முன்தினம் பார்த்தேனே , தடையறத் தாக்க போன்று, தடையில்லாத் தமிழில் தனது படங்களுக்கு பெயர் வைத்து இயக்கியவர்தான், பெற்றோர் வைத்த சொந்தப் பெயரையும் செந்தமிழில் மாற்றிக் கொண்ட, இயக்குனர் மகிழ் திருமேனி .
இப்போது ஆர்யா ஹன்சிகா ஜோடியாக நடிக்க, நேமிசந்த் ஜபக் சார்பில் ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்க தனது மூன்றாவது படமாக மகிழ்திருமேனி இயக்கும் படத்தின் பெயர் ‘மீகாமன்‘
தமிழ் உணர்வுள்ள எல்லோரும் ஒரு முறை மானசீகமாக எழுந்து நின்று மகிழ் திருமேனியைப் பாராட்டி கரவொலி எழுப்ப வேண்டும்… இந்த மீகாமன் என்ற பெயருக்காகவே!
அப்படி ஒரு அரும்பெரும் தமிழ்ப்பெயர்தான் இந்த மீகாமன்
“மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது” என்கிறது வெற்றி வேட்கை என்ற பழந்தமிழ் நூல். மீகாமன் என்ற சொல்லுக்கு மீயான் என்று ஒரு மாற்றுச் சொல்லும் உண்டு.
“மீயான் நடுங்க நடுவு நின்று ஓங்கிய கூம்பு முதல் முறிய வீங்கு பிணி அவிழ்ந்து கயிறு கால் பரிய வயிறு பாழ் பட்டாங்கு இதை சிதைந்து ஆர்ப்பத் திரை பொரு முந்நீர் இயங்கு திசை அறியாது யாங்கணும் ஓட மயங்கு கால் எடுத்த வங்கம் போல ” என்று புயலில் சிக்கிய மரக்கலம் பற்றி பதைபதைப்போடு பதிவு செய்திருக்கிறது மணிமேகலை .
அதாவது “சுழலும் புயலால் வங்கம் (பாய்மரக்கப்பல் )சிதைவது உண்டு. அப்போது அதன் கூம்பு முறியும். அதில் கட்டிய கயிறு அறுபடும்.அடுத்தபடியாக ‘இதை’ என்று அழைக்கப்படும் பாய் கிழிந்து சிதையும். அதனை ஓட்டும் ‘மீயான்’ நடுங்குவான்” என்று இதற்குப் பொருள் .
ஆக, இந்த மீகாமன் என்ற சொல்லுக்கு பாய்மரக்கப்பலை செலுத்தும் மாலுமிகளின் தலைவன் என்பதே சரியான பொருள் . ஆதாரம் மரக்கல மீகாமர் (மதுரைக். 321, உரை) . தவிர மரைனர்ஸ் காம்பஸ் (mariners compass) என்ற கருவிக்கு ‘மீகாமன் வட்டை’ என்றுதான் பொருள் சொல்கிறது.
இந்த மீகாமன் படத்தின் பாடல்களை பண்பலை ஒன்றில் வெளீட்டு விட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்து முன்னோட்டம் ஒன்றையும் (டிரைலர்) சிறு முன்னோட்டம் ஒன்றையும் (டீசர்) திரையிட்டுக் காட்டினார்கள். சதீஷ்குமாரின் ஒளிப்பதிவு , தமனின் இசை , இரண்டின் துணையோடு மகிழ் திருமேனியின் அட்டகாசமான ஷாட்களோடு பிரம்மாதமாக இருந்தன அவை இரண்டும்.
ஆனால் இரண்டிலுமே ஹன்சிகாவை கொஞ்சமாகத்தான் காட்டுகிறார்கள். ஏன் சார்?
படத்துக்கான கதாநாயகி வேட்டையில் இயக்குனர் இருந்தபோது தயாரிப்பாளர்தான் ஹன்சிகாவை கதாநாயகியாக முடிவு செய்து கொடுத்தாராம்.
“படத்தில் எனக்கு இரண்டரை பாடல்கள்தான்” என்றார் ஆர்யா . “ஆக்சுவலா மூணு பாடல் . மூணாவது பாடல் அரை பாடல் இல்ல. குறும்பாடல்” என்றார் இயக்குனர் .
“எந்தப் பாட்டிலும் ஆர்யா வாயசைத்து நடிக்கவில்லை” என்று சொன்ன ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார் “மகிழ்திருமேனி தனது வீட்டிலேயே படத்தின் இணை இயக்குனரான அவருடைய சகோதரருடன் சேர்ந்து, என்ன ஷாட் வைக்கவேண்டும் என்று முடிவு செய்து அதே தனது பர்சனல் கேமராவில் ஷூட் செய்து கொண்டு வந்து காட்டுவார். அதை அப்படியே வச்சு லைட்டிங் மட்டும் நான் பண்ணுவேன் . சூப்பரா வந்திருக்கு ” என்றார் .
“விரைவில் மகிழ் திருமேனி ஹாலிவுட் படத்தை இயக்குவார் . அதில் நானும் இருப்பேன்”என்றார் இசையமைப்பாளர் தமன்.
இதோ ஹன்சிகா அழுத விவகாரம் !
கற்பழிப்பு குறித்த ஃபிராய்டின் ரேப் தியரியை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தில் ஒரு பாடலை மதன் கார்க்கி எழுதி இருக்கிறாராம்.
அந்தப் பாடலை படமாக்கி முடிந்த உடன் “இந்தப் பாடல் இதுவரையிலான எனது இமேஜை அழித்து விடும் போல இருக்கிறதே” என்று ஹன்சிகா அழுதே விட்டாராம்.
ஆனால் இயக்குனர் “பாடலை எடுக்கும்போது உங்களுக்கு தெரியும் விஷயங்களை வைத்து முடிவு செயக் கூடாது.
படத்தில் எப்படி வரும் என்பதுதான் முக்கியம் . தப்பாக வராது .
அதற்கு நான் பொறுப்பு ” என்று சமாதானப்படுத்தினாராம்
“ஏன் ஆர்யா.. ஹன்சிகாவை அழுததற்கு நீங்கதான் காரணமா ?” என்றால் .. “இல்லீங்க கிளிசரின்தான் காரணம் ” என்றார் ஆர்யா.
அப்போ இமேஜ் குறித்த ஹன்சிகாவின் அந்த அழுகை போய் அழுகையோ?