கிருத்திகா பிலிம் கிரியேஷன் சார்பில் தயாரித்து ஏ எஸ் முத்தமிழ் என்பவர் கதை எழுத,
புதுமுகம் ராம் குமார் — ,அருந்ததி ஜோடியாக நடிக்க,
இயக்குனர் பாலாவிடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய சுந்தர இளங்கோவன் திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும்ம் படம் அர்த்தநாரி . படம் மாதொருபாகனா ? இல்லை இரண்டுங்கெட்டானா ? பார்க்கலாம் .
பெண்களைக் கடத்தும் கும்பல் ஒன்றைப் பிடிக்கும் முயற்சியில் இருக்கிறார் பெண் போலீஸ் அதிகாரியான சத்யா (அருந்ததி) .
இந்த நிலையில் , அநாதை இல்லம் ஒன்றில் வளர்ந்த இளைஞன் கார்த்திக்கிற்கும் (அறிமுக நாயகன் ராம்குமார்) சத்யாவுக்கும் காதல் வருகிறது.
கார்த்திக் வளர்ந்த அந்த அநாதை இல்லத்தை நடத்தும் பெரியவர் செல்வமாணிக்கம் (நாசர் .)
ஏழ்மை காரணமாக சிறார் தொழிலாளர்களாக பல்வேறு இடங்களில் வேலை என்ற பெயரில் கொடிய சித்திரவதைகளுக்கு ஆளாகும் சிறுவர் சிறுமியரை மீட்டு
சொந்த ஊருக்கு அனுப்புவதையும் படிக்க வைப்பதையும் பெரிய சமூக சேவையாக செய்கிறார் மாணிக்கவேல் .
வேலைக்கு என்று அழைத்து வரப்பட்டு இப்படி கொடுமைக்கு ஆளாகும் சிறுவர் சிறுமியரில் பலரை வெளிநாட்டுக்கு கடத்தி விற்று கோடி கொடியாக சம்பாதிக்கிறார் தொழில் அதிபர் ஒருவர்.
அதை தடுக்கும் செல்வமாணிக்கத்தை கொலை செய்கிறார் தொழில் அதிபர் .
தனது வளர்ப்புத்தந்தை கொல்லப்பட்ட கோபத்தில் பழிவாங்க கார்த்திக் கிளம்ப , சம்மந்தப்பட்டவர்களை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யா முயல,
வெளிநாட்டுக்கு கடத்தப்படும் குழந்தைகள் அங்கே நோய் மருந்து ஆராய்ச்சிக் கூடத்தில் , சோதனை எலிகளுக்கு பதிலாக பயன்படுத்தபடுவது கார்த்திக்கிற்கு தெரிய வருகிறது .
கார்த்திக் ,சத்யா குற்றவாளிகள் மூவரும் ஒரு புள்ளியில் சந்திக்கும்போது என்ன நடக்கிறது என்பதே அர்த்தநாரி.
குழந்தைத் தொழிலாளர் கொடுமையை கதைக்களமாகக் கொண்டு படம் எடுத்தமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் . அதிலும் ஒரு சில காட்சிகளில் தெரியும் வாழ்க்கை நெகிழ வைக்கிறது .
அந்தப் பகுதிகளில் மண்ணும் மணமுமாக முகங்களை நடிக்க வைத்து இருப்பது சிறப்பு .
அப்படி கொடுமைப்படுத்திய ஒருவனை , பாதிக்கப்பட்ட சிறுவன் , ஒருவன் டோல்கேட் சிக்னலில், சாய்க்கும் அந்த ‘வெள்ளரிக்காய் வெஞ்சன்ஸ்’ அட்டகாசமான காட்சி . மிக அவசியமான காட்சி கூட,
சத்யா அரட்ட , கார்த்திக் மடங்கும் அந்த பெண்மை டாமினேட் செய்யும் லவ் ஏரியா , பெண்ணிய ரசனை !
பெரியவர் கேரக்டரை நாசர் சும்மா ஜஸ்ட் லைக் தட் நடித்து விட்டுப் போயிருக்கிறார் .
புதுமுகம் ராம்குமார் ஒகே என்று சொல்லும் அளவுக்கு நடித்துள்ளார் .
ஆங்கிலப் படங்களில் கிளாமராகவும் ஆக்ஷனிலும் கலக்கும் நாயகிகளை மனதில் வைத்து பெண் போலீஸ் அதிகாரி கேரக்டரை அருந்ததி.க்கு கொடுத்து உள்ளார்கள் .
உடம்பு கூட ஒகே . முகம்தான் ஒத்துவரவில்லை . மயக்கத்தில் இருந்து எழும் நபர் “இப்போ நான் எங்க இருக்கேன் ?” என்று கேட்கிற மாதிரியான முக பாவத்திலேயே … பாவம், படம் முழுக்க வருகிறார் .
குறிப்பிடததக்க ஒரு வணிக ரீதியிலான படத்துக்கான கதை இருந்தும் பெரும்பாலான காட்சிகள் சவ சவ என்றே நகர்கின்றன.
குழந்தைத் தொழிலாளர் கஷ்டம், , சிறுமிகள் கடத்தல், போலீஸ் என்கவுண்டர் , காதல் இவற்றில் எதற்கு எங்கே முக்கியத்துவம் தரவேண்டும் எவ்வளவு தரவேண்டும் என்பதில் இயக்குனருக்கு தெளிவு இல்லை .
தேவையே இல்லாமல் நிறைய காட்சிகளை வைத்து விட்டு , விளக்கமாக அழுத்தமாக விஷுவலாக சொல்ல வேண்டிய விசயங்களை எல்லாம் சும்மா ஒப்புவிக்கிறார்கள் .
இரண்டாம் பாதி பொறுமையை சோதிக்கிறது .
பாலாவின் வாசனை தெரியும் அந்த கிளைமாக்ஸ், கொஞ்சம்அ திர்ச்சி ப்ளஸ் நெகிழ்ச்சிதான் .
அதனால் முக்கியக் கதைக்கு பலன் பெரிதாக இல்லை என்றாலும் அப்போது காட்டி இருக்கும் சிரத்தையை படம் முழுக்க காட்டி இருக்கலாம் .
அர்த்தநாரி … பத்து பர்சன்ட் மட்டும் !