அர்ஷிதா, லிபின், வினோ , கமல், ஆண்டனி ஆகிய புதுமுகங்கள் நடிக்க, டி எஸ் திவாகர் இயக்கத்தில் டாக்ஸ் ஸ்டார் நிறுவனம் சார்பில் மணிவேல் மற்றும் மணி இருவரும் தயாரித்துள்ள படம் அம்பேல் ஜூட்.
மேன் பவர் சேவை மூலம் இளம் வயதிலேயே தொழில் அதிபரான அமரன் என்பவர் படம் தