சமைப்பது என்று தெரியவில்லை.
 
இயக்குனர் சாமிக்கு திடம் மிகவும் முக்கியமான ஒன்று. நான் முந்தைய காலத்தில் பல படங்களின் மூலம் சம்பாதித்து இருக்கலாம். ஆனால், நிறைவை தரும் படம் ‘இரவின் நிழல்’ மட்டும் தான். பாக்யராஜ் சார் படத்தை பார்த்தார். அந்த பாராட்டு என்பது எவ்வளவு கோடி கொடுத்தாலும் கிடைக்காது. அது போன்ற சந்தோஷத்தை சாமி உணருவார். இந்த படம் வெற்றியடையும்” என்றார்.
 
PVR பிக்சர்ஸ் கதிர் பேசியபோது,”மே 6ம் தேதி “அக்கா குருவி” படம் வெளியாகிறது. இது போன்ற நல்ல படங்களை திரையரங்கிற்கு வந்து கண்டு மகிழுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி”என்றார்.
 
ஒளிப்பதிவாளர் உத்பல் வி நாயனார் பேசியபோது,”நான் கேரள மாநிலத்தை சேர்ந்தவன். எனக்கு கேமராவுக்கு பின்னாடி நிற்பது தான் சுலபம். கேமரா முன்னாடி கொஞ்சம் பிரச்சனை தான். எனக்கு நிறைய பேச தெரியாது. நான் இது வரை கன்னடம், தமிழ், தெலுங்கு, கொங்கணி, மலையாளம் என 80 படங்களில் பணியாற்றியிருக்கிறேன். அதில் முதல் பட வாய்ப்பு தமிழில் தான் கிடைத்தது. என்னை வாழ வைத்தது தமிழ் தான். பார்த்திபன் சாருடன் பணியாற்றியுள்ளேன். இந்த படத்தில் எனக்கு முக்கியமாக இருவர் உதவி செய்தனர். என்னுடைய கலரிஸ்ட் முத்துராஜ் மற்றும் ஹெலிகேம் ஜெகன் ஜெயராம். முத்துராஜ் சார் தேசிய விருதை பெற்றவர். சரத்குமார் சார் நடித்த “சாமுண்டி” தான் என்னுடைய முதல் படம்.”என்றார். 
 
நடிகர் ஆதி பேசியபோது,”இந்த படத்தின் காட்சிகள் மிகவும் அழகாக இருந்தது. வழக்கமாக நாம் பார்க்கும் படங்கள் ஹீரோவை சுற்றி மட்டுமே இருக்கும். அது போன்ற படங்கள் நமக்கு பழகிவிட்டன. அதற்கு நடுவில் ஒரு கிராமத்தில் இருக்கும் வீட்டில் இரு குழந்தைகளை பற்றிய கதையை சொல்லும் போது எனக்கு அது மிக சுவாரஸ்யமாக இருந்தது. சாமி சார் என் முதல் பட இயக்குனர். “மிருகம்” தான் என்னுடைய முதல் படம். மிருகம் படத்தின் படப்பிடிப்பின் போது இவரை பார்த்தால் சிறிது பயம்.
 
அவர் பேசும் தோரணையே கொஞ்சம் கடுமையாகதான் இருக்கும். ஆனால், அவருடன் பழக பழக தான் எனக்கு அவரை பற்றி புரிந்தது. அவருக்கு சினிமாவை தவிர வேறு ஏதும் தெரியாது. சில பேர் உள்ளே அழுக்கை வைத்துக் கொண்டு வெளியில் அழகாக தெரிவார்கள். ஆனால், இயக்குனர் சாமி வெளியில் கொஞ்சம் முரட்டு தனமாக தெரிந்தாலும் அவரின் உள்ளம் அழகு. இவர் என் அண்ணன் மாதிரி எனக்கு ஆதி என பெயர் வைத்தது இவர் தான். படக்குழு அனைவர்க்கும் வாழ்த்துக்கள். இளையராஜா அவர்களின் இசை இதுபோன்ற படங்களுக்கு எப்படி இருக்கும் என்று ட்ரைலர் பார்க்கும் போதே தெரிகிறது. படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்”என்றார்.
 
இயக்குனர் சாமி பேசியபோது,”இந்த படத்தை நான் இயக்கியதற்கு ஒரு காரணம் உள்ளது. நான் பொறியாளன் என்றாலும் இலக்கியம் பயின்றேன். பார்த்திபன் சார், சேரன் சார் இவர்களிடம் பணியாற்றும்போது நான் சத்ய ஜித் ரே போன்று படம் இயக்கத்தான் வந்தேன். அதற்காக பாரதியாரின் புத்தகங்கள் 20 படித்தபின் எனது ஸ்கிரிப்ட்டை எழுதினேன். அதன்பின் “உயிர்” எனும் படத்தை பாசிட்டிவாக தான் எழுதி  கதை சொல்ல போனேன். சென்ற அனைத்து இடத்திலும் நிராகரித்துக் கொண்டே இருந்தார்கள். அப்போது, என்னுடன் உதவியாளராக இருந்த ஒருவர் “சார் ஸ்கிரிப்ட்டை நெகட்டிவாக மாற்றலாம்” என்று கூறினார்.
 
நானும் சரி என்று அண்ணி கதாபாத்திரத்தை நெகட்டிவாக மாற்றிய பின் ஐந்து தயாரிப்பாளர்கள் படத்தை எடுக்க முன் வந்தனர். அதன் பின்னரே உயிர் வந்தது. உயிர் படத்தை போல் அடுத்த படத்தை எடுக்க வேண்டாம் என முடிவு செய்து “சதம்” என தந்தை மகனை பற்றிய ஒரு கதை. ஆனால், அது தொடரவில்லை. அதன் பின்னரே “மிருகம்” படத்தை இயக்கினேன். அதாவது கதையை தேர்ந்தெடுக்கும் சூழலில் நான் இல்லை. அமீர் சார் பார்த்திபன் சார் அவர்கள் எல்லாம் அவர்களுக்கான கதையை தேர்ந்தெடுக்கும் இடத்தில் உள்ளார்கள். 
 
நேற்று பார்த்திபன் சாரின் “இரவின் நிழல்” படத்தை பார்த்தேன். அப்போது என்னிடம் 75 ஸ்கிரிப்ட் உள்ளது என்றார். நான் என்னிடம் 150 கதைகள் உள்ளது. என் அலமாரி முழுவதும் கதை தான் இருக்கிறது என்றேன். ஒவ்வொரு தயாரிப்பாளரிடமும் நான் நான்கு அல்லது ஐந்து கதைகளை கூறுகிறேன். அவர்கள் தான் கதையை தேர்ந்தெடுக்கிறார்கள் நான் இல்லை. அதனால் தான் “மிருகம்” இயக்கும் சூழல் உருவானது.
 
அதற்கு பின் “சரித்திரம்” என ஒரு ஆவணப்படம் இயக்கினேன். அது சிலம்பத்தை பற்றிய ஒரு ஆவணப்படம். மினி பாகுபலி போன்ற ஒரு படைப்பு அது. அதை ஒரு 11 ரீல்ஸ் எடுத்தோம். அதற்காக நிறைய படிக்க வேண்டியிருந்தது. பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டு இரண்டு வருடம் கழித்து எடுத்த படம். அதுவும் சரியாக வரவில்லை. 
 
அதன்பின், வயிற்று பிழைப்பிற்காக “சிந்து சமவெளி” படத்தை இயக்கினேன். அது பிழைப்பையே கெடுத்துவிட்டது. அடுத்தது கங்காரு படம் இயக்கினேன். என் பசங்களுக்கு நான் எப்போதும் படங்கள் போட்டு காட்டுவது உண்டு. அப்போது என் மகள் கேட்டால், அப்பா நீங்கள் எப்போதும் அனிமேஷன் படத்தை தான் காட்டுகிறீர்கள். சின்ன குழந்தைகள் நடித்த படங்கள் ஏதும் இல்லையா என்று கேட்டால். நானும் ஏன் இல்லை என்று “CHILDREN OF HEAVEN” படத்தை போட்டு காண்பித்தேன்.
 
அப்போது என் அக்காவும் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் மொழி புரியாவிட்டாலும் கூட படத்தை பார்த்து அழுது விட்டார். அவர் தான் “இது போன்ற படங்களை யாரும் இயக்க மாட்டார்களா’ என்று கேட்டார். நானும் சரி நான் எடுத்து விடுகிறேன் என்று மஜித் மஜிதி அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி ஆரம்பிக்கப்பட்ட படம் இது.
 
அதற்கு முக்கிய காரணம் என் தயாரிப்பாளர்கள் தான். எட்டு தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. ஷூவை ஹீரோவாக கொண்ட ஒரு கதையை இயக்க உதவியதற்கு மிக்க நன்றி.
 
நான் சிந்து சமவெளி படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நீங்கள் இந்த படத்தை ஓட வைத்தால் நான் இது போன்ற படங்களை மட்டும் தான் இயக்குவேன். இல்லையென்றால், என்னுடைய போக்கை மாற்றிக் கொண்டு வேறு விதமான படைப்பை கொடுப்பேன் என்று கூறினேன். நீங்கள் அந்த படத்தை ஓட வைக்கவில்லை. அதனால் நான் இந்த படத்திற்கு மாறி விட்டேன். நீங்கள் “அக்கா குருவி” படத்தை ஓட வைக்கவில்லை என்றால் நான் மீண்டும் உயிர், மிருகம் போன்று மூன்று அல்லது நான்கு மடங்கு சர்ச்சை படத்தை தான் இயக்குவேன். அது எனக்கு கவலை இல்லை உங்களுக்கு தான் கஷ்டம்.
 
நான் நல்ல படங்கள் இயக்க வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், நான் என்ன மாதிரியான படத்தை இயக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்யுங்கள். படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. இளையராஜா சார், ஓரிஜினலை விட நீ எடுத்த படம் படம் சிறப்பாக இருக்கிறது என்றார்.
 
நேற்று பார்த்திபன் சார் இயக்கிய இரவின் நிழல் படத்தை பார்த்து திகைத்து போனேன். பத்து படத்திற்கான உழைப்பை ஒரே படத்தில் உழைத்த திருப்தி அவரிடம் உள்ளது. படம் நன்றாக வந்துள்ளது, துணிச்சலாக திரையரங்கில் வெளியிடுகிறோம் அனைவரும் ஆதரவு தாருங்கள்,”என்றார்.
 
தயாரிப்பாளர் ஆதம் பாவா பேசியபோது,”அக்கா குருவி” இந்த படம் CHILDREN OF HEAVEN படத்தை அதிகார பூர்வ ரீமேக்கை சாமி எடுக்கிறார் என்று சொன்னதும் எனக்கு சிறிது ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், அரசியலுக்கு சுப்ரமணிய சாமி என்றால் சினிமாவிற்கு இந்த சாமி. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் CD க்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்த காலம் அது. அப்போது மக்கள் திரையரங்கிற்கு வரவேண்டுமென்றால், பருத்திவீரன், சுப்ரமணியபுரம் போன்ற படங்களை இயக்க வேண்டும். இல்லையென்றால், சாமியை போன்று சர்ச்சையான படங்களை எடுத்தால் தான் மக்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள் என்று கூறுவார்கள். 
 
