அஞ்சல @ விமர்சனம்

anjala 6

அவுரா சினிமாஸ்  சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் வெளியிட ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரடக்ஷன்ஸ் சார்பில் ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் தயாரிக்க,

விமல் , பசுபதி , நந்திதா  நடிப்பில்  தங்கம் சரவணன் என்பவர் இயக்கி இருக்கும் படம் அஞ்சல . அஞ்சணுமா? கொஞ்சணுமா? பார்க்கலாம் . . 

1913 ஆண்டு வாக்கில்… குடியிருப்பு இல்லாத பொட்டல் காட்டில் , பஞ்சம் பொழைக்க வந்த சம்சாரியான ராமய்யா– அஞ்சல  சோடியால் (பெரிய பசுபதி — ரித்விகா ),
 தாகத்துக்கு தண்ணீர் கொடுக்கும் குடிசையாக ஆரம்பிக்கப்பட்டு …
பின்னர் கருப்பட்டி தண்ணிக் கடையாக மாறி , தன் இருப்பால் பல வீடுகள் உருவாகக் காரணமாகி….
 Vimal, Nandita in Anjala Tamil Movie Stills
சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு  ஆதரவு தரும் இடமாக வளர்ந்து ,   டீத் தண்ணி கடையாக மாறி, நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, டீக் கடையாக மாறி….
தன்னை சுற்றி ஒரு ஊரே உருவாகக் காரணமாக இருந்து , பின்னர் அந்த சம்சாரியின் பேரன் முத்திருளாண்டியால்  (சின்ன பசுபதி) தொடர்ந்து நடத்தப்பட்டு …
நூற்றாண்டு கொண்டாடும் ஒரு, சிறுநகர டீக்கடைதான்  அஞ்சல  டீ  ஸ்டால் . 
டூ வீலர் சர்வீஸ் சென்ட்டர் வைக்க பணத்துக்குப் போராடும் இளைஞன் கவாஸ்கர் (விமல்) , மற்றும் பல்வேறு தொழில் செய்யும் நண்பர்கள்என்று அங்கே பல முகங்கள் .
anjala 77
கவாஸ்கருக்கும் வாத்தியார் (இயக்குனர் ஆர் வி உதயகுமார் ) பெண்ணுக்குமான (நந்திதா) காதல் என்று பல நிகழ்வுகள்…… இப்படி அந்த ஊரின் ஒரு முக்கிய இடமாக இருக்கிறது அஞ்சல டீ  ஸ்டால். 
இந்நிலையில் ரோடை அகலப்படுத்துவதற்காக  அந்த கடையை இடிக்க முடிவு செய்கிறது தேசிய நெடுஞ்சாலைத் துறை. 
அதிர்ந்து போன ஊர் மக்கள் கஷ்டப்பட்டு கோர்ட்டில் ஸ்டே வாங்க போராடுகின்றனர் . இன்னொரு பக்கம்….
 டூப்ளிகேட் சாராயம் தயாரிக்கும் ஒரு நபரின் சாராய லாரி முக்கியப் போலீஸ் அதிகாரிகளிடம்  பிடிபடுவதற்கு முத்திருளாண்டியும் கவாஸ்கரும் அவனது நண்பர்களும் காரணமாகி விடுகிறார்கள்.
anjala 7
எனவே  அஞ்சல   டீ கடையை  முற்றிலுமாக அழிக்க  , அந்த சாராயப் பார்ட்டியும் குறி வைக்கிறான் .அவனுக்கு லோக்கல் இன்ஸ்பெக்டர் அடிமை 
இந்த இருமுனைத் தாக்குதலில் இருந்து அஞ்சல டீக் கடையும் அதை சுற்றி இயங்கும் மாந்தர்களின் வாழ்க்கையும் தப்பித்ததா இல்லை இடிக்கப் பட்டதா  என்பதே இந்தப் படம் 
பசுபதி, ரித்விகா, விமல், நந்திதா ஆகியோர் தங்கள் பாணியில் நடித்துள்ளனர் .மற்றவர்கள் இன்னும் இயல்பாக நடித்து இருக்கலாம் . கேரக்டர்களை இன்னும் சிறப்பாக உருவாக்கி இருக்கலாம் . 
கோபி சுந்தர் இசையில் ”கண்ஜாடை காட்டி எனை கவுத்தா செவத்த புள்ள..” பாடல் மீண்டும் மீண்டும் பாட வைக்கிறது . இனிப்பான இனிமை . 
anjala 5
ஒரு அத்துவானக் காட்டு வழி பஞ்சம் பொழக்க வரும் ஒரு ஏழை கணவன் மனைவியால் காலப் போக்கில் ஒரு ஊரே உருவாகிறது என்பதும்…. அது ஒரு நூற்றாண்டின் காலக் கடிகாரமாக இயங்குகிறது என்பதும்..
எவ்வளவு  அற்புதமான விஷயம் !
ஆனால் அதை சொன்ன விதத்தையும் இடத்தையும் இன்னும் சிறப்பாக நிர்மாணித்து  இருக்கலாம் . 
அஞ்சல டீக் கடை என்பது  சும்மா போண்டா  வடை தின்னு  டீ  குடிச்சு கிரிக்கெட் பார்க்கிற இடம் என்று மட்டும் சொல்லாமல்,  
அது இன்றும் அந்த மக்கள் வாழ்வில் உணர்வுப் பூர்வ இடமாக உள்ளது என்று சொல்லி இருக்கலாம் . 
உதாரணமாக …
anjala 4
அந்த நூறு வருஷ டீக்கடை என்பது இன்று அந்த ஊர் மக்கள்  நல்ல  விஷயங்கள் மங்களகரமான காரியங்கள் செய்யும் இடம் . அவர்கள் வாழ்வில் அது முக்கியமான  இடம் என்ற பந்தத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும் ….
கடையை இடித்து விடுவார்களோ என்ற பதற்றத்தை இந்த இடத்திலேயே  ஆடியன்ஸ் மத்தியில் உருவாக்கி இருக்க வேண்டும். 
பிரச்னை பெரிதாகி கோர்ட்டில் வாதம் வலுக்கும் சமயத்தில்தான்,  அந்த கடை உருவான விதம் , சுதந்திரப்போராட்ட வரலாறு எல்லாம் சேர்ந்த அந்த பிளாஷ்பேக் சிறப்பாக சொல்லப் பட்டிருக்க வேண்டும் .
அது சிலிர்ப்பானதாகவும்  உணர்வுப் பூர்வமானதாகவும்  நெகிழ்வானதாகவும் இருக்க வேண்டும்.  நீதித் துறையையே அசைப்பதாக இருக்க வேண்டும் . 
anjala 3
” அந்த இடத்தின் சரித்திர முக்கியத்துவம் கருதி அந்த இடம் அப்படியே இருக்க வேண்டும் . நெடுஞ்சாலைத் துறை வேண்டுமானால் ஊருக்கு வெளியே பை பாஸ்  ரோடு போட்டுக் கொள்ளட்டும் ” என்று,
 கோர்ட் தீர்ப்புக் கூறுவதாக கிளைமாக்ஸ் அமைந்து இருக்க வேண்டும் . 
நம்ம  விழுப்புரம் நகரிலேயே இப்படி   நீதி மன்றம் தீர்ப்பு சொன்னதால்தானே விழுப்புரம் பை பாஸ் உருவானது .தமிழ்நாட்டில் புறவழிச்சாலைகள் போடும் வேலை  சூடு பிடித்ததே அதற்குப் பிறகுதானே 
இப்படி இந்தப் படத்தை கிளைமாக்சில் ஒரு வெற்றிக் கொண்டாட்டமாக அமைத்து இருந்தால்,  அஞ்சல அட்டகாசமான படமாக வந்திருக்கும் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →