நடிகர் விஜயகுமாரின் மகன் என்ற பின்னணியில் இருந்து சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகி, ஆரம்பத்தில் சில குறிப்பிடத்தக்க படங்களைக் கொடுத்தவர் அருண் விஜய் . அடுத்து நீண்ட போராட்டத்துக்கு பிறகு தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக செதுக்கிக் கொண்டு கமர்ஷியல் படங்களில் வெற்றியை ருசிக்க ஆரம்பித்தார் . ஆனால் அதற்குள் அவருக்கு ஏற்பட்டிருந்த வலி, வாய்ப்புகளை சிதற விடக் கூடாது என்ற வைராக்கியத்தைக் கொடுத்திருக்க, கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக அசத்தி எல்லோரின் பாராட்டுக்களையும் பெற்றார்.
அடுத்து அவர் ஹீரோவாக நடித்த வா டீல் திரைப்படம் ரிலீசுக்கு மாஞ்சா பூசிக் கொண்டிருக்கிறது . அது மட்டுமின்றி , கன்னடத்தில் புனித் ராஜ்குமாருடன் சக்கர வியூகா என்ற படத்தில் இரண்டாவது ஹீரோ, தெலுங்கில் ராம் சரணுடன் புரூஸ்லீ என்ற படத்தில் இரண்டாவது ஹீரோ என்று மொழிகளைக் கடந்து பயணிக்கும் அருண் விஜய் , ஓர் இந்திப் படத்தில் ஹீரோவாக களம் இறங்குகிறார் . இந்த நிலையில் சினிமாவில் இன்னும் ஒரு முயற்சியாக இன் சினிமாஸ் என்டர்டெயின்மென்ட் (In Cinemas Entertainment– ICE ) என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து இருக்கிறார் .
ICE பற்றிப் பேசும் அருண் விஜய் ” பக்கத்து மாநில சினிமாக்காரர்கள் எல்லாம் தமிழ் சினிமா ரசிகர்களை கொண்டாடுகிறார்கள் . புதுமையை – நல்ல முயற்சிகளை வரவேற்க தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இணை யாரும் இல்லை என்கிறார்கள். அவர்கள் நமது ரசிகர்களைப் பாராட்டுவதைக் கேட்ட போது எனக்கு உண்டான எண்ணம்தான் இந்த தயாரிப்பு நிறுவனம் .
என் மாமனாரும் மைத்துனரும் என்னை வைத்து படங்கள் தயாரிப்பதற்கு என்றே ஃபெதர் டச் என்ற நிறுவனம் வைத்து இருப்பதும் எனது வணிக ரீதியான வெற்றிப் படங்கள் பல அவர்களின் தயாரிப்பாக வந்து கொண்டிருப்பதும் அனைவரும் அறிந்த விசயம்தான் .
ஆனால் இந்த இன் சினிமாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் புதிய கலைஞர்களுக்கான களமாக இருக்கும். இதில் வரும் படங்களில், தேவை என்றால் ஒரு கெஸ்ட் ரோலில் நான் நடிக்கலாம் . அவ்வளவுதான் .
இது முழுக்க முழுக்க புதிய படைப்பாளிகள் – புதிய கலைஞர்களின் படைப்புக்களை கொண்டு வரும் நிறுவனமாக இருக்கும்
இந்த துவக்க நிகழ்ச்சிக்கு வந்து வாழ்த்தி இருக்கும் என் தாய் தந்தைக்கு நன்றி . என் மனைவி இந்த நிறுவனத்தின் கதைத் தேர்வுக் குழுவில் இருப்பார் ” என்கிறார்
வாழ்த்துகள் அருண் விஜய் !