இப்படத்தை நானும் பார்த்துவிட்டேன் மிக சிறப்பாக உள்ளது. படத்தை ரீமேக் என்று மாற்றங்கள் செய்து சொதப்பாமல், படத்தின் தன்மை கலையாமல் இயக்கியிருக்கிறார். உண்மையை சொன்னால் CHILDREN OF HEAVEN படத்தை விட இந்த படம் ஒரு படி மேல் என்று சொல்லலாம். இப்படிப்பட்ட ஒரு படத்தை தேர்வு செய்ததற்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த படத்திற்கு துணிந்து பணம் போட்ட அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
 
ஒரு ஷூவை வைத்து ஒரு படமா என்று யாரும் நினைக்காதீர்கள். CHILDREN OF HEAVEN படம் பார்த்தவர்களுக்கு அது தெரியும். நான் பணக்கார குடும்பத்தில் பிறந்தாலும் கூட, விளையாட்டு போட்டிகளில் சேருவதற்கு ஷூ தேவை. ஆனால், வீட்டில் வாங்கி தரமாட்டார்கள். சரி NCC பயின்றால் ஷூ கிடைக்கும் என்று அதில் சேர்ந்து ஷூவை வாங்கினால் அது காலுக்கு பொருந்தாதவாறு இருக்கும். பின்பு அதை மாற்றுவதற்குள் போராட வேண்டும். சம்பந்தபட்ட குழந்தைகளுக்கு தான் தெரியும். அதன் வலி, “கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை” என்பதை இந்த படம் பார்த்த பின் என்னால் உணர முடிந்தது.
 
இளையராஜா பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஐம்பது ஆண்டு காலமாக நமக்கு இசைப்பால் கொடுத்த தாய் அவர், அந்த தாய் ஒரு நாள் அசந்த சமயம் பார்த்து யாரோ கள்ளிப்பால் மாற்றி வைத்துவிட்டார்கள். அவரும் கள்ளிப்பால் கொடுத்து விட்டார். இருந்தாலும் அந்த தாயை நம்மால் ஒதுக்கி வைக்க முடியாது. இந்த படத்தில் அவரின் பாடல்கள் அனைத்தும் மிகவும் அற்புதமாக உள்ளது, ஒவ்வொரு காட்சியிலும் ராஜாவின் ராஜாங்கம் தான். அதனுடன் அற்புதமான ஒளிப்பதிவும் மிக சிறப்பாக இருந்தது.
 
அனைவரும் பான் இந்தியா படம் என கொண்டாடுகிறார்கள். சமீபத்தில் திரையரங்கு சங்க உரிமையாளர் அண்ணண் சுப்ரமணியம் கூட, சிறு படங்களுக்கு யாரும் திரையரங்கிற்கு வரப்போவதில்லை என்று சொன்னார். அதை பற்றி எந்த பயமும் தேவையில்லை. ஏனென்றால், அந்தந்த மண்ணிற்கு அதற்கான ஒரு தன்மை உண்டு. நம் உணர்வோடு படம் பார்க்கும் போது இந்த படத்தை திருப்பி திருப்பி பார்ப்போம். அனைவரும் இந்த படத்தை கொண்டாட வேண்டும். சாமி அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் நன்றி” என்றார்.
 
திரைப்பட விநியோகஸ்தர் பி.டி.செல்வகுமார் பேசியபோது, ” புதுமைப்பித்தன், புதுமை நாயகன், புரபஸர் என என்ன வேண்டுமெனலாம் சொல்லலாம். ஏனென்றால், திரு.பார்த்திபன் அவர்கள் மிகவும் போராடி வந்தவர். அவர் இங்கு இருப்பது மகிழ்ச்சி. போராடி ஜெயித்தவர்கள் தான் இறுதி வரை இருப்பார்கள். உதாரணத்திற்கு இயேசு, நபிகள் நாயகம், காந்தி அடிகள், போன்றவர்கள். அப்படிபட்ட ஒரு போராளியாக தான் நான் பார்த்திபன் அவர்களை பார்க்கிறேன். ஆதி அவர்களின் தந்தை மற்றும் அவர் அண்ணண் இயக்குனர் சத்யா இருவரும் எனக்கு நீண்ட கால நண்பர்கள்.
 
நான் விஜய் சார் படங்களை மார்க்கெட்டிங் செய்து கொண்டிருக்கும் போது மிருகம் படம் விநியோகம் செய்யும் வாய்ப்பும் கிடைத்தது. அப்போது தான் ஆதி அவர்களுடன் நட்பு உண்டானது. 25 லட்ச ரூபாய்க்கு வாங்கபட்ட படம் 1 கோடி ரூபாயை வசூல் செய்தது. சாமிக்கு மாபெரும் அடையாளத்தையும் கொடுத்த படம் அது. அவரின் ஒவ்வொரு படத்திற்கும் அவருக்கென தனி அடையாளம் உள்ளது. ஆனால், பத்திரிகையாளர்கள் அவரை சரிவர அங்கீகரிக்கவில்லை என்று தான் தோன்றுகிறது.
 
அவர் இயக்கும் படங்களின் மேல் கவனத்தை கொண்டு வர தான் அவர் ஒரு சில விஷயங்களை செய்கிறார். மற்றபடி நல்ல படைப்பாற்றலை கொண்டவர் தான்  சாமி. “அக்கா குருவி” படத்தை வியாபாரத்திற்காக பார்த்தேன். மிக அற்புதமான ஒரு படம். நான் தற்போது சினிமா சம்பந்தபட்ட விஷயங்களுக்கு பெரிதாக வருவதில்லை. சமூக பணி செய்ய துவங்கிவிட்டேன். ஆனால், இந்த படம் அக்கா குருவியை பார்த்த போது கடைசி காட்சிகளில் அழுகை வந்தது. அக்கா குருவி முன்பு, பின்பு என சாமியை பார்க்கும் அளவிற்கு அற்புதமாக இயக்கியிருக்கிறார். இதற்கு முன் சர்ச்சை என சிக்கியிருக்கலாம். ஆனால், இந்த படத்திற்கு பின்பு எப்படி பாலச்சந்தர் அடையாளம் காண்பிக்கபட்டரோ அதே போல் சாமியும் அவருக்கான அடையாளத்தை காணுவார். 
 
இந்த படத்தின் ஒளிப்பதிவை பார்த்தபோது அந்த கிராமத்திலேயே வாழ்ந்தது போல் ஒரு உணர்வை தந்தது. மேகம், பனிமூட்டம் என அனைத்தையும் அழகாக காட்சி படுத்தியிருக்கிறார். இந்த படத்தில் ஷூ தான் ஹீரோ என்று சொன்னார்கள். என்னை பொறுத்தவரை இந்த படத்தை எடுக்க துணிந்த தயாரிப்பாளர்கள் எட்டு பெரும் தான் உண்மையான ஹீரோக்கள். இதே போல் குழுவாக வந்து நல்ல கலைஞர்களையும், நல்ல படைப்புகளையும் உருவாக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள். 
 
அண்ணன் தங்கையின் பாசத்தை உறவை அவர்கள் இடும் சண்டைக்கு மத்தியில், தங்கைக்கு ஒரு துன்பம் என்றால் அண்ணன் எப்படி துடித்து போகிறான் என்ற பந்தத்தை அழகாக காட்டும் படம் இது. இதில் நடித்த அனைவரும் மிக சிறப்பாக நடித்துள்ளனர்.  இந்த படத்தில் நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரங்கள் வாழ்க்கையில் பெரிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்று நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். கோடைகாலம் வந்துவிட்டது, குழந்தைகள் பார்ப்பதற்கு சரியான படம் இது. இந்த படத்தை பார்த்துவிட்டு அனைவரும் முடிந்த அளவிற்கு கருத்துக்களை பதிவிட வேண்டும்” என்றார்.
 
வரவேற்புரை வழங்கிய தயாரிப்பாளர் நடிகர், வி.எஸ்.குமார் பேசியபோது,,”இங்கு வந்திருக்கும் சகோதரர் அண்ணன் பார்த்திபன் அவர்கள், இல்லை இல்லை தயரிப்பாளர் அதுவும் இல்லை நடிகர், சார் என்ன சொல்லி தங்களை அழைப்பது? ப்ரோபஸ்ஸர் ஆஃப் சினிமா என்று அழைக்கலாம். ஏனென்றால், புதிய பாதையில் ஆரம்பித்து, திரும்ப திரும்ப புதிய பாதையில் போய்க்கொண்டே இருக்கிறார். இறுதியாக, புதிய பாதையில் சென்றுக் கொண்டிருக்கும் போது ஒத்த செருப்பு படத்தை இயக்கினார். தற்போது, ஒரு அருமையான படத்தை எடுத்து வெளியிட தயாராக வைத்துள்ளார். படம் பார்த்த என் நண்பர்கள் படம் மிகவும் அருமையாக வந்திருக்கிறது என்று கூறினார்கள்.
 
எதிர்காலத்தில் வரும் இயக்குனர்களுக்கு இவர் ஒரு புத்தகமாக தான் திகழ்வார். அதனால், தான் இவரை ப்ரோபஸ்ஸர் என்று கூறினேன். அடுத்தது, அண்ணன் அமீர் அவர்கள் அவருக்கும் எனக்கும் ஒரு மிக நெருக்கம் உண்டு. ஏனென்றால், நாங்கள் இருவரும் மதுரைக்காரர்கள். அமீர் அண்ணனின் நண்பர்கள் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள். அவருக்கு மதுரையில் மாபெரும் தம்பிகள் பட்டாளம் உள்ளது. அவர் சிறு வயதிலிருந்தே சினிமா மீது மோகம் அதிகம்.
 
அதன்பின் அவர் மதுரையில் இல்லை. எனக்கும் அவரை பார்த்தால் சிறிது பயம். அதனால், நானும் பேசியது இல்லை. அவர்களின் தம்பி சிலரிடம் அமீர் அண்ணனை பார்த்தீர்களா? பேசினீர்கள்? என்று கேட்பேன். அமீர் அண்ணனை பற்றி பேச வேண்டுமென்றால், அம்மா அப்பாவிடம் எந்த அளவு பேசவேண்டும், ஆண்டவனிடம் வேண்டினாள் என்ன கேட்க வேண்டும் என்பது போன்ற தகுதியான பேச்சை மட்டுமே பேசுபவராக அவர் அவரை செதுக்கிக் கொண்டுள்ளார். சிறுவயதில் இருந்தது போன்று அவர் இப்போது இல்லை என்று தெரிவித்தனர். 
 
அடுத்தபடியாக, ஆதி சார் அவர்கள், தமிழ் நாட்டில் மிருகம் படத்தில் மிருகமாகவே வாழ்ந்திருப்பார். சாமி சார் அவர்களுக்கு என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை. அழகாக இருப்பவர்களையும் கூட அழுக்காக காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார். என்னையும் இந்த படத்திற்கு அழைத்து வந்து படாதபாடு படுத்திவிட்டார்.
 
சாமி அவர்கள் எனக்கு நீண்டகால நண்பர். என்னை சாமியிடம் அறிமுகப்படுத்தியது வேலு என்ற நண்பர் தான். அவரால் இங்கு வர இயலவில்லை. சாமி சார் மிகவும் நல்ல கதைகளை வைத்துள்ளார். ஆனால், அதை படமாக்குவதற்கு தயாரிப்பாளர்கள் தான் முன் வருவதில்லை. பட வேலைகளை துவங்கினாலும் அது பாதியில் தடைபட்டு விடுகிறது. பல சிரமங்களை தாண்டி மீண்டும் இங்கு வந்திருக்கிறார்.
 
ஒரு நாள் நண்பர்கள் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, நாம் அனைவரும் இணைந்து ஏன் ஒரு படத்தை எடுக்க கூடாது என்று கேட்டபோது, முதலில் CHILDREN OF HEAVEN படத்தை திரையிட்டார். இந்த படத்தை கண்டிப்பாக நாம் எடுக்க வேண்டும் என நான் கூறினேன். அதன் பின் உருவான படம் தான் இது. படத்தை பெரிய நடிகர்கள் வைத்து இயக்கினால் செலவு அதிகமாகும் என்பதால் நாங்கள் பெரிய நடிகர்களிடம் போகவில்லை.
 
படத்தின் பூஜை போட்டவுடன் இரண்டு நாட்கள் கழித்து என்னை சாமி அவர்கள் அழைத்தார். உங்களுக்கு கோவில் சீகுவென்ஸ் இருக்கிறது வாருங்கள் என்றார். நானும் கிளம்பி வத்தலகுண்டு தாண்டி விட்டேன். அப்போது மீண்டும் அழைத்து என்னை ஆனந்த விகடன் வார இதழை வாங்கி வருமாறு சொன்னார். நானும் இவர் ஆனந்த விகடன் பிரியர் என நினைத்து வாங்கி சென்றுவிட்டேன். 
 
பார்த்தால் அப்போது அந்த பத்திரிகையில் இளையராஜாவில் 75வது ஆண்டிற்கான சிறப்பு பெட்டியை பதிவு செய்திருந்தனர். அப்போதில் இருந்தே எங்களுக்கு ஆசிர்வாதம் கிடைத்திருக்கும் போல, அந்த பேட்டியில் அவர் CHILDREN OF HEAVEN படத்தை அவர் குறிப்பிட்டிருந்தார். நாங்கள் அவரை தொடர்பு கொண்டபோது, எங்களை பாராட்டுவார் என்று நினைத்தோம்.
 
ஆனால், நிறைகுடம் தழும்பாது என்பது போல, சரி படத்தை முழுவதும் முடித்து விட்டு வாருங்கள் நான் இசையமைக்கிறேன் என்றார். படத்தை அவரிடம் கொண்டு சென்றதும் பார்த்துவிட்டு நெகிழ்ந்தார். நாங்களும் இந்த இந்த இடத்தில் பாடல்கள் வேண்டும் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டோம்.
 
சில நாட்கள் கழித்து மீண்டும் இளையராஜா சாரை பார்க்க சென்றோம். அப்போது வெளியில் இருந்த அவரின் உதவியாளர் என்னவென்று தெரியவில்லை நேற்று மீண்டும் சார் உங்கள் படத்தை பார்த்துக் கொண்டிருந்தார் என்றார். எங்களுக்கு ஏதேனும் தவறு ஒரு சிறிய தவறு செய்துவிட்டோமோ என்று பயம். அவரை பார்க்க உள்ளே சென்றதும், படத்தை பார்க்கிறீர்களா என்று கேட்டார். இல்லை நீங்கள் முழுவதுமாக இசையமைத்த பின் பார்க்கிறோம் என்றோம்.
 
படம் அற்புதமாக இருக்கிறது சாமி அழகாக இயக்கியிருக்கிறீர்கள் என்று அவர் சொன்னதும் தான் எங்களுக்கு உயிரே வந்தது. ஒளிப்பதிவாளர் மிகவும் அற்புதமாக அவரின் வேலையை செய்திருக்கிறார். படத்தை விரிவாக கவனிப்பதற்காக மீண்டும் ஒரு முறை பார்த்தேன் என்றார். மணிகண்டன் அவர்களுக்கு மிகவும் நன்றி. அவருக்கு கொரோனா காலத்தில் மிக சிரமம் இருந்தது. அவரின் தந்தை மறைவு, பணச்சிக்கல் என பல சிரமங்கள் இருந்த போதும் இந்த படத்தை மிக அழகாக படத் தொகுப்பை செய்திருக்கிறார். அனைவரும் படத்தை பார்த்து உங்கள் கருத்தை பகிருங்கள்” என்றார்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *