அவ்னி மூவி மேக்கர்ஸ் சார்பில் குஷ்பூ சுந்தர் மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏ சி எஸ் அருண்குமார் தயாரிக்க, தமன்னா , ராஷி கன்னா , யோகி பாபு, வி டி வி கணேஷ், சந்தோஷ் பிரதாப், ராமச்சந்திர ராஜு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க,
வெங்கட் ராகவன் , எஸ் பி ராமதாஸ் ஆகியோரோடு சேர்ந்து கதை வசனத்தையும் வெங்கட் ராகவனோடு சேர்ந்து திரைக்கதையையும் எழுதி கதாநாயகனாக நடித்து சுந்தர் சி இயக்கி இருக்கும் படம்.
என்னதான் விளம்பரத்தில் தமன்னா அரணமனை என்று உச்சரித்தாலும் , இது அரண்மனை 4 என்பதே சரி .
நீரிலும் நிலத்திலும் வாழும் பாக் என்ற பேய்/ ஆவி/ துஷ்ட சக்தி பற்றிய கதைகள் அசாமில் உண்டு . இந்த அரண்மனை 4 படத்துக்காக அந்த பேயை இழுத்து வந்திருக்கிறது படக் குழு (உண்மையில் பாக் என்பது குல தெய்வம் போன்றது என்ற கருத்தும் உண்டு)
ஒரு நிலையில் அந்தப் பேயைக் கட்டி அடைத்து பிரம்மபுத்ரா நதியின் ஆழத்தில் புதைக்கிறார்கள் . ஒரு தந்தையும் மகளும் படகில் போகும்போது , படகின் துடுப்புக் கழி பட்டு வெளியே வரும் அந்த பாக் பேய், படகில் இருக்கும் இளம்பெண்ணைக் கொல்கிறது. யாரைக் கொல்கிறதோ அந்த நபரின் உருவம் எடுக்கும் சக்தி உள்ள அந்தப் பேய், மகள் வடிவில் வீட்டுக்கு வந்து அம்மாவையும் கொல்கிறது.

தமிழ் நாட்டில் கோவூர் என்ற ஊரில் உள்ள அம்மனுக்கு பத்து வருடத்துக்கு ஒரு முறை திருவிழா நடக்கும் நாளில் பிறந்து, சிவப்பு நிற நட்சத்திரக் குறியோடு இருக்கும் மூன்று நபர்களைக் கொல்ல வேண்டும் அந்தப் பேய்க்கு.
அப்படி ஒவ்வொரு பத்து ஆண்டுத் திருவிழாவிலும் நட்சத்திரக் குறியோடு பிறக்கும் மூன்று பேரைக் கொன்று விட்டால் அந்த பேய்க்கு யாரும் வீழ்த்த முடியாத சக்தி கிடைக்கும் .
நகரில் இருக்கும் வக்கீல் ஒருவரின் ( சுந்தர் சி ) தங்கை (தமன்னா) காதல் திருமணம் செய்து கொள்ள, அதைக் குடும்பம் ஏற்காத நிலையில் அந்தத் தங்கை தனது காதல் கணவனோடு (சந்தோஷ் பிரதாப்) கோவூரில் குடும்பம் நடத்துகிறாள். அங்கு உள்ள அரண்மனையை பழுது பார்க்கும் வேலையில் இருக்கிறான் அவளது கணவன் .
அவர்களுக்குப் பிறந்த மகள் நட்சத்திரக் குறியோடு பிறந்து இருக்கிறாள். . அவளைக் கொல்ல நினைக்கும் பாக் பேய் முதலில் தந்தையைக் கொல்கிறது. தந்தையின் உருவம் எடுத்த பேய் குழந்தையைக் கொல்ல வர, தடுக்கும் மனைவியைக் ( தமன்னா ) கொல்கிறது . ஆனால் மனைவி பாக் பேயாக மாறவில்லை . மகளைக் கொல்ல முயலும் பாக் பேயை, தமன்னா பேய் தடுக்கிறது .
இதற்கிடையில் இந்த சிறுமி பிறப்பதற்கு பத்து வருடம் முந்தைய திருவிழாவில் பிறந்த ஒரு இளைஞனை பாக் பேய் கொல்கிறது. அதற்கும் பத்து வருடம் முன்பு அதே திருவிழா தேதியில் பிறந்த இன்ஸ்பெக்டரையும் கொல்கிறது.

இதற்கிடையில் பாக் பேய் சாமியார் ஒருவரைக் கொன்று அவரது உருவம் எடுத்து – குழந்தையைக் கொல்வதைத் தடுக்கு
ம் அம்மா ஆவியை அழித்து- குழந்தையைக் கொல்ல முயல, இதை எல்லாம் கண்டு பிடிக்கும் வக்கீல், தன் தங்கை மகளான சிறுமியை காப்பாற்றினாரா இல்லையா? என்ன ஆச்சு என்பதே படம் .
பாக் பேய் விஷயம் புதுசு . ஈர்ப்பு . ஆனால் பாக் பேய் கொல்லும் நபர்கள் எல்லாருமே பாக் பேய் ஆவார்கள் என்றால் தமன்னா ஏன் ஆகவில்லை? காரணம் தாய்ப் பாசம் என்றால் அதுவரை பிள்ளைகள் மேல் பாசமாக இருந்த அப்பா மட்டும், செத்த உடன் பாக் பேயாக மாறுவது ஏன் ? அவர் மட்டும் ஏன் செத்த பிறகும் தமன்னா போல பாசத்தோடு அன்பான அப்பாவாக பாக் பேயிடம் இருந்து தனது பிள்ளைகளைக் காப்பாற்ற முயலவில்லை? என்ற கேள்வி வருகிறது .
பேய்க்கும் சிறுவனுக்குமான காட்சிகளில் உண்மையிலேயே அசத்தி இருக்கிறார் சுந்தர் சி . அனுபவ நேர்த்தி விகசிக்கும் காட்சிகள் அவை. அதுபோல அவருடைய உழைப்பும் அபாரமானது
அதே போல அம்மா பேய்க்கும் பிள்ளைகளுக்குமான செண்டிமெண்ட் காட்சிகளும் அருமை .
அப்பா பேய் பிள்ளைகளைக் கொல்ல போராட, அதைத் தடுத்தபடி அப்பா பேயிடம் சித்திரவதை அனுபவிக்கும் அம்மா அதை ‘ஒளிந்து கொண்டு தேட வைக்கும் விளையாட்டு’ என்று நம்ப வைக்கும் காட்சியில் , life is beautiful படத்தை ஒரு துளி கொடுக்க முயன்று இருக்கிறார்கள் . ம்ம்ம்…
ஹிப் ஹாப் ஆதி இசையில் ஜோ ஜோ ஜோ பாட்டு முணுமுணுக்க வைக்கிறது.
கிருஷ்ணமூர்த்தியின் ஒளிப்பதிவும் குருராஜின் கலை இயக்கமும், காடு சம்மந்தப்பட்ட காட்சிகளிலும் கிளைமாக்ஸ் பாடலில் அம்மன் சிலைக்கு உள்பகுதி சண்டையைக் காட்டும் காட்சிகளிலும் பாராட்டுப் பெறுகிறது.
ஏகப்பட்ட காமெடி நடிகர்கள் இருந்தாலும் இடைவேளை வரை நகைச்சுவை விசயத்தில் வெப்ப அலை வீசுகிறது படம் கிளைமாக்ஸ்க்கு முந்தைய கொஞ்ச நேரம் மட்டுமே சிரிக்க முடிகிறது
பேய் , நகைச்சுவை, செண்டிமெண்ட், கவர்ச்சி என்ற சுந்தர் சி யின் பேக்கேஜில் இந்தப் படத்தில் கடைசி பாடல் தவிர கிளாமர் ஏரியாவும் வறண்டு வெடித்துக் கிடக்கிறது .
பாக் பேய் என்று புதிய பேயைக் கொண்டு வந்தாலும் , மற்ற வழக்கமான அரண்மனை படங்களைப் போல, ஒரு பேய், ஒரு பிளாஷ்பேக், செண்டிமெண்ட், கடைசியில் பிரம்மாண்டமான சிலை கோவில் , திருவிழா , ஆன்மீக- ஆவி மோதல் என்று…. மற்ற அரண்மனை படங்களின் அதே காட்சிகளோடுதான் இந்தப் படமும் இருக்கிறது . திரைக்கதை மே மாத மேட்டூர் டேம் போல இருக்கிறது .
தமன்னா பாட்டியா என்று டைட்டில் போடுகிறார்கள் . பாட்டியா என்று கேட்டால் , ஆமாம் என்று எல்லாம் சொல்ல முடியாது என்றாலும் தமன்னா முகத்தில் முதிர்ச்சி தெரிகிறது . ராஷி கன்னா ஒப்புக்கு சப்பாணி .
கிளைமாக்ஸ் அம்மன் பாட்டில் சிம்ரனும் குஷ்பூவும் வந்து ஆடுகிறார்கள் . குஷ்பூ ஃபிரேமை ஆக்கிரமிக்க , சிம்ரன் ஆங்காங்கே தெரிகிறார் . படத்தில் ராஷி கன்னா மாதிரி பாட்டில் சிம்ரன்
புதுமையாக பாக் பேயைக் கொண்டு வந்தவர்கள் அதிலேயே திருப்தி அடைந்து விட்டதால் திரைக்கதை பாகிஸ்தான் போய் விட்டது.
எனினும் கடந்த நான்கு மாதங்களாக ஒரு நல்ல கமர்ஷியல் திரைப்படம் கூட தமிழில் வராமல் வறண்டு போய் இருக்கும் தமிழ் சினிமா ரசிகனுக்கு , அரண்மனை 4, பசித்த வயிற்றுக்கு கிடைத்த பட்டை கிராம்பு தூக்கலான பிரியாணி .