எஸ் கே ஸ்டுடியோஸ் சார்பில் கே என் சம்பத் தயாரிக்க, ஜெய் , ஆன்டிரியா , அழகம் பெருமாள் , பால சரவணன் ஆகியோரின் நடிப்பில், எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கும் படம் வலியவன் .
“வலிமையானவன் என்றால் யார் என்பதை சொல்லும் படம் இது ” என்று ஆரம்பிக்கும் இயக்குனர் சரவணன் “பொதுவாக எனது படங்களில் காதலும் ஆக்ஷனும் சமூக நோக்கும் ஒரு முக்கிய அங்கமாக வரும் . இந்தப் படமும் அப்படித்தான். ஒரு வலுவான கதையை முன்வைத்துள்ளேன் ” என்கிறார் .
தொடர்ந்து ” எனது படங்களில் காமெடிக்கு என்று தனியாக டிராக் எதுவும் வைப்பது இல்லை. எடுத்துக் கொள்ளும் விஷயத்தை இன்டரஸ்டிங் ஆக சொல்வேன் . இந்தப் படமும் அப்படிதான் இருக்கும் . ஹீரோயினாக ஆண்ட்ரியாவை ஒப்பந்தம் செய்த போது பெரிய பெரிய இயக்குனர்கள் படத்தில் நடிச்சவராச்சே.. எப்படி ஒத்துழைப்பு இருக்குமோ என்று நினைத்தேன். ஆனா மிக சிறப்பாக நடித்துக் கொடுத்தார் ” என்றார் .
இமான் இசையில் படத்தில் இடம் பெறும் ஐந்து பாடல்களில் மூன்றை முத்துக் குமாரும் இரண்டை விவேகாவும் எழுதி இருக்கிறார்கள்.
கலை இயக்குனர் எஸ். ராஜ்மோகன் ” படத்தின் பின்புலம் முழுக்க முழுக்க கதைக்கு பொருத்தமாக இருக்க வேண்டும் என்று சரவணன் விரும்புவார். அதற்கு ஏற்ப பார்த்து பார்த்து வேலை செய்தது சந்தோஷமாக இருந்தது ” என்றார் .
“இந்தப் படத்தில் முதன் முதலில் தனி ஹீரோயினாக நடித்து இருக்கிறேன். முதன் முதலில் கார் ஓட்டி இருக்கிறேன் . இப்படி நிறைய முதல் விஷயங்கள் இருக்கு ” என்றார் ஆண்ட்ரியா.
முக்கிய செய்தி படத்தில் ஆண்ட்ரியா பாடவில்லை .
ஏனாம் ?
”அவர் நடிக்கும் எல்லா படத்திலும் அவர் பாடுகிறார் . இதுல ஒரு சேஞ்ச் இருக்கணும்னுதான் பாட வைக்கல ” என்றார் இயக்குனர் சரவணன்.
படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில்தான் மேற்கண்ட எல்லா விசயங்களும் பேசப்பட, மியூசிக் டைரக்டர் இமான் கலந்து கொள்ளாதது பற்றி கேட்டபோது சரவணன் “ஒரு மிஸ் கம்யூனிகேஷன் காரணமா அவர் மும்பைக்கு ஒரு பாடல் ரிகார்டிங்குக்கு போய்ட்டார் ” என்றார் இயல்பாய் .
‘சரி … ஹீரோ ஜெய் எங்கே ? அவரையும் காணோமே?” என்று கேட்டபோது “அதுவும் ஒரு மாதிரி மிஸ் கம்யூனிகேஷன்னு வச்சுக்கங்களேன் ” என்றார் , ஒரு மாதிரியான சிரிப்போடு . (எதுவும் மிசஸ் கம்யூனிகேஷன் காரணம் இல்லியே ?)
படத்தின் முன்னோட்டம் படு கூர்மையாக இருந்தது . அதில் ஆண்ட்ரியா ” நான் ஒருத்தனை அடின்னு சொன்னா , உடனே அடிக்க மாட்டேங்கற …எதுக்கு அடிக்கனும்னு கேள்வி கேக்கற . நமக்குள்ள லவ் எல்லாம் சரி பட்டு வராது .. ச்சீ போ .. சீச்சி .. போ.. போ .. ” என்கிறார் (ஒருவேளை அதனால்தான் ஜெய் வரலியோ?)
முன்பெல்லாம் படத்தின் ஹீரோயின்கள் மட்டும்தான் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு வர மாட்டார்கள் . இப்போது ஹீரோக்களும் ஆரம்பித்து விட்டார்கள். முன்னேறுங்க அய்யா….. முன்னேறுங்க!
Comments are closed.