
ஒய்யாரமாய் உடலழகு காட்டி ஓகோ என்று கொட்டி முழக்கிய நடிகைகள் எல்லாம், ஒரு காலத்துக்குப் பிறகு உடலை முழுக்க மூடிக் கொண்டு பதவிசான குடும்பக் குத்து விளக்குகளாக தொலைக்காட்சித் தொடர்களில் வளைய வர வேண்டும் என்பது தொல்காப்பியன் எழுத மறந்த மெய்ப்பாட்டியல் விதிகளில் ஒன்று .
ஆகஸ்டு 18 ஆம் தேதியில் இருந்து திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பாக இருக்கு உயிர்மெய் என்ற தொடரில் கதைநாயகி பிளஸ் கதாநாயகியாக டாக்டர் கவிதா சந்தீப் என்ற கேரக்டரில் நடிப்பதன் மூலம் சின்னத்திரைக்குள் நுழைகிறார் அமலா.
உலகத் தரத்தோடு இயங்கி வரும் ஒரு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் தலைமை மருத்துவரான அமலா… அவரது தலைமையில் இயங்கும துடிப்பான மருத்துவர்கள் குழு.. அவர்களது தொழில் மற்றும் தனி வாழ்க்கை…. அங்கு வரும் நோயாளிகள்…. அவர்களின் வாழ்வு…. என்ற ரீதியில் கதை போகும் இந்தத் தொடரை ‘கண்ட நாள் முதல்’ மற்றும் ‘கண்ணா மூச்சி ஏனடா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வி. பிரியாவும் அவரோடு சேர்ந்து பூஷணும் இயக்குகிறார்கள்.
இதற்காக சென்னை அம்பத்தூரில் ஒரு கட்டிடத்தில் 20000 சதுர அடி பரப்பளவில் தோட்டா தரணி அமைத்துள்ள மருத்துவமனை அரங்கில் படபிடிப்பு நடந்து கொண்டு இருக்கிறது.

தொடருக்கான அறிமுக நிகழ்ச்சிக்காக ஊடகத்தினரை சந்தித்தார் அமலா.
” நான் தமிழ்நாட்டை விட்டுப் போய் இருபது வருஷம் ஆச்சு. கல்யாணம் குடும்பம்னு செட்டில் ஆகிட்டேன் . அப்புறம் ஆதவற்ற வீட்டு விலங்குகளை பராமரிக்கும் பணியில் மன நிறைவோடு இருந்தேன் . நடிக்க வந்த பல வாய்ப்புகளை தவிர்த்தேன் . இப்போ என் பிள்ளைகள் என்னை விட உயரமா வளர்ந்துட்டாங்க .


நிகழ்ச்சியில் தொடரின் டைட்டில் பாடல் மற்றும் சில காட்சிகளை போட்டுக் காட்டினார்கள் .
பிரியாவிடம் தனிப்பட்ட முறையில் “பொதுவாக இப்போ தனியார் மருத்துவமனை என்றாலே மக்களிடம் காசு பிடுங்கும் இடமம் என்பதுதான் யதார்த்தம். ஆனால் ஒரு உயிரைக் காப்பாற்ற இந்த டாக்டர்கள் எல்லாம் உயிரைக் கொடுத்து போராடுவது போல காட்டுகிறீர்களே . நியாயமா ? என்று நான் கேட்டபோது “இவங்களை பார்த்து அவங்க எல்லாம் திருந்த நினைக்கட்டுமே ” என்றார்.
“அத்தி பூத்தாற்போல யாராவது ஒருவர் நல்ல டாக்டராக இருந்தாலும் நிர்வாகம் அனுமதிப்பது இல்லையே ?” என்று கேட்டேன் . “இதையும் கதையில சேர்த்து எடுத்துருவோம் ” என்றார் .
ராயல்டி வந்துடும்ல ?