ஜி.கே. அறிவுச் சோலை திரைப்பட நிறுவனமும் அப்போலின் ரியல்டர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க , கரிசல் மண் படத்தை இயக்கிய சுப.தமிழ்வாணன் இயக்கும் இரண்டாவது படம் ஆனந்த மழை.
மு.களஞ்சியமும் சிங்கமுத்துவும் இரண்டு தோற்றங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில் ஜெய் ஆனந்த் , சிவா மற்றும் சுப.தமிழ்வாணன் ஆகிய ஐவரும் கதை நாயகர்களாக நடிக்க . (விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ள களஞ்சியம் பூரண குணம் அடைய பிரார்த்தனைகள் !)
விகீதா, சரோஜாதேவி ஆகிய புதுமுகங்கள் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
ஈழத்துக் கவிஞர் தேனிசை செல்லப்பாவின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை தூண்டுகோலாக கொண்டு..
தமிழ் நாட்டு அகதி முகாம்களில் ஈழத் தமிழர்களுக்கு ஏற்படும் துயரங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் இது.
இலங்கையில் இருந்து வாழ்வதற்காக தமிழகம் வந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளில்,
அடிப்படை வசதி கூட இல்லாத நிலையில் பல இன்னல்களுக்கு இடையில் இருவர் மரணம் அடைய,
மூன்று பேர் அங்கிருந்து தப்பி சென்னைக்கு வந்து ஒரு கவிஞர் வீட்டில் தங்கி…
அந்த கவிஞர் மூலம் தமிழகத்தில் அகதி முகாம்களில் ஈழத் தமிழர்கள் படும் கஷ்டங்களையும் அங்குள்ள குறைகளையும் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட செய்யும் முயற்சிகள்தான் இந்தப் படம் .
நிறைய ஈழத் தமிழ் பாடல்களுக்கு இசை அமைத்த ஸ்டீபன் ராயல் இந்தப் படத்துக்கு இசை அமைத்துள்ளார்
படம் பற்றிக் குறிப்பிடும் இயக்குனர் சுப.தமிழ்வாணன் ” தமிழகத்தில் உள்ள 144 முகாம்களுக்கும் நேரில் சென்று அவற்றை பார்த்த பிறகே இந்தப் படத்தை துவங்கினேன்.
இலங்கையில் கஷ்டப்பட்டு இங்கு வரும் தமிழர்கள் இங்குள்ள முகாம்களில் மேலும் கஷ்டப்படுகிறார்கள்.
இலங்கையில் உள்ள முள்வேலி முகாமை நீக்குவதற்கு முன்பு தமிழகத்தில் உள்ள இந்த அகதி முள்வேலி முகாம்களை அகற்ற வேண்டும் .
இந்தப் படத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் முகாம்களின் நிலையை யார் மனமும் புண்படாத வகையில் தமிழக அரசுக்கு சொல்கிறோம்
யாருமே இல்லாதவர்களை அகதிகள் என்று சொல்ல வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு நாம் இருக்கிறோம்.
எனவே ‘அவர்கள் அகதிகள் அல்ல. அவர்களை புலம் பெயர்ந்தவர்கள் என்றே சொல்ல வேண்டும்’ என்று,
இந்தப் படத்தில் மு.களஞ்சியம் கதாபாத்திரம் மூலம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்.
தமிழக முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்கள் சார்பாக அவர்களின் வலிகளைச் சொல்லும் படமாக இந்தப் படம் இருக்கும் ” என்கிறார்
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கவிஞர் தேனிசை செல்லப்பா மற்றும் மதிமுக பிரமுகர்கள் கலந்து கொள்ள,
பாடல்களை சீமான் வெளியிட்டார் .
தனது பாடல்களை பற்றியும் அதற்கு ஸ்டீபன் அளித்த இசை பற்றியும் நெகிழ்வும் உணர்வுமாய் பேசினார் தேனிசை செல்லப்பா .
விழாவில் பேசிய சீமான் “என் வீட்டில் வளர்ந்த பிள்ளை சுப.தமிழ்வாணன்.
அவனுக்கு நான் நல்ல சினிமா எடுக்கக் கற்றுக் கொடுத்தேனா என்று தெரியாது .
ஆனால் என் வீட்டில் உணவு உண்டபோது அப்படியே தமிழ் உணர்வையும் உண்டு வந்திருக்கிறான் என்பது இந்தப் படத்தின் கதை மூலம் விளங்குகிறது .
தனது பெயரில் கூட முதல் எழுத்துகளாக ‘சுப’ என்று தமிழில் போட்டு இருக்கிறான்.
உலகிலேயே முதல் எழுத்துக்களை மட்டுமாவது ஆங்கிலத்தில்தான் போடுவேன் என்று அடம் பிடித்து இரண்டு மொழிகளில் கையெழுத்துப் போடுகிற ஒரே கேவலமான ஆட்கள் நம்மவர்கள்தான் ” என்றார் .
படத்தின் இயக்குனரான சுப.தமிழ்வாணன் குரு சுக்ரன், நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க முதலிய படங்களில் நடிக்கவும் செய்கிறார்.
இது தவிர ஆனந்த மழை படத்தை சுப.தமிழ்வாணன் இயக்கும் விதம் பார்த்து வியந்த சிங்கமுத்து , அடுத்து தனது மகன் வாசன் கார்த்திக்கை கதாநாயகனாக வைத்து தயாரிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பை சுப. தமிழ்வாணனுக்கே தந்துள்ளார் .