ஆம்பள @ விமர்சனம்

ambala 1

ஊட்டியில் பொதுக் கூட்டங்களுக்கு ஆள் பிடித்துத் தரும் ஏஜண்டான விஷால் , அங்கே படிக்க வரும் ஹன்சிகாவின் ‘பின்புற’த்தைப் பார்த்து அவர் மேல் காதல் வயப்படுகிறார் . (அட ஆமாங்க .. இது யூ சர்டிஃபிகேட்  படம் !) சப் இன்ஸ்பெக்டர் சந்தானமும் ஹன்சிகா மீது ஆசைப்பட ”அதெல்லாம் பணக்கார பொண்ணு நம்மளால மெயின்டெய்ன் பண்ண முடியாது” என்று கூறி சந்தானம் மனதை மாற்றிவிட்டு , ஹன்சிகாவை தனக்கு கரெக்ட் செய்து கொள்கிறார் விஷால். 

விஷயம் அறிந்த சந்தானம் பதிலுக்கு  வைபவின் உதவியோடு விஷால் — ஹன்சிகா காதலைப் பிரிக்கிறார் . சொந்த ஊருக்கு போய் விட்ட ஹன்சிகாவை நினைத்து விஷால் தண்ணி அடிக்க,  காதல் பிரிவுக்கு காரணமான வைபவே , விஷாலை வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்க்க, விஷாலின் நிலை எண்ணி அழும் அம்மா,  விஷாலின் அப்பா பற்றி சொல்கிறார் . 
விஷாலின் தந்தையும் ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவருமான  பிரபுவுக்கு,  கல்யாணத்துக்கு முன்னரே ஒரு காதல் இருப்பது தெரிந்த நொடி, விஷாலின் அம்மா தனது இரண்டு மகன்களில் மூத்தமகனான சிறு வயது விஷாலை மட்டும் அழைத்துக் கொண்டு,  இரண்டாவது மகனை அங்கேயே விட்டு விட்டு,   கணவர் பிரபுவைப் பிரிந்து வந்து விடுகிறார். 
இப்போது அம்மா மூலம் அதை அறிந்து கொண்ட விஷால் வைபவுடன் மதுரைக்கு சென்று தனது அப்பா பிரபுவையும் அவருடன் இருக்கும் தனது தம்பி கருணாவையும் கண்டு பிடிக்கிறார் , திருடர்களாக !
ambala 3
காரணம் என்ன என்று விசாரித்தால் , பிரபுவின் வீட்டில் வேலை செய்த ஒரு வேலைக்காரன் பிரபுவின் தந்தையான விஜயகுமாரை கொலை செய்துவிட்டு  பழியை பிரபு மீது போட்டு ஜெயிலுக்கு அனுப்புகிறார் .  தந்தையை கொன்றது அண்ணன்  பிரபு தான் என்று நம்பும்  பிரபுவின் மூன்று தங்கைகளும் (ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண்) பிரபு மீது தீராக் கோபம் கொள்கிறார்கள். பிரபு தன் மீது உள்ள சொத்துக்களை எல்லாம் தங்கைகள் பேரில் எழுதி வைத்து விட்டு,  ஊரை விட்டுப் போய்விடுகிறார். 
எனினும் கோபம் அடங்காத மூன்று தங்கைகளும்,  செத்த அப்பாவோடு சேர்த்து உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அண்ணனுக்கும் வருடாவருடம் திதி கொடுக்கிறார்கள் . 
விஷயம் யாவும் அறிந்த விஷால் , வைபவ், கருணாகரன் சகோதரர்கள், மூன்று அத்தைகளுக்கும் இருக்கும் மூன்று மகள்களையும் (தலைக்கு ஒன்று) திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை ஒன்றிணைக்க வருகிறார்கள். ஊருக்கு வந்தால் ஹன்சிகாவும் அந்த அத்தையின் மகள்களில் ஒருவர் . 
இதற்கிடையில் பிரபு மீது கொலைப் பழி சுமத்திய வேலைக்காரன் பல முறை எம் எல் ஏ ஆகி மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறான். இந்த முறையும் தேர்தலில் போட்டியிடும் அவனை எதிர்த்து ரம்யா கிருஷ்ணனும் போட்டி இட,  
விஷால் அண்டு பிரதர்ஸ் சந்தானத்தின் உதவியோடு ,  அத்தை தேர்தலில் ஜெயிக்க உழைத்து , வில்லனை சமாளித்து , அப்பா மீது குற்றம் இல்லை என்று அத்தைகளுக்கு புரியவைத்து , ஹன்சிகா ஆண்டு சிஸ்டர்சை திருமணம் செய்து கொள்வதுதான் … ஆம்பள . 
 என்னங்க பண்றது….? இருக்கிற கதையைத்தானே சொல்ல முடியும் .
“நீங்க உங்க வேலையை ஒழுங்கா செஞ்சா  நான் ஏன் இந்த வேலைக்கு வரப் போறேன்? ” என்று விஷால் சொல்லும் போது,  ‘தயாரிப்பு –  விஷால்’ என்று டைட்டில் போடுகிறார்கள் . தயாரிப்பாளர்கள் மீது விஷாலுக்கு என்ன கோபமோ தெரியவில்லை . 
விஷால் நடிப்பு வழக்கம் போல். 
ஹன்சிகா முகம் அழகாகத்தான் இருக்கிறது . ஆனால்  சில காட்சிகளில் அவரது உடம்பைப் பார்த்தால் படத்தில் நான்காவது ஆண்ட்டி அவர்தானோ என்று யோசிக்கத் தோன்றுகிறது . 
ambala 2
ஹன்சிகாவோடு விஷால் காதல் வளர்க்கும் காட்சிகள்  ஒவ்வொன்றின் நீட்சியும் சந்தானத்தின் போலீஸ் வேலைக்கு வைக்கப்படும் வேட்டுகளாகமாறும் விதம் நகைச்சுவையாக இருப்பது மட்டுமின்றி திரைக்கதை உத்தியிலும் ரசிக்கும்படி இருக்கிறது . 
பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். 
பொதுவாக சினிமாவில் லாஜிக் தீவிரமாக இல்லாவிட்டாலும் லாஜிக் மாதிரியாவது ஏதாவது இருக்க வேண்டும். ஆனால் இந்தப் படத்தில் லாஜிக் என்ற வார்த்தையையே  கொன்று கூடையில் வாரி இருக்கிறார்கள். 
ஜூனியர் என் டி ஆரின் தெலுங்குப் படங்களில் வரும் சண்டைக் காட்சிகளை சமூக வலைதளங்களில் போட்டுக் கிண்டல் செய்பவர்கள், இனி இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளையும் அப்படி கிண்டலாகப் பயன்படுத்தலாம். 
தனது வழக்கமான பலங்களோடு,  அரண்மனை படத்தில்  கொஞ்சம் பிரெஷ்ஷாக வெளிப்பட்ட சுந்தர் சியை இதில் காணவில்லை . 
ஆம்பள…….   ஆண்மைக் குறைபாடும் தாது புஷ்டி லேகியமும் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →