அன்னபூரணி @ விமர்சனம்

ஜீ ஸ்டுடியோஸ்,  நாட் ஸ்டுடியோஸ், மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், நயன்தாரா, ஜெய், சத்யராஜ் நடிப்பில் நிலேஷ் கிருஷ்ணா இயக்கி இருக்கும் படம். 

சிறு வயது முதலே ஆர்வமும் அக்கறையுமாய் சமைப்பதிலும் அன்போடு பரிமாறுவதிலும் ஆர்வம் கொண்ட ஸ்ரீரங்கத்து பிராமணப் பெண் அன்னபூரணிக்கு ( நயன்தாரா) மிகப் பெரிய சமையல்கலைஞராக ஆக வேண்டும் என்பது லட்சியம் . சமையல் கலைஞராக ஆக வேண்டும் என்றால் அசைவம் சமைக்கவும் ருசி பார்க்கவும் சொல்லப் போனால் சாப்பிடவும் செய்ய வேண்டு(மா)ம் 
 
ஆனால் ரெங்கநாதன் சந்நிதி மடப்பள்ளியில்,பெருமாளின் நைவேத்யமான அக்காரஅடிசலை தினமும் பக்தி சிரத்தையோடு சமைக்கும் குழுவின் தலைமை நபரான அவளது அப்பாவுக்கு (அச்யுத் குமார்) அதில் விருப்பம் இல்லை. 
 
சிறுவயது முதலான இஸ்லாமிய நண்பன் ( ஜெய் ) ஊக்குவிக்க, அப்பாவிடம் எம் பி ஏ படிப்பதாகப் பொய் சொல்லி விட்டு, அன்னபூரணி சமையல் படிப்பு படிக்க, நான் வெஜ் சாப்பிடும்போது அப்பாவிடம் மாட்ட, உடன் படிப்பை நிறுத்தி  ஒரு பிராமண ஆத்துப் பயனுக்கு விவாகம் செய்து வைத்து பார்யாள் ஆக்க முயல்கிறார். 
 
தாலி கட்டப்படுவதற்கு சில நிமிடம் முன்பு தப்பி,  சென்னை வந்து தான் வியக்கும் பிரபல சமையல்கலை மன்னரிடம் ( சத்யராஜ்) கஷ்டப்பட்டு பணியில் சேர்ந்து முன்னேற,  அந்த மன்னரின் மகன் (கார்த்திக் குமார்) ,அன்னபூரணியின் முன்னேற்றம் பிடிக்காமல் வன்மத்தோடு களம்  இறங்க, ஒரு சமையற்கலை நிபுணருக்கு இருக்க வேண்டிய முக்கியமான ஒரு தகுதியை இழக்கிறார் அன்னபூரணி 
 
அன்னபூரணிக்கு உதவும் அந்த பிரபல மூத்த சமையற்கலைஞர் , தன் மகனுக்கு எதிராக அகில இந்திய  சமையற்கலை போட்டியில் அன்னபூரணி கலந்து கொண்டு வெல்ல வேண்டும் என்று விரும்ப, அன்னபூரணியும் களம் இறங்க,  கோபமான  சமையற்கலைஞர் மகன் சகல பலத்தையும் காட்ட, கோபத்தில் இருந்த  ஸ்ரீரங்கத்துக் குடும்பத்தின் பெண்களும்  அன்னபூரணிக்கு ஆதரவு தெரிவிக்க, நடந்தது என்ன என்பதே படம். 
 
சமையலைப்  பற்றிய படம் என்றாலும் அரைத்த மாவையே அரைக்காமல்,  வித்தியசமான கதை, அதில் தில்லான காட்சிகள், சமூக நல்லிணக்கம் , நெகிழ வைக்கும் சம்பவங்கள், தரமான படமாக்கல், தேர்ந்த இயக்கம் என்று பாராட்டுப் பெறுகிறார் இயக்குனர் நிலேஷ் குமார் . 
 
பிரியாணியின் ஆத்தாவான பழந்தமிழர் உணவான  மீன் கொழுங்குறை  பற்றிய காட்சிக்கு ஒரு விசில் போடுவோம் .  
 
அது போல அடுப்பே பற்ற வைக்காமல் சமைக்கும் போட்டி பற்றிய காட்சி, தமிழர்களின் உணவு பரிமாறல் கலாச்சார விளக்கம்  என்று  சிக்சர்கள் அடிக்கிறார்  இயக்குனர் 
 
திறமைமிக்க  பெண் சமையற்கலைஞரான அன்னபூரணி  ஒரு காட்சியில் புதிதாக அறிமுகம் ஆகும் பெண்களிடம் ”பசிக்குது . சாப்பிட எதாவது கிடைக்குமா?’ என்று கேட்கும் காட்சி உருக  வைக்கிறது. 
 
மேட்டுக் குடிகளின் உணவு அரசியலில் ஒரு உதை விட்டிருப்பதும் சபாஷ் 
 
அன்னபூரணியின் தொழுகைக் காட்சி அருமை. 
 
பாதை மாறாமல்  பயணித்து , அசத்தலான சமையல் போட்டிகளில் கிளைமாக்ஸ் வைத்து முடிக்கிறார் இயக்குனர். 
 
பூமி உருண்டையை தாங்கும் அட்லஸ் போல அன்னபூரணியைத் தாங்குகிறார் நயன்தாரா . சிறப்பான நடிப்பு. அதற்காக ஸ்ரீரங்கத்துககே  போகாமல் கிரீன் மேட்டில் சில காட்சிகளில் நடித்து இருப்பது,  எல்லாம் அநியாயம் 
 
மற்ற நடிகர்கள் கொடுத்த வேலையை குறையின்றி  செய்துள்ளார்கள். 
 
தெலுங்கு வாடை வீசினாலும் தமனின் பின்னணி இசை பின்னி எடுக்கிறது.  விட்டால் வீங்கி வெடித்து விடும்  அளவுக்கு பில்டப் தரும் இசை . 
 
சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் ஓவர் ஜிகினா . யதார்த்தம் மிஸ்ஸிங். 
 
 ஸ்ரீரங்கத்து வீடு செட்டில்  செயற்கையாகப் பல்லிளிக்கும் கல் தூண்கள் தவிர, துரைராஜின் கலை இயக்கமும் சிறப்பு. 
 
பிரபல சமையற்கலை நிபுணர் என்றால் அவர் நான் வெஜ் சமைச்சுத்தான் ஆகணுமா?  பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா? உலகம் எங்கும்  பிரபலமான சைவ சமையற்கலைஞர்களும் கூட கோடி கோடியாக சம்பாதிக்கும் போது, அதற்கு ஏன் முயலவில்லை?  என்பதை சொல்லாமல் கடந்து போகிறார்கள்.  கதைக்கு அது சுவாரசியம் இல்லை என்றாலும்,  லாஜிக்காக அதை சரி செய்து விட்டு அல்லவா அடுத்த படிக்கட்டை தொடவேண்டும் அன்னபூரணி பாப்பா? 
 
தாலி கட்ட சில நிமிடம் முன்பு அன்னபூரணி வீட்டை விட்டு ஓடுவது எல்லாம் ஓவர். 
 
பீத்தோவன் ரெஃபரன்ஸ் எல்லாம், நிச்சயதார்த்தத்துக்கு வரச் சொன்னால் சீமந்தத்துக்கு வருகிறது . அதே போல விபத்தால் அன்னபூரணிக்கு ஏற்படும் இழப்பு பற்றி செல்போன் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகனுக்கே புரிந்த பிறகும் அந்த சீன் ஓடி ஓடி  ரீல் அந்து ….அப்புறமாக வெடித்து அழுகிறார் நயன்தாரா .
 
ஸ்ரீரங்கத்தை ஒரு காட்சியில் கூட  உணர முடியவில்லை என்பது பெரும் சோகம் 
 
அடுப்பே இல்லாமல் சமைக்கும் காட்சி   கிளைமாக்ஸ் ஆக வந்து இருந்தால்  இந்தப் படம் சும்மா தெறிக்க விட்டிருக்கும் 
 
இப்படி சில குறைகள் இருந்தாலும் , வித்தயாசமான கதை, அதில் சமூக நல்லிணக்கப் பார்வை , நல்ல படமாக்கல் , நயன்தாராவின் நடிப்பு இவற்றால் ருசிக்க வைக்கிறாள் அன்னபூரணி 
 
அறிமுக  இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணாவுக்கு வாழ்த்துகள் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *