நாலு படம் இயக்கினாலே உடனே சொந்தமாக படம் தயாரித்துக் கல்லா கட்டுவதில் குறியாக உள்ள புதிய கலாச்சாரத்தின் முக்கிய நபர் இயக்குனர் சுசீந்திரன் .
நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி , ஆர்யாவின் ஷோ பீப்புள் , தி நெக்ஸ்ட் பிக் பிலிம் நிறுவனங்களுடன் இணைந்து வெண்ணிலா கபடி டீம் புரடக்ஷன் என்ற தனது சொந்த நிறுவனம் மூலமாக சுசீந்திரன் தயாரிக்கும் படம் ஜீவா .
வெண்ணிலா கபடி குழு படத்தில் ஹீரோவாக கபடி வீரராக நடித்த அதே விஷ்ணு ஹீரோவாக நடிக்க, அதே சுசீந்திரன் இயக்க, அங்கே கபடி .. அதுக்கு பதிலாக இங்கே கிரிக்கெட் . இதுதான் ஜீவா .
தமிழ் நாட்டில் ஒருவர கிரிக்கெட் வீரராக இருக்க வேண்டும் என்றால் அவர் யாராக இருக்க வேண்டும் ? எப்படி இருக்க வேண்டும் . யாருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான் .
தமிழ் நாட்டில் கடைக் கோடி கிராமம் வரை எல்லோருக்கும் தெரிந்த இந்த அரதப் பழசான கதையில் வரும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் ஆர்யா “ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி வந்த ‘சக்தே இந்தியா’ படம் மாபெரும் வெற்றி பெற்றது . அங்கே ஹாக்கி .. அது போல இதில் கிரிக்கெட் ” என்று உடைத்து பேச,
உடனே ஒரு நிருபர் அப்படியானால் ” இது சக்தே இந்தியாவின் காப்பியா ? ” என்று கேட்டார் .
சுசீந்திரன் படத்தின் கதைகளின் பின்னால் எல்லாம் இப்படி ஒரு சர்ச்சை இருப்பதால் கேட்கப்பட்ட நியாயமான கேள்வி அது .
உடனே முகம் வெளிறிய சுசீந்திரன் ஆர்யாவை பார்த்து ஒரு “ஏன்சார்….? ஏன்….?” லுக் விட்டு விட்டு , “காப்பின்னு எல்லாம் சொல்ல முடியாது . விளையாட்டை அடிப்படையாக கொண்ட கதைகள் எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கும் . அதுக்காக காப்பின்னு எல்லாம் சொல்லக் கூடாது ” என்று பரபரத்தாராம் (வேண்ணா….. இனிமே டீ ன்னு சொல்லிக்கலாமா சார்?)
‘கேட்ட கேள்வியை சுசீந்திரன் எதிர்கொண்ட விதமே தப்பா இருக்கே…. அப்படீன்னா … கேள்வி உண்மைதானோ ?’ என்று சந்தேகத்துடனேயே முடிந்ததாம் அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு.