அந்த அராஜகக் கேள்வியை அப்படி அழகாக எதிர்கொண்டார் ஆர்யா, அமர காவியம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் !
ஷோ பீப்புள் நிறுவனம் சார்பில் ஆர்யாவே தயாரிக்க, ஜீவா சங்கரின் இயக்கத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோவாக நடிக்கும் படம் அமரகாவியம் .
இந்த ஜீவா சங்கர், மறைந்த ஒளிப்பதிவாளர் இயக்குனர் ஜீவாவின் ஒளிப்பதிவு உதவியாளராக இருந்து பின்னர் விஜய் ஆண்டனி நடித்த நான் படத்தின் மூலம் இயக்குனர் ஆனவர் . அதை விட முக்கிய விஷயம் ஆர்யா தனது முதல் படமான உள்ளம் கேட்குமே படத்தில் நடிக்கும் வாய்ப்பை தேடி ஜீவாவை சந்தித்த போ து , ”இந்தப் பையன் பொருத்தமாக இருப்பான்” என்று ஜீவாவிடம் கூறியவர் இந்த ஜீவா சங்கர் .
அன்று முதலே ஜீவா சங்கரும் ஆர்யாவும் நல்ல நண்பர்கள் .
ஆர்யாவின் தம்பி சத்யா நடிப்பதற்கு பொருத்தமானவன் என்ற விசயத்தை முதன் முதலாக சொல்லி, சத்யாவின் மனதில் நடிப்பாசையை ஏற்படுத்தி, அதனால் “படிக்கிற பையனை ஏண்டா கெடுக்கற ?” என்று ஆர்யாவிடம் திட்டு வாங்கியவர் ஜீவா சங்கர்.
ஆனால் விதி வலியது !
புத்தகம் என்ற படத்தில் நாயகனாக சத்யா அறிமுகமாகி படம் ஓடாத நிலையில், நான் படத்தின் மூலம் ஜீவா சங்கர் குறிப்பிடத்தக்க இயக்குநராகி விட, தனது அடுத்த படத்துக்கான கதையை ஜீவா சங்கர் நட்பின் அடிப்படையில் ஆர்யாவிடம் சொல்ல, தானே அந்தப் படத்தை தயாரிக்க ஆர்யா சம்மதிக்க, ஹீரோ யார் என்ற கேள்விக்கு ஜீவா சங்கர் சொன்ன பெயர் “சத்யா ”
ஜீவா சங்கர் இரண்டாவது படிக்கும்போது கேள்விப்பட்ட ஒரு சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் இது, முழுக்க முழுக்க ஒரு பீரியட் படமாம். கதாநாயகன் பிளஸ் டூ படிக்கும்போது நடந்து அப்போதே முடியும் கதையாம்.
படத்தைப் பார்த்த நயன்தாரா கண்கலங்கி இந்தப் படம் தன்னை மிகவும் பதித்து விட்டதாக அழுதாராம்.
படம் ஆரம்பித்த பிறகு படத்தை எடுத்து முடித்து படம் பார்க்க ஜீவா சங்கர் அழைக்கும் வரை ஆர்யா எந்த விசயத்திலும் தலையிடவே இல்லை என்பதை நெகிழ்வுப் பெருமையாக சொல்கிறார் ஜீவா சங்கர் .
படத்தின் இசை இயக்குனர் ஜிப்ரான், பேசும்போது ” படத்தின் இயக்குனர் ஜீவா சங்கர் இந்தப் படத்தில் மிக வித்தியாசமான ஷாட்கள் வைத்து இருக்கிறார் . அதற்கு ஏற்ப பின்னணி இசை அமைத்தது சுவையான அனுபவம் . இந்தப் படம் சம்மந்தப்பட்ட எல்லோருக்குமே , அமரகாவியததுக்கு முன் அமர காவியத்துக்கு பின் என்று அவர்களது இமேஜ் வேறு தளத்துக்கு போகும் ” என்றார் .
அப்போதுதான் அந்தக் கேள்வி ஆர்யாவை நோக்கி கேட்கப்பட்டது .
“உங்க வீட்லயே இன்னொரு ஹீரோ வர்றாரேன்னு பொறாமையா இருக்கா?” என்று .
” என் தம்பி ஹீரோவாக வருவதில் எனக்கென்ன பொறாமை இருக்க முடியும்?
அவன் படிப்பு கேட்டுப் போகக் கூடாதுன்னு ஆரமபத்துல நினைச்சேன் .
ஆனா இந்த அமரகாவியம் படத்தை பார்த்த பிறகு அவன் நடிப்பு எனக்கு நம்பிக்கையை தருது .
அவன் பெரிய ஹீரோவா வந்தா எனக்கு வேற என்ன சந்தோஷம இருக்க முடியும் ?
எனக்குதானே பெருமை “‘என்றார் புன்னகைத்துக் கொண்டே ..ஆனால் கொஞ்சம் சீரியசாக !