அமலா பால் , சமுத்திரக் கனி, செல்வி யுவா, மீண்டும் ரேவதி ஆகியோர் நடிக்க ,
இளையராஜா இசையில்
ஜிகிர்தண்டாவுக்கு ஒளிப்பதிவு செய்த கேவ் மிக் யு ஆரியின் ஒளிப்பதிவில்
அஸ்வினி திவாரி இயக்கி இருக்கும் படம் ‘அம்மா கணக்கு’
இந்தியில் இதே அஸ்வினி திவாரி இயக்கத்தில் கேவ் மிக் யு ஆரியின் ஒளிப்பதிவில்,
ஸ்வரா பாஸ்கர், ரியா சுக்லா, ரத்னா பதக், பங்கஜ் திரிபாதி நடித்து வெளியான ,
நில் பட்டே சன்னட்டா ( ஜீரோவை வகுத்தால் ஒண்ணும் இல்லை என்று பொருள் ) என்ற இந்திப் படத்தின்,
தமிழ் மறு உருவாக்கமே இந்தப் படம் . நில் பட்டே சன்னட்டாவைத் தயாரித்தவரும் ஆனந்த் எல் ராய்தான் .
மேற்படி அம்மா கணக்கு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில்,
தனுஷ், அமலா பால், சிறுமி யுவா , கேவ் மிக் யு ஆரி, வுண்டர் பார் நிர்வாகத் தயாரிப்பாளர் வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர் .
படத்தின் முன்னோட்டம் திரையிடப்பட்டது
வீட்டு வேலை செய்து சம்பாதிக்கும் ஓர் ஏழைப் பெண்மணி கஷ்டப்பட்டு தன் பெண் குழந்தையைப் படிக்க வைப்பதோடு ,
படி படி என்று பிள்ளையை எப்போதும் கட்டாயப்படுத்த , ஒரு நிலையில் அந்த சிறுமி ,
” நான் ரொம்ப நல்ல படிச்சேன்னா , டாக்டர் இஞ்சினியர்னு மேல் படிப்பு படிக்க வைக்க உன் கிட்ட காசு இருக்கா ? இல்லல்ல…?
அதனால நான் சுமாரா படிச்சிட்டு வீட்டு வேலைகளுக்கு உனக்கு உதவியா வரேன்” என்று சொல்கிறாள் .
அதிர்ந்து போகும் தாய் ஒரு முடிவு எடுத்து பள்ளிக் கூடத்துக்குப் படிக்கப் போகிறாள் .
அந்த வேலைக்கார அம்மா போடும் கணக்கு என்ன என்ற ரீதியில் படம் போகும் என்பது முன்னோட்டத்தில் தெரிந்தது .
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் அஸ்வினி ” இந்தியில் இயக்கிய நானே தமிழிலும் இயக்கியதில் சந்தோசம் .
அதுவும் தனுஷ் சார் தயாரிப்பில் இயக்கி இருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது..
இரண்டு மொழியிலும் ஒளிப்பதிவு செய்து கொடுத்த கேவ் மிக் யு ஆரிக்கு நன்றி . நான் அவரை ரொம்ப சிரமப் படுத்தி இருக்கிறேன் .
அதே போல அமலபால் , யுவா அனைவரிடமும் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆக நடந்து கொண்டேன்.
ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பு சிறப்பானது ” என்றார் .
சிறுமி யுவா பேசும்போது ” இந்தப் படத்தில் வரும் எனது கேரக்டர் ரொம்ப நல்லா இருந்தது . அமலா பால் , ரேவதி இவங்க கூட எல்லாம் நடிச்சது சந்தோஷமா இருந்தது .
தனுஷ் அங்கிளுக்கும் (நெஞ்சைப் பிடித்து ‘பெய்ன்’ காட்டுகிறார் தனுஷ் ) அமலா ஆ … இல்லல்ல அமலா மேடத்துக்கும் (நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார் அமலா பால் ) நன்றி ” என்றார்
கேவ் மிக் யு ஆரி தன் பேச்சில்
“இந்தி தமிழ் இரண்டு மொழிகளிலும் என்னை இணைத்துக் கொண்ட அஸ்வினிக்கு நன்றி. படம் மிக சிறப்பாக வருவதை படமக்கும்போதே உணர முடிந்தது ” என்றார் .
அமலா பால் ” இந்தப் படத்தில் நான் நடித்து இருக்கும் கேரக்டர் எனக்கு ரொம்ப புடிச்சது .
என் கேரியர்ல இது மிக முக்கியமான படமா இருக்கும். தனுஷ் கேட்டதால தான் இந்தப் படத்தில் நடிக்க ஆரம்பிச்சேன்.
ஆனா படப்பிடிப்பு தொடர தொடர இந்தக் கேரக்டர் என்னை அப்படி ஆக்கிரமித்தது . இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த தனுஷுக்கு ரொம்ப நன்றி” என்றார் .
வுண்டர் பார் பிலிம்ஸ் நிர்வாகத் தயாரிப்பாளர் வினோத் பேசும்போது ” வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் படங்கள் மிக தரமானவையாக இருக்க வேண்டும் என்பதில்,
தனுஷ் சார் உறுதியாக இருப்பார் . அப்படி ஒரு படம்தான் இது .
அமலா பால் மிக சிறப்பாக நடித்து உள்ளார் . படாத்தில் ஹீரோயினும் அவரே . ஹீரோவும் அவரே .
எல்லோருமே மிக நன்றாக பணியாற்றி உள்ளனர் . குறிப்பாக இயக்குனர் அஸ்வினி சொன்னபடி சொன்ன நாட்களுக்குள் படத்தை முடித்துக் கொடுத்தார் . படம் மிக நன்றாக இருக்கிறது ” என்றார் .
நிறைவாகப் பேசிய தனுஷ் ” பொதுவாக நான் நடிக்காத — தயாரிக்க மட்டும் செய்கிற படங்களின் பத்திரிக்கையாளர சந்திப்புகளில் நான் கலந்து கொள்வது இல்லை .
ஏனெனில் பார்ப்போரின் கவனம் முழுக்க முழுக்க அந்தப் படங்களின் நடிக நடிகையர் மீது மட்டும் இருக்க வேண்டும் நான் வந்தால் கவனம் திசை திரும்பும் என்பதால்தான் வருவது இல்லை .
ஆனால் இந்த நிகழ்சிக்கு நானே விரும்பி வந்தேன் . காரணம் அந்த அளவுக்கு இது எனக்கு மனசுக்கு நெருக்கமான படம் .
ஒரு இந்திப் படப்பிடிப்பின்போது நில் பட்டே சன்னட்டா படத்தின் டிரைலரை எனக்குக் காட்டினர் ஆனந்த் எல் ராய் . ரொம்ப இம்ப்ரெஸ் ஆனேன் .
இந்தப் படம் தமிழில் வர வேண்டும் என்று விரும்பினர் ஆனந்த் ந எல் ராய் . ” நான் இந்தப் படத்தை தமிழில் தயாரிக்கிறேன்” என்று சொல்லிவிட்டுத்தான் முழு படத்தையே பார்த்தேன் .
கதாநாயகியாக நடிக்க அமலாவிடம் கேட்டபோது , கதையை கேட்டார் சொன்னேன் ‘ என்னைப் பார்த்தா உனக்கு வேலைக்காரி மாதிரி தெரியுதா ?’ என்று கேட்டார் .
அப்புறம் படத்தின் சிறப்பை சொன்னேன் .
ஒத்துக் கொண்டு பிரம்மாதமாக நடித்து இருக்கிறார் . இந்தப் படத்தில் அவருக்கு கண்டிப்பாக அவார்டு கிடைக்கும் .
அதே போல யுவா , சமுத்திரக்கனி , ரேவதி எல்லோரும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள் .
கேவ்மிக் யு ஆரியின் ஒளிப்பதிவும் அஸ்வினி திவாரியின் இயக்கமும் சிறப்பாக வந்துள்ளது
இசைஞானி இளையராஜாவின் இசை இந்த படத்துக்குப் பெரும் பலம் மற்றும் கவுரவம் .
அமலா பாலின் குளோசப்புக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார் என்பதை விட அமலா பாலுக்கு என்ன பெருமை வேண்டும் ?
நான் உண்டர்பார் ஃபிலிம்ஸ் விசயத்தில் எந்த சிக்கலும் பிரச்னையும் இல்லாமல் நான் நடிக்கும் படங்களில் நிம்மதியாக வேலை பார்க்கிறேன் என்றால் அதற்கு காரணம்,
உண்டர்பார் ஃபிலிம்ஸ் நிர்வாகத் தயாரிப்பாளர் வினோத்தான் .
அவரை இந்த மேடையில் முன்னிறுத்துவதில் சந்தோஷப் படுகிறேன் ” என்றார் .
“அம்மா கணக்கு என்ற பெயர் தேர்தல் முடிவுகளை வைத்து எடுக்கப்பட்டதா?” என்ற கேள்விக்கு
“இந்தப் படத்தின் பெயர் பல மாசங்களுக்கு முன்பே முடிவானது . அரசியலுக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை ” என்றார் , நிதானமாக !
நிகழ்ச்சியின் நிறைவாக, பத்திரிக்கையாளர் தேவி மணி பாடல்களை வெளியிட , அதை தனுஷ் பெற்றுக் கொண்டார் .
திரைக்கு சரியான நாளை எண்ணி, ‘ரிலீஸ் கணக்கு’ போட்டுக் கொண்டிருக்கிறது அம்மா கணக்கு !