வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, இரு வேடம் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா , ரவீனா டாண்டன் ஆகியோரின் நடிப்பில் கமல்ஹாசனின் தாயம் என்ற நாவலில் இருந்து அவரால் விரிக்கப்பட்டு அவராலேயே கதை திரைக்கதை வசனம் எழுதப்பட்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2001 நவம்பர் 14 அன்று தமிழிலும் அடுத்த நாள் நவம்பர் 15 அபய் என்ற பெயரில் இந்தியிலும் (பயமற்றவன் என்று பொருள் ) வெளிவந்த படத்தின் மறுவெளியீடு .
ஒரே தோற்றம் உள்ள ஒரு மிருகம் , ஒரு பழக்கப்பட்ட மிருகம் என்ற விதத்தில் இரண்டு கதாபாத்திரங்களை வைத்து கமல் எழுதிய நாவல் அது .
அப்பாவின் (மிலிந்த் குனாஜி) தவறான நடவடிக்கைகளால் அம்மா (அனு ஹாசன்) இறந்து விட, , மூத்தார் பிள்ளைகளை வெறுக்கும் இரக்கமில்லாத சித்தி…. என்ற நிலைக்குக் கூட தகுதியற்ற ஒருத்தி (கிட்டு கித்வானி) சித்தியாக வர, அவளின் தவறான நடவடிக்கைகள் மூத்தாரின் இரண்டு ஆண் பிள்ளைச் சிறுவர்களுக்கும் தெரிய வர, அதை அறிந்த சித்தி மேலும் கொடூரமாக, புரியாத அப்பா போதையில் பிள்ளைகளை அடித்து நொறுக்க,
மூத்தாரின் சகோதரர் (விக்ரம் கோகலே) , தான் வளர்ப்பதற்காக ஒரு பிள்ளையையாவது கொடுக்கச் சொல்லிக் கேட்க, டாஸ் போட்டுப் பார்த்ததில் விஜய் என்ற சிறுவன் அவரோடு போய் மிலிட்டரி மேஜர் ஆக,
நந்தகுமாரன் என்ற நந்து தொடர்ந்து சித்தியின் கொடுமைக்கு ஆளாகி , மொட்டையடிக்கப்பட்டு (அதற்கான காரணம் கண்ணீர்க் கவிதை) , ஒரு நிலையில் பீர் பாட்டிலால் சித்தியால் தலையில் அடிக்கப்பட்டதால் மன நிலை பாதிக்கப்பட்டு , அப்பா சாகும் நிலையில் , சித்தியைக் கொன்று , அவன் மேலேயே அவள் பிணமாக விழ , ஒரு கொடூரக் கூந்தல் முகத்தில் மோத, அடிக்கடி வன்மையாக மூச்செறியும் அணிச்சைச் செயலுக்கு ஆளாகி,
மன நல மருத்துவமனையில் அடி உதைகளுக்கு மத்தியில், பழக்கப்படாத பயமற்ற யானை பலம் கொண்ட கொடிய மிருகமாக மாறி, உருவேறி நிற்க,
விஜய் திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண்ணை ( ரவீணா டாண்டன் ) சித்தியாக நினைத்துக் கொண்டு அவளைக் கொலை செய்ய சிறையில் இருந்து தப்பித்து வெளியே வந்து வழியில் முரட்டு செக்ஸ் விரும்பும் ஒரு போதைக்காரப் பாடகியை (மனிஷா கொய்ராலா ) கொன்று ,
விஜய்யின் மனைவியைக் கொல்வதற்கு வர , விஜய்யும் நந்துவும் சந்திக்கும்போது என்ன நடந்தது என்பதுதான் ஆளவந்தான்
நந்துவாக பிரம்மப் பிரயத்தனம் செய்து மாறிய கமல்ஹாசன் அதற்கு வசதியாக விஜய்யாக நடித்த காட்சிகளை எல்லாம் எடுத்து முடித்து விட்டு பின்னர் நந்துவாக ராட்சஷ உருவம் எடுத்து நடித்த படம் இது .
ரிலீஸ் சமயத்தில் அன்றைய ரசிகர்களின் ரசனைக்கு அப்பாற்பட்ட வரவேண்டிய காலத்துக்கு முன் கூட்டியே வந்த முன்னோடிய படமாக இருந்த காரணத்தால் , வெகுஜன மக்களில் ஒரு பிரிவினர் பார்க்க விரும்பாத படமாக மாறி தமிழ் , இந்தி இரண்டிலும் தோல்வியைத் தழுவினாலும்…. கமலின் நடிப்பு இமயத்தில் தானும் ஒரு சிகரமாக நின்ற படம் ஆளவந்தான்.. அந்த ஆண்டு ஸ்பெஷல் எபெக்ட்டுக்காக தேசிய விருது பெற்ற படம். அடுத்த சில வருடங்களில் மிகச் சிறந்த படைப்பாகக் கொண்டாடப்பட்டது .
இப்போது ரிலீஸ் ஆகி இருக்கும் பதிப்பு எப்படி இருக்கிறது ? பார்க்கலாம்
நாற்பத்தைந்து நிமிடம் படத்தில் குறைத்து இருக்கிறார்கள் . (பூவிலங்கு மோகன் காட்சிகள் இப்போது படத்தில் இல்லை) அப்போது மாற்று இயலாக ( non linear ) சொல்லப்பட்ட படம் இப்போது நேரியலாக ( linear) மாற்றப்பட்டு இருப்பதால் , சில காட்சிகள் இடைவேளைக்கு முன்னும் பின்னும் என்று இடம் மாறி இருக்கின்றன. இவற்றால் படத்தின் வேகம் சும்மா கும்மென்று கூடி இருக்கிறது .
அன்று வரைகலை என்பது தலையைக் கிள்ளி போடுகிற வேலை. இன்றைக்கு அது நகத்தை கிள்ளிப் போடுகிற மாதிரி . எனினும் படத்தின் வரைகலை மற்றும் ஸ்பெஷல் எபெக்ட்டுகள், இன்றைய படங்களைப் பார்த்து சவால் விடுகின்றன .
(அதீத செலவு, ஏகப்பட்ட ரீ ஷூட் என்று அப்போது சொல்லப்பட்டாலும் கூட அதையு ம் மீறி ) கமல் என்னும் மகா கலைஞன் இருபத்தி இரண்டு ஆண்டுகள் கழித்து இரண்டு மடங்கு அதிகமாகவே பிரம்மிக்க வைக்கிறார். நந்துவாக மாற அவர் போட்டு இருக்கும் இமாலய உழைப்பு அதை விட சிறப்பான நடிப்பு …. கால் கண்கள் சொருக , முப்பது சதவீத போதை மயக்கத்தில் அவர் நந்துவாக அவர் பேசும் முதல் காட்சி….. .,
போதை பிளஸ் செக்ஸ் உணர்வு தூண்டும் மருந்துகளை எடுத்த நிலையில் ஐஸ் தண்ணீரில் இருந்து எழுந்த நாய் போல அவர் தலையை உதறிக் குலுக்கிக் கொள்வது … ஒவ்வொரு முறையும் அந்த வன்மையான மூச்செறிவை அவர் செய்யும் விதம், மனிஷா கொய்ராலா கதாபாத்திரத்தை சித்தி என்று எண்ணிக் கொன்று விட்டு , அம்மா உணர்வாக வந்து பேசும்போது எல்லாவற்றையும் உல் வாங்கி அவர் கதறி அழும் உயிர்ப்பு… உடம்பு விதிர் விதிர்த்துக் கண்ணில் நீர் நிறைகிறது . லவ் யூ கமல் சார் .
சிறுவயது வீட்டுக்கு ரொம்ப வருடங்கள் கழித்து நந்து போகும் போது அங்கு இருக்கும் சூப்பர் மேன் ஓவியத்துக்கு ஜஸ்ட் லைக் தட் ஒரு ஹாய் சொல்வார். அப்போது அதை பார்த்தபோது தியேட்டரில் நான் மட்டும் கைதட்ட, பக்கத்தில் உட்கார்ந்து இருந்தவர்கள் எல்லாம் என்னை கொலைவெறியோடு பார்த்தார்கள். இப்போது பலரும் அதற்கு கைதட்டுவதைப் பார்க்கும் போது பெருமையாக இருந்தது .
ரவீணா அப்போதே வீணா தான் தெரிந்தார். இப்போதும் மாற்றமில்லை
கொடுமைக்கார சித்தியாக வரும் கிட்டு கித்வானி இப்போதும் மிரட்டுகிறார் . மிலிந்த் கதாபாத்திரத்துக்கு நாசர் கொடுத்திருக்கும் குரல் இப்போதும் அதே ரசனையோடு ரசிக்கப்படுகிறது.
பாடலும் நந்துவின் கவிதைகளும் வைரமுத்து என்று டைட்டில் போடுகிறார்கள் . ஆனால் அதில் பட்டினத்தார் பாட்டும் இருக்கு
சிறையில் இருந்து தப்பியது நந்துதான் என்று விஜய் கூற, அதை மறுத்து ”இல்லை அது சுல்தான் ( ரியாஸ்கான்) ”என்று மனநல மருத்துவர் ( மதுரை ஜி எஸ் மணி) சொல்வது அப்போதே ஏற்கும்படி இல்லை . திரைக்கதையின் இழுவை என்றே உணரப்பட்டது . இப்போது கோபமே வருகிறது .
கொண்டாடத்தக்க இன்னொரு விஷயம் .. எல்லோரும் அறிந்த கடவுள் பாதி மிருகம் பாதி பாடல் அன்று கமல் குரலாலும் நடிப்பாலும் தனித்தன்மையாக தெரிந்தது . இன்று அப்படியே .
ஆனால் எத்தனை பேர் அப்போது கவனித்தார்கள் என்று தெரியவில்லை. மனிஷா கொய்ராலா கமல் ஆடும் மழை டான்ஸ் அதே பாடலின் பெண்ணியப் பதிப்பு (female version)
இதைக் கூட தெரியுமே என்று சொல்லலாம் . ஆனாலும் யாரும் கவனித்து இருக்க முடியாத விஷயம் ஒன்று சொல்கிறேன் .
அதே பாடலின் மெட்டு அனுஹாசன் நந்துவைக் கொஞ்சும் காட்சியில் தாய்மைப் பதிப்பாக (mother’s version) ஆக கருப்பொருள் இசையாக ( theme music ) வருவது இப்போது புரியும்போது கிடைக்கும் சுகமே தனி . அந்த வகையில் ஆளவந்தான் இப்போதும் அசத்த வந்தான் ஆகவே இருக்கிறான்.
விஜய் மற்றும் அவனது மனைவியை நந்து கொலைவெறியோடு காரில் துரத்த , கார் மோதி உருண்டு பயந்து தொடர்ந்து காரில் பயணிக்கும் ஒரு ஷாட்டில், ரவீனா டாண்டன் கொஞ்சம் கூட பதட்டம் இல்லாமல் ஏதோ இயற்கைக் காட்சிகளை ரசிக்கும் பாவனையில் உட்கார்ந்து இருக்கிறார் . அப்போது அவசரத்தில் படத் தொகுப்பில் கவனிக்காமல் விட்டு விட்டது ஒகே. இப்பவுமா அப்படியே விட்டு இருப்பது ?
விஜய் நந்து மோதும் கிளைமாக்ஸ் சண்டை இப்போது இன்னும் இன்னும் பிரம்மிக்க வைக்கிறது .
நந்து வின் அம்மா கேரக்டர் வந்து, ‘ இதுக்கு மேல இந்த படம் ஓடினா நாடு தாங்காது’ என்று முடிவு செய்தது போல, திடீர் என நந்துவிடம் வந்து , ‘விஜய் மனைவி நல்லவடா …அவ உன் சித்தி மாதிரி இல்ல’ என்று சொல்வது , ஒரு வகையில் சூப்பர் லாஜிக் என்றாலும் படமாகப் பார்க்கும்போது அன்றைக்கே டமால் என்றுதான் இருந்தது . இன்றைக்கு பெரிய பள்ளமாக தெரிகிறது .
அதுபோல “அப்படியா சாரி சொல்லிடு .. ” என்று சொல்லி விட்டு நந்து சாக முடி செய்வது இன்னும் படார் . அதே போல அவரிடம் நெருப்பு பற்ற வைக்க பெட்டி இருப்பது மடால்.
இவை எல்லாமும் கூட சூப்பர் லாஜிக் வகையில்தான் வரும் என்றாலும் ஆளவந்தான் படத்தை அன்றைக்கு குப்புறத் தள்ளி குழி பறித்தது இந்த ஏரியாதான் . இப்போது அது இன்னும் பெரிய குறையாகவே தெரிகிறது .
உண்மையில் படத்துக்கு நந்துவின் பலமும் விஜய்யின் அறிவும் கொண்ட திரைக்கதை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சுல்தானின் அறிவும் அந்த ஒல்லியான மன நல மருத்துவரின் பலமும் கொடுக்கப்பட்டதுதான் அன்றைக்கும் இன்றைக்கும் பின்னடைவாகத் தெரிகிறது .
எனினும் தாணுவின் தாராளத் தயாரிப்பு , கமலின் பிரம்மிக்க வைக்கும் நடிப்பு , சுரேஷ் கிருஷ்ணாவின் தொழில் நுட்ப நேர்த்தியான இயக்கம் இவற்றால்….
இப்போதும் தியேட்டரில் பார்த்துப் பிரம்மிக்கத்தக்க ஒரு படைப்பாகவே இருக்கிறது ஆளவந்தான்.
பாத்துட்டு வாங்க .. இப்ப நாம பாக்கிற பல படம் எல்லாம் படமே இல்ல. நமுத்துப் போன பப்படம் என்பது புரியும்.