விஷன் ஐ மீடியா சார்பில் தினேஷ் கார்த்திக் தயாரிக்க, வினய், ஹன்சிகா, லக்ஷ்மி ராய், ஆண்ட்ரியா, சந்தானம் , கோவை சரளா கோட்டா சீனிவாசராவ் ஆகியோர் நடிக்க , கதை திரைக்கதை வசனம் எழுதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து சுந்தர் சி இயக்கி இருக்கும் படம் அரண்மனை . அரசாட்சி இருக்கிறதா? பார்க்கலாம்
பிறந்த கிராமத்தில் தனக்கு இருக்கும் பாழடைந்த அரண்மனை போன்ற ஒரு பெரிய பங்களாவை, தனது சித்தப்பா (சித்ரா லட்சுமணன்)வின் கடனை அடைக்க உதவுவதற்காக விற்கும் நோக்கத்தில், நகரத்தில் இருந்து மீண்டும் கிராமத்துக்கு தனது மனைவி மாதவி(ஆண்ட்ரியா)யோடு வருகிறான் முரளி (வினய்). சிறு வயதில் வேலைக்காரனை (மனோபாலா) கல்யாணம் செய்து கொண்டு ஓடிப் போன அத்தையும் (கோவை சரளா) வருகிறார் . நகரில் படித்துக் கொண்டிருந்த — சித்தப்பாவின் மகள் மாயாவும் (லக்ஷ்மி ராய்) வருகிறாள் .
அந்த வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணின் ஆவி வேலைக்காரர்கள் மூவரை அடுத்தடுத்து கொல்கிறது . தவிர பங்களாவில் தங்கி இருக்கும் மேற்படி அனைவரையும் அவ்வப்போது பயமுறுத்துகிறது. ஊரில் இருந்து வரும் மாதவியின் அண்ணன் ரவி(சுந்தர் சி )க்கும் மாயாவுக்கும் காதல் வருகிறது. ஆரம்பத்தில் ஆவியை நம்பாத ரவி பின்னர் உண்மையை உணர்கிறான் . ஆவி யார் என்பதை கண்டு பிடிக்கிறான் .
பல வருடங்களுக்கு முன்பு தன் ஊருக்கு வந்த முரளிக்கு செல்வி என்ற பெண் மீது (ஹன்சிகா ) காதல் வருகிறது . அம்மன் இறங்கி குறி சொல்லும் தெய்வீகப் பெண்ணான செல்வி முதலில் அந்த காதலை மறுக்கிறாள். பின்னர் முழுமையாக ஏற்கிறாள்.
ஊருக்கு கிளம்பிக் கொண்டு இருக்கும் முரளியை சந்தித்து ஆழமான தனது காதலை சொல்ல செல்வி போகும்போது , கோவில் நகைகளை திருடு போனது பற்றி பதறும் ஊர் நாட்டாமை (சந்தான பாரதி ) செல்வியையும் கோவில்வரை வர சொல்கிறார் . அங்கு போகும் செல்வி நகைகளை திருடியது , இப்போது அரண்மனையை வாங்க முயலும் பணக்காரன் ஒருவன்(சரவணன்) என்பதை உணர்கிறாள்.
விளைவாக, செல்வியை கொடூரமாக அடித்து முரளி இருக்கும் அந்த பங்களாவில் அவனுக்கு தெரியாமலே கொலை செய்து அந்த பங்களாவில் புதைக்கின்றனர்.
இப்போது அந்த ஆவி தன்னை கொன்ற அனைவரையும் கொன்று விட்டு முரளியுடன் நிரந்தரமாக வாழவோ அது முடியாத போது அவனையே கொல்லவோ முடிவு செய்து களம் இறங்குகிறது. தனது தங்கை மாதவியின் கணவனான முரளியை ரவியால், மற்றவர்களின் உதவி, புத்திசாலித்தனம், தெய்வ சக்தி , இவற்றின் துணையோடு காக்க முடிந்ததா ? இல்லை அந்த காதல் பெண் பேயின், பெயின் நிறைந்த விருப்பம் வென்றதா என்பதே அரண்மனை.
திகைக்க வைக்கும் திகில் காட்சி , சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சி , ஜில் தட்ட வைக்கும் கவர்ச்சிக் காட்சி என்ற ஆர்டரில் அடுத்தடுத்து காட்சிகளை அடுக்கி , ஒரு நிலையில் காதல் , செண்டிமெண்ட் , பக்தி , தாய்மை என்று எல்லாவற்றையும் கலந்து..கொஞ்சம் கூட போரடிக்காத முழுமையான கமர்ஷியல் படமாக படத்தை உருவாக்கி, வெற்றிக் கோட்டை தொட்டிருக்கிறார் சுந்தர் சி
கவர்ச்சிக்கு லக்ஷ்மி ராய் , திகிலுக்கும் கவர்ச்சிக்கும் செண்டிமெண்டுக்கும் ஆண்ட்ரியா, அழகு , காதல், செண்டிமெண்டுக்கு ஹன்சிகா என்று மூன்று கதாநாயகிகளையும் அட்டகாசமாக பயன்படுத்திய விதத்தில் சுந்தர் சி யின் அனுபவமும் திறமையும் தெரிகிறது
அரண்மனையின் பழைய ஜமீன்தாரின் சின்ன வீடாக இருந்த பெண்ணின் பேரனாக , தனக்கும் அரண்மனையில் சொத்துரிமை உண்டு என்பதை நிரூபிக்க ஆதரமான ஒரு போட்டோவை ரகிசயமாக தேட, சமையல்காரனாக வந்து தங்குகிற பாத்திரத்தில் சந்தானம்! முதல் பாதியில் வாய் விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவைக்கு இவர் பெரும் பொறுப்பு ஏற்கிறார் . ஆனால் அவற்றில் சில இரட்டை அர்த்த வசனமாக …ம்ஹும்! ஒரே கெட்ட அர்த்த வசனமாக இருப்பது முகம் சுளிக்க வைக்கிறது .
பேயிடம் அடிவாங்கிய மனோபாலாவுக்கு பல வருட நினைவுகள் மறந்து போக , மீண்டும் வேலைக்காரன் என்ற நினைப்பில் மைத்துனனை பார்த்து நடுங்குவதும் பொண்டாட்டியை ரகசியமாக காதலிப்பதும் அது தொடர்பான காட்சிகளும் நல்ல நகைச்சுவை.
அடுத்த வீட்டுப் பெண் படத்தில் நகைச்சுவை மன்னர் தங்கவேலு ஆரம்பித்து வைத்து, சுந்தர் சியே இதற்கு முன்பு பயன்படுத்திய.அந்த காட்சி … அதாவது ரகசியமாக ஒரு ஹீரோ பாட , இன்னொருவர் வாயசைக்க , வாயசைப்பவரே பாடுவதாக கதாநாயகி நம்பும் ‘எவர் கிரீன்’ ரசனைக் காட்சியை இந்தப் படத்திலும் வைத்துள்ளார் சுந்தர் சி. அதிலும் இந்தப் படத்தில் அது மாதிரி ரெண்டு ஜோடி
திகில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும் விதத்தில் சுந்தர் சி யின் இயக்கம் ஜொலிக்கிறது. அரண்மனை வீட்டை விதம் விதமான ஷாட்களில் படம் பிடித்த வகையில் அவரது தொழில் நுட்பத் திறன் பளிச்சிடுகிறது. யு.கே.செந்தில் குமாரின் ஒளிப்பதிவு அழகாக வண்ண மயமாக , சிறப்பாக இருக்கிறது. கம்பியூட்டர் கிராபிக்சில் அட்டகாசமான விளையாடி இருக்கிறார்கள் . ஒரு இடை வேளைக்கு பிறகு மீண்டும் வேப்பிலை ஆட்டம் காட்டி உருவேற்றுகிறார் இயக்குனர்.
பரபரப்பான திகில் பகுதி நிறைவுக்கு வந்த உடன் படத்தை முடிக்காமல் காதல் இழப்பின் செண்டிமெண்ட் காட்டி கண்கலங்க வைத்து படத்தை முடிப்பது இயக்குனரின் வெகு ஜன ரசிக ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது .
கடைசி காட்சியில் ரியல் எஸ்டேட் விளம்பரங்களை போகிற போக்கில் நக்கல் அடிக்கும் அந்தக் காட்சி…. சீசன் ரகளை .
அரண்மனை …. ஆட்சி
மகுடம் சூடும் கலைஞர்கள்
——————————
சுந்தர் சி , யூ.கே.செந்தில் குமார் , சந்தானம், ஹன்சிகா, ஆண்ட்ரியா ,