ஸ்ரீகாந்த் நடித்த ‘பம்பரக்கண்ணாலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆர்த்தி அகர்வால், தெலுங்கில் பல படங்களில் நாயகியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஒரு நிலையில் அளவுக்கு மீறி அதிகரித்த தனது உடல் எடையை குறைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்ள, அதில் ஏற்பட்ட பக்கவிளைவு காரணமாக, கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தார்.
ஆர்த்தி அகர்வால் அறுவை சிகிச்சை செய்து உடல் எடையை குறைத்த உடனேயே ஒப்பந்தமான படம் ‘ஆபரேஷன் க்ரீன் ஹண்ட்’ (Operation Green Hunt) . நக்சலைட்டுகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தில் ஆர்த்தி அகர்வால், நக்சலைட்டாக நடித்துள்ளார்.
ஒரு குடும்பத் தலைவி போலீஸ் கொடுமையால் தன் கணவனை இழந்து மேலும் பல கொடுமைகளை அனுபவித்து ஒரு நிலையில் பொங்கி எழுந்து , நக்சலைட்டாக மாறுகிறார்.
காட்டுக்குள் வாழும் ஆர்த்தி அகர்வால், தனது சக நக்சலைட்டுகளிடம்,” நாமெல்லாம் நல்ல விசயங்களுக்காக போராடுகிறோம். ஆனால் ஏன் காட்டுக்குள் கஷ்டப்பட்டு மக்களிடம் இருந்து விலகி இருந்து போராட வேண்டும் ? காட்டுக்குள் இருந்து போராடுவதை கைவிட்டு விட்டு, நாட்டுக்குள் மக்களில் ஒருவராக இருந்து போராட வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டு வருகிறார்.அப்புறம் என்ன நடந்தது என்ன இந்தப் படத்தின் கதை .
அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப் படத்தினை கான் புரொடக்ஷன்ஸ் சார்பில், என்.ஏ.ரஹ்மான் கான் தயாரிக்க, பரத் பாரபல்லி கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
இப்படத்திற்குப் பிறகு மீண்டும் சினிமா உலகில் ரீ என்ட்ரி ஆக நினைத்த ஆர்த்தி அகர்வால், இப்படத்தில் மிக சிறப்பாக நடித்துள்ளாராம். இப்படத்தின், படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து படம் தயாரான போது, ஆர்த்தி அகர்வால் படத்தை பார்க்க வேண்டும், என்று ஆர்வமாக இருந்தாராம்.
இது குறித்துப் பேசும் தயாரிப்பாளர் ரஹ்மான் கான் , “‘படத்தில் நடித்து முடித்தவுடன், ஆர்த்தி அகர்வால் தன்னிடம் படத்தை போட்டு காட்ட சொல்லி அடிக்கடி சொல்லுவார். ஆனால், நான், பிறகு போட்டு காட்டுகிறேன், என்று கூறிவந்தேன்.
ஒரு முறை கோபத்தோடு என்னிடம், “நான் செத்ததற்கு பிறகு தான் படத்தைப் போட்டுக் காட்டுவீங்களா சார்” என்று ஆர்த்தி கேட்டார். அது தற்போது உண்மையாக நடந்துவிட்டது, என்னை உறுத்துகிறது.
அவருடைய கடைசிப் படத்தை அவரால் பார்க்க முடியாமல் போனதற்கு நானும் ஒரு காரணமாகிவிட்டேன் என்ற வருத்தம் உள்ளது. இருப்பினும், இந்த படத்தை இந்தியா முழுவதும் கொண்டு சென்று வெற்றி பெறச் செய்வதே, எங்கள் படக்குழுவினர் அவருக்கு செய்யும் மரியாதை என்று நான் கருதுகிறேன்” என்கிறார்.
சமீபத்தில் இசை வெளியீடு நடைபெற்ற ஆபரேஷன் க்ரீன் ஹண்ட் படம் வரும் அக்டோபர் 16ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.