
“ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி …”
ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தில் வந்த ஹிட் வசனம் இது . அதற்காக அந்தப் படத்தையேவா நூறு தடவை எடுப்பது ?
அஞ்சான் படத்தைப் பற்றி, அது பாட்ஷாவின் உல்டாதான் என்று நஞ்சாக ஒரு செய்தி வருகிறது, நம்பிக்கையான சோர்ஸ் மூலமாக .
சரி காதில் விழுந்ததை கச்சிதமாக சொல்லி கடமையை செய்வோம் .
பாட்ஷா படத்தின் கதை ஞாபகம் இருக்கா ? (மறக்க முடியுமா என்கிறீர்களா ?)

அதில் பாட்ஷாவாக மாறும் ரஜினி , மற்றும் அவரது தம்பி கதாபாத்திரம் இரண்டையுமே சூர்யா நடித்து இருந்தால் எப்படி இருக்கும்?. அதுதான் அஞ்சான் திரைப்படமுங்கோ …(எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது !)
பாட்ஷா படத்தில் ரஜினியின் ஆருயிர் மும்பை நண்பராக சரண்ராஜ் நடித்த கதாபாத்திரத்தில் அஞ்சான் படத்தில் வித்யுத் நடிக்கிறார் . பாட்ஷாவில் மும்பை ரகுவரன் சென்னை தேவன் என்று ரஜினிக்கு இரண்டு வில்லன்கள் அல்லவா? இதிலும் அப்படியே . ப்ளஸ் எக்ஸ்ட்ராவாக ஒரு வில்லன் .
“ஆகா .. சூப்பர் …! அப்படியானால் இன்னொரு முறை பாட்ஷா பார்க்கும் பரவச அனுபவத்தை அஞ்சான் கொடுக்கும் என்று ஆரவாரமாக சொல்லுங்க” என்றால்…
ம்ஹும் ! உதடுகள் பெரிதாக பிதுக்கப்படுகின்றன.
”அடப்பாவி ! இன்னும் ரிலீஸ் ஆகாத படத்தை பற்றி இப்படி அபாண்டம் சொல்லலாமா ? இது நியாயமா? நேர்மையா? தர்மமா? அடுக்குமா/” என்றால் பார்த்திபன் செய்திருக்கும் ஒரு விஷயத்தை நோக்கி கை காட்டுகிறது அந்த தகவல் சோர்ஸ் !
என்ன ?

பார்த்திபன் தனது கதை திரைக்கதை வசனம் படத்தை ஆகஸ்டு ஒன்றாம் தேதி வெளியிட திட்டமிட்டு இருந்தார். பின்னர் எட்டாம் தேதி வெளிவரலாம் என்று கூறப்பட்டது .
இந்நிலையில் ஆகஸ்டு பதினைந்தாம் தேதி அஞ்சான் ரிலீஸ் உறுதியாக , தனது படத்தின் ரிலீசை அதில் இருந்து ரெண்டு வாரம் தள்ளி ஆகஸ்டு 29ஆம் தேதிக்கு கொண்டு போனார் பார்த்திபன் .
காரணம் அஞ்சான் படம் பிரம்மாதமாக இருந்து சக்கைப் போடு போட்டால் அதனால் தனது படத்தின் வசூல் பாதிக்கப் படக் கூடாது என்பதுதான் .
தவிர இப்போதெல்லாம் எந்தப் படத்துக்கும் ரெண்டு வாரம் தாண்டி ஓட்டம் இல்லை என்பதால் அஞ்சான் ரிலீஸ் ஆகி ரெண்டு வாரம் கழித்து வரலாம் என்று எண்ணி பார்த்திபன் எடுத்த முடிவு அது .
ஆனால் அஞ்சான் படம் பற்றிய அச்சச்சோ செய்திகளை கேட்டதும், தன்னமபிக்கையாக – தில்லாக – அஞ்சான் ரிலீஸ் ஆகும் அதே தினத்தில் தனது படத்தை இறக்குகிறார் பார்த்திபன் .
“இப்போ கூடவா புரியல?” என்கிறது அந்த சோர்ஸ் !
கூட்டிக் கழிச்சு பார்த்தா கணக்கு சரியாத்தான் வருது . ஆனா படம் எப்படி வந்துருக்கோ ?