அனேகன் @ விமர்சனம்

anegan 1

ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்க, தனுஷ், நவரச நாயகன் கார்த்திக், புதுமுக நாயகிகள் அமைரா தஸ்தூர், ஐஸ்வர்யா தேவன் ஆகியோர் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கி இருக்கும் படம் அனேகன். அநேகமாக நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் எப்படி இருக்கிறது ? பார்க்கலாம் . 

மாணிக்க வாசகர் இயற்றிய திருவாசகாத்தில் முதல் அத்தியாயமான சிவா புராணத்தின் துவக்கத்தில் வரும் பாடல்

நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணி தன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க!

என்று துவங்கி தொடரும் .

இதில் மாணிக்க வாசகர் சிவபெருமானை “நீயே எல்லாமுமாய் ஆன ஒருவன் (ஏகன்) . அதே நேரத்தில் ஒரே நபர் நிறைய ஆளாகவும் இருக்கிற அதிசயம் செய்பவன் (அநேகன்) ” என்று போற்றுகிறார் .

இதற்கு உதாரணமாக, மேட்ரிக்ஸ் வகையறா ஆங்கிலப்படங்களில் ஒரே கேரக்டர் ஒரே காட்சியில் கும்பலாக,  எல்லாருமாக இருக்குமே அதில் இருந்து எந்திரன் படத்தில் சிட்டி உருவத்தில் ஒரு பெரும்படையே இருக்குமே , அதுவரை பல உதாரணங்களை சொல்லலாம் .

சரி.. இந்தப் படத்துக்கு இந்தப் பெயர் எப்படிப் பொருந்தும் என்பது படத்தில் கதையில் இருக்கிறது . எனவே அதைப் பார்ப்போம்.

1962 இல் பர்மாவில் துவங்குகிறது படம்.

அங்கே கட்டிட வேலை செய்யும் ஏழைத் தமிழ் இளைஞனான மூனா ரூனா என்ற முருகப்பனுக்கும்  (தனுஷ்) பர்மிய அப்பா –  தமிழ் அம்மாவுக்கு ஹை பிரீடாகப் பிறந்த,  கோடீஸ்வர அரசு அதிகாரியின் மகளான சமுத்’றா’வுக்கும்  (அமைரா தஸ்தூர்) காதல் வருகிறது .  கட்டிட வேலை செய்யும் சக நண்பன் (ஜெகன்) , தனது முறைப்பெண்ணோடு (ஐஸ்வர்யா தேவன்) இருக்க , அந்த முறைப்பெண்ணுக்கு முருகப்பன்  மீது காதல் . ஆனால் முருகப்பன் சமுத்’றா’வைக் காதலிப்பது அறிந்த கோவத்தில்,  அவள் முறை மாமனையே மணக்கிறாள் .

தமிழர்களின் வரலாற்றில் ஒரு நிஜமான முக்கிய சம்பவமான பர்மா கலவரம் துவங்குகிறது . கோடீஸ்வரத் தமிழர்களை பிச்சைக்காரர்களாக்கி கப்பல் ஏற்றி இந்தியாவுக்கு துரத்துகிறது பர்மாவின் ராணுவ ஆட்சி.

முருகப்பன் அந்தக் கப்பலில் கிளம்ப , அவனைப் பிரிய முடியாமல் சமுத்’றா’வும் கூட வர, அவர்களைத் தேடிவரும் நாயகியின் அப்பா, கிளம்பத் தயாராக இருக்கும் கப்பலில் துப்பாக்கியுடன் பாய, காதல் ஜோடியை துரோகமும் சூழ .அடுத்தடுத்து சில சம்பவங்கள் நடந்து முடிய …. 

— மருத்துவ மனையில் மருத்துவ ரீதியிலான ஹிப்னாடிச  உறக்கத்தில் இருந்து எழுப்பப்படுகிறாள் நாயகி . இது 2015 ஆம் வருடம் .

வீடியோ கேம்ஸ் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பெண்தான் அந்த நாயகி (அமைரா தஸ்தூர் ). அதீத வேலைப் பளு காரணமாக தனது நிறுவனத்தில் ஊழியர்களுக்கு மன நல சிகிச்சையும் தருபவர்  முதலாளி ரவிகிரண் (நவரச நாயகன் கார்த்திக்). பர்மிய கதையில் நாயகியின் தந்தையாக இருந்தவர் இப்போது நாயகியின் தாய் மாமனாக இருக்கிறார் . வில்லனைப் போன்று சித்தரிக்கப்படுகிறார் .  முந்தைய கதையில் நாயகனின் நண்பனாக இருந்தவன் இப்போது இதே நிறுவனத்தில் வேலை செய்கிறான் . அவனது முறைப்பெண்ணாக இருந்த பெண்ணும் இருக்கிறாள். அவளை அந்த நண்பன் காதலிக்கிறான் .

anegan 4

இந்த நிலையில் அந்த கம்பெனிக்கு புதிதாக வேலைக்கு வரும் அஷ்வின் , உருவத்தில் முருகப்பனாகவே  இருக்கிறான் . அவனைப் பார்த்த உடன் நாயகிக்கு அவன் மீது காதல் வருகிறது .  இவள் அவனிடம் நாம் முன்ஜென்மக் காதலர்கள் என்றெல்லாம் உளற,  மிகவும் பிராக்டிக்கல் நபரான அவன் எரிச்சலாகிறான்  . எனினும் அவளது காதலின் தீவிரம் அவனுக்குள்ளும் காதலை ஏற்படுத்துகிறது .

இந்த நிலையில்  ரகசிய நபர் ஒருவரால் அஷ்வினை கொலை செய்யும்  முயற்சியாக நடத்தப்படும்  விபத்து ஒன்றில் அடிபட்டு,  மருத்துவமனைக்குப் போகும் கதாநாயகி மயக்கத்துக்குப் போக , அந்த சமயத்தில் இரண்டு போலீஸ்காரர்கள் சுமார் முப்பது வருடம் முன்பு நடந்த ஒரு கொலை வழக்கைப் பற்றிப் பேசி , காளி என்ற ரவுடியையும் அவனது காதலி கல்யாணியையும் பற்றி கூறி அவர்கள் இருவரும் மும்பைக்கு தப்பி ஓடி விட்டதாக கூற, தூக்கத்தில் இருக்கும் நாயகி , ”அவர்கள் தப்பி ஓடவில்லை , கொலை செய்யப்பட்டார்கள்” என்று கூறுகிறாள் .

போலீசார் விசாரிக்க, அவளது மன நிலை பற்றி கூறி அவர்களை சமாதானப்படுத்துகிறான் அஷ்வின் .

ஆனால் மறுநாள் ஒரு போலீஸ் அதிகாரி வந்து  நாயகியிடம் விசாரிக்க, அவள் மீண்டும் ‘காளியும் கல்யாணியும்  நல்லவர்கள் . அவர்கள் அநியாயமாக கொலை செய்யப்பட்டார்கள் ” என்று கூறுகிறாள் . வியாசர்பாடி ரயில்வே நிலையத்தில் அவள் சொல்லும் இடத்தில் தோண்டிப் பார்த்தால்… இரண்டு எலும்புக் கூடுகள் !

அவர்கள் யார் என்பதை நாயகியே சொல்ல , 1987  சென்னை வியாசர்பாடியில் அந்தக் கதை விரிகிறது. அதில் வரும் காளி வேறு யாருமல்ல , பர்மா முருகப்பனாகவும் இப்போது அஷ்வினாகவும் இருக்கிற அதே நபர். கல்யாணி ? வேறு யார் ? இவளேதான் . 

ஆக, நாயகி சொல்வது மனநலப் பிறழ்வின் கற்பனைகளா? இல்லை நிஜமான முன்ஜென்ம உறவின்  தொடர் சங்கிலிகளா ?

—- என்பதே இந்த அநேகன் !

கேவி ஆனந்தும் இரட்டை எழுத்தாளர்கள் சுபாவும் சேர்ந்து கதை திரைக்கதை அமைக்க, வசனத்தை சுபாவே எழுதி இருக்கிறார்கள் .

anegan 3

படம் துவங்கியதும் விரியும் 1962 காலத்திலான முதல் காதல் கதை அற்புதம் . எடுத்த எடுப்பிலேயே நம்மை அசத்தி மிரட்டி வாய் பிளக்க வைக்கிறார்கள். பர்மாவின் நிலம் , இனம், பெண்கள், வண்ணங்கள், மலர்கள், கட்டிடங்கள் , அவற்றின் பொன் வேலைப்பாடுகள், எளிய பர்மிய முகங்கள் எல்லாவற்றையும் விரிக்கும் அந்த முதல் பாடலில்,  ஒரு தங்க மயமான தூணை ஒட்டி கேமராவை லேசாக சுழற்றி மேலே தூக்கும் ஒரு ஷாட் வரும் … அங்கே இருந்தே ஆரம்பிக்கிறது கே.வி. ஆனந்தின் அழகிய படமாக்கல்.

பர்மாவில் தமிழர்கள் வாழும் பகுதியில் சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி படமானது  பர்மிய மொழிப் பெயர் கொண்ட தியேட்டரில் ஓடும் போஸ்டர், பர்மா கலவரம் வரும்போது பர்மியர்கள் எம்ஜிஆரின் சக்கரவர்த்தி திருமகன் படப் போஸ்டரில் கருப்பு வண்ணம் பூசி அதன் மேல் பர்மிய ராணுவத் தலைவரின் படத்தை ஓட்டுவது, சமுத்ரா என்ற கதாநாயகியின் பெயரை அன்றைய தமிழ் எழுத்து வழக்கப்படி ‘சமுத்றா ‘ என்று எழுதுவது …

அடடா! படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்காக ராட்சஷ உழைப்பு உழைத்திருப்பதை பாராட்டுவதா? இல்லை,  இப்படி 1960களில் பர்மா வாழ் தமிழர்களின் வாழ்க்கை முறையை அச்சு அசலாக கொண்டு வருவதற்கு சின்னச் சின்ன விவரணைகளுக்காக பிசாசு உழைப்பு உழைத்து நம்பகத் தன்மையை கொண்டு வந்திருப்பதை பாராட்டுவதா ? அற்புதம் ! அபாரம் ! அட்டகாசம் !

மியன்மாரின் விடுதலைக்காக பல ஆண்டுகள் சிறையில் கழித்த விடுதலை வீராங்கனையும்  இப்போதைய தேசிய ஜனநாயக லீக் கட்சித் தலைவியும் இந்த ஆண்டு பர்மிய அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பவருமான  ஆன் சான் சூகியின் கதாபாத்திரம் கூட, படத்தில் இரண்டு இடங்களில் வருகிறது என்றால் … இதற்கு மேல் என்ன சொல்லிப் பாராட்டுவது ?

அதே போல வியாசர்பாடி கதையிலும் கமல்ஹாசன் நடித்த காக்கிச் சட்டை படத்தின் நூறாவது நாள் பேனர் வரை காட்டி,  அந்தக் காலகட்டத்தை கொண்டு வருகிறார் கே வி ஆனந்த் . 

இப்படி படம் முழுக்க  லிட்டில் டீடெயில்கள், அதகள ஆக்ஷன் காட்சிகள், அழகியல் செறிந்த காட்சிகள், நடிகர் நடிகையரிடம் வேலை வாங்கி இருக்கும் விதம் என்று … கே வி ஆனந்தின் கொடி பறக்கிறது .

பர்மிய இளைஞனாக நடித்திருப்பவர் வேறு நடிகர் , வியாசர்பாடி காளியாக நடித்து இருப்பவர் வேறு ஆள் என்று சொல்லும் அளவுக்கு மாறி அசத்துகிறார் தனுஷ் . வாய் பிளக்க வைக்கும் உழைப்பு.

நீண்ட இடைவேளைக்கு பிறகு கார்த்திக்கை பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது . அதுவும் அவரது பாணி நடிப்பு இப்போதும் ரசிக்கும்படி இருக்கிறது. வெல்கம் பேக் ! அதே நேரம் எது பேசினாலும் ஹாங் ? ஹாங்? என்று சொல்லி முடிப்பதை மட்டும் கொஞ்சம் குறைத்துக் கொண்டிருக்கலாம்.

anegan 6

அமைரா அழகாக இருக்கிறார் . உற்சாகமாக நடிக்கிறார் . உதடுகளை மீன் போல குவித்து அசைக்கும்போது கிறங்கடிக்கிறார் . 

கே வி ஆனந்த் படம் என்பதற்கான தனி உற்சாகத்தில் ஹாரீஸ் ஜெயராஜின் பாடல்கள் அனைத்தும் இனிமை . பின்னணி இசையும் அருமை . 

ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனர் ஆனவர்களிலேயே அழகியலையும் கமர்ஷியலையும் சரியாக இணைப்பதில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் கே வி ஆனந்த். அவரது படத்துக்கு ஒளிப்பதிவு செய்பவர் எப்படி இருப்பார்? அசத்தி இருக்கிறார் ஒளிப்பதிவளார் ஓம் பிரகாஷ்

ஆண்டனியின் எடிட்டிங் , கிரணின் கலை இயக்கம் , அனு பார்த்தசாரதி மற்றும் குஷ்பு  தோஷியின் உடை வடிவமைப்பு இவை மூன்றும் இயக்குனருக்கு பெரும் பலம் .

படத்தில் வரும் பெரிய பெரிய கேரக்டர்களில் இருந்து சும்மா வந்து போகும் கேரக்டர்கள் வரை யார் எப்போது பேச்சில் சிரிக்க வைப்பார்கள் அல்லது ரசிக்க வைப்பார்கள் என்றே சொல்ல முடியாத அளவுக்கு வசனங்களில் பட்டாசு கொளுத்தி இருக்கிறார்கள் எழுத்தாளர்கள் சுபா. (உதாரணம் பர்மிய காதல் நினைவில் நாயகி மூனா ரூனா .. என்று முனக,  பயந்து போன வேலைக்காரி “யம்மா.. என்னாச்சோ தெரியல திடீர்னு பாப்பா ஆனா ஆவன்னா எல்லாம் சொல்லுது ” என்பது )

“அடி சிறுக்கி… உன்னை முறுக்கி… அருணா கயிறா கட்டிக்கவா ?” போன்ற பாடல் வரிகளில் தன் பங்குக்கு விளாசுகிறார் வைரமுத்து .

ஆரம்பத்தில் அட்டகாசமான பர்மா கதையை சொன்னவர்கள் அதன் பின்னர் அந்த அளவுக்கோ அல்லது அதை விட சிறப்பாகவோ எதையும் சொல்ல முடியாத நிலையில் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கும் படம்,  விஷய ரீதியாக மெல்ல மெல்ல குறுகிக் கொண்டே வந்தாலும்   , பின்னர் கிளைமாக்சில் சரியான சமயத்தில் அந்த பர்மா  கதையை  டைரக்ஷன் உத்தியில் மேட்ச் செய்து சமாளிக்கிறார்கள். 

anegan 2

ஒரு நிலையில் ஆக்ஷன் காட்சிகள் முழுக்க ஆக்கிரமிப்பதால் நடிகர்களின் பர்பார்மன்சுக்கு வேலை இல்லாமல் போய் விடுகிறது. இது போன்ற கதைகளில் அதை எப்போதும் மிஸ் பண்ணாத அளவுக்கு காட்சிகள் இருப்பது முக்கியம்.

டங்கா மாரி பாட்டில் கதாநாயகி நேரடியாக ‘களம் இறங்கவில்லை’ என்பது ஒரு ஏமாற்றமே !

வேகமாக கதை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் சரிதான். ஆனால் சில எமோஷன்களை நின்று நிதானித்து அழுத்தமாக சொல்ல வேண்டாமா இயக்குனரே ? பர்மா கதையில் ஒவ்வொரு ஷாட்டுக்கும் இன்னும் ரெண்டு அல்லது மூன்று செகண்ட் பில்டப்புகள் இருந்து இருந்தால் அது இன்னும் கனமாக,  மனதை நெகிழ வைப்பதாக இருந்திருக்கும் . இளமாறன் பாட்டை வெட்டிக் கடாசி விட்டு அந்த கால அவகாசத்தை பர்மா கதைக்கு பயன்படுத்தி இருக்கலாம் .

அப்படி செய்து இருக்கும் பட்சத்தில் கதையை  2015 இல் ஆரம்பித்து அப்புறம் நாயகி பாய்ண்ட் ஆப் வியூவில் வியாசர்பாடி எபிசோடை சொல்லி அதை ஹீரோ நம்பாத நிலையில் பர்மா கதையை இன்னும் பிரம்மாதமாக சொல்லி  அவனை நம்ப வைத்து காதலை உணர வைத்து,  அப்புறம் ரிடையர்டு கமிஷனரை வர வைத்து வியாசர்பாடியில் பிணம் தோண்டி , ஆக்ஷனுக்குள் நுழைதிருக்கலாம் . அநேகன் என்ற பெயரை கட்டாயம் வைத்துதான ஆக வேண்டுமா என்ன?

ஆனாலும் என்ன சூடும் சுவாரஸ்யமுமாக மனதைக் கொள்ளை கொள்கிறது படம் .

அநேகன் .. ஏகன் !

மகுடம் சூடும் கலைஞர்கள்

————————————————

கே.வி.ஆனந்த் , சுபா, தனுஷ், ஹாரீஸ் ஜெயராஜ், ஓம் பிரகாஷ், அமைரா தஸ்தூர், கிரண்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Comments are closed.