அப்ஷாட் என்ற பெயரில் மேன் பவர் நிறுவனம் நடத்தி வரும் மதுசூதனின் அப்ஷாட் பிலிம்ஸ் தயாரிக்க, ஸ்கைலைட் கிரியேஷன்ஸ் சுதிர் ஜெயினின் இணை தயாரிப்பில், பத்ரியின் பி ஆண்டு சி புரடக்ஷன்ஸ் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்க, செந்தில் குமரன் என்பவரின் கதையில் நடிகர் சிவா வசனம் எழுத சூது கவ்வும் கருணாகரன் ஹீரோவாகவும் விஜயலட்சுமி ஹீரோயினாகவும் நடிக்க , பத்ரி திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம் ஆடாம ஜெயிச்சோமடா!
எஸ் அதேதான் !
கிரிக்கெட் சூதாட்டம் என்பது மேட்டுக்குடி படித்த ஆட்களுக்கு மட்டுமே தெரியும் விபரமாக இருக்கிறது . இதை பாமர மக்களுக்கும் புரியும் அளவுக்கு எளிமையாக காமெடி கலந்து சொல்லும் படமாம் இது.
அது பற்றி விளக்கும் இயக்குனர் பத்ரி “நான் இயக்கிய தில்லுமுல்லு படம் வெளிவந்து அதுக்கு பேப்பர்ல விளம்பரம் கொடுத்துட்டு இருந்தப்போதான் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் சிக்கிய ஸ்ரீசாந்த் அழுதுகொண்டே வரும் புகைப்படம் பேப்பரில் வந்தது . நான் உடனே அந்த புகைப்படத்தையும் பயன்படுத்தி இந்த (கிரிக்கெட்) தில்லுமுல்லுவால் அழுகை வரும் . ஆனால் எங்கள் (சினிமா) தில்லுமுல்லுவால் சிரிப்பு வரும் ” அப்படீன்னு விளம்பரம் கொடுத்தேன் . அதுக்கு வந்த வரவேற்பு என்னை ஆச்சர்யப்படுத்தியது . அப்போதான் இந்த சூதாட்டத்தை வைத்தே படம் பண்ண எண்ணம் வந்தது.
என் சீனியர் செந்தில் குமரன் கதையை எழுதினர் . சேர்ந்து திரைக்கதை அமைத்தோம் . நடிகர் சிவாவுக்கு காமெடி சென்ஸ் இருக்கறது மட்டுமில்ல.அவர் நல்ல கிரிக்கெட் ஆட்டக்காரர் கூட . அதனால் அவரையே வசனம் எழுத வச்சோம் . ஆனா அவருக்கு உள்ள இமேஜ் அப்பாவி கால் டாக்சி டிரைவரான ஹீரோ கேரக்டருக்கு பொருந்தாது என்பதால் கருணாகரனை ஹீரோவா போட்டோம் .இட்லிக்கடை வச்சிருக்கற பொண்ணா விஜயலட்சுமியை நடிக்க வச்சோம். படம் நல்ல காமெடியா வந்துருக்கு. செப்டம்பர் மத்தியில் படம் ரிலீஸ் ” என்கிறார்.
பாடல் காட்சிகளை காமிக்கலாக ஃகலர்புல்லாக எடுத்து இருக்கிறார்கள். ஒரு பாட்டில் ஆடுகளம் நரேன் பெல் பாட்டம் எல்லாம் போட்டுக் கொண்டு ஹிப்பி விக்கில் ஆடுகிறார் . சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்த நிப்பு என்ற நகைச்சுவை நடிகருக்கு இந்தப் படத்தில் பெரிய கதாபாத்திரம் கொடுத்து இருக்கிறார் பத்ரி.
படத்துக்குள் ஒரு படம் எடுப்பது போல திரைக்கதை இருக்கிறது . அதை வைத்து “இதெல்லாம் காமடியாடா ? ” என்ற வசனத்தையும் ”படம் ரிலீஸ் அன்னிக்கு குடும்பத்தோட தியேட்டருக்கு வந்துடு ” போன்ற வசனங்களையும் டிரைலரில் போட்டு புன்னகைக்க வைக்கிறார்கள் .
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் டி..ராஜேந்தர் கே. பாக்யராஜ் போன்ற பல திரையுலக ஜாம்பவான்கள் வந்திருந்தார்கள். நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் கிரிக்கெட் விளையாட்டில் பேட் செய்வது போல போஸ் கொடுக்க வைத்து புகைப்படம எடுத்து கவனம் கவர்ந்தது படக் குழு
நிகழ்ச்சியில் பேசிய ராஜேந்தர் ” நான் என்னோட எல்லா படங்களுக்கும் தமிழில்தான் பேரு வச்சேன் . பாக்யராஜ் கூட ஒரு படத்துக்கு டார்லிங் டார்லிங் னு பேரு வச்சாரு. என்னோட ஒரே படத்துல மற்றும் மோனிஷா மோனாலிசான்னு வடமொழி பேரு வர்ற மாதிர் பேரு வச்சேன். ஆனா இப்போ எல்லோரும் என்னென்னமோ பண்றாங்க . யாராரோ மியூசிக் போடறாங்க . எப்படி எப்படியோ பாட்டு எழுதறாங்க . நானும் இனி மேல் ஆங்கிலம் வர்ற மாதிரி பாட்டு எழுதப் போறேன் ” என்றார் .
இணை தயாரிப்பாளர் சுதிர் ஜெயின் “படத்துல கதைப்படி கேரக்டர்கள்தான் ஆடாம ஜெயிக்குது. ஆனா நாங்க கஷ்டப்பட்டுதான் ஓடி ஆடி வேலை செஞ்சுதான் படம் எடுத்து இருக்கோம் ” என்றார். சரிதான் .
ஆனால் படத்தில் ஒரு பாடல் “இனிமே நேர்மை ஜெயிக்காது. நியாயத்துக்கு மரியாதை இருக்காது .நேர்வழி பலன் தராது . எல்லாரும் குறுக்கு வழியில போங்க” என்று சீரியசாக சொல்கிறது .
அப்படியே இருக்கட்டும்ங்க .. அதுக்காக அதுக்கு ஒரு டியூன் போட்டு பாட்டு எழுதி ஷூட் பண்ணி பெரிய ஸ்கிரீன்ல காட்டி .. என்னமோ போடா மாதவா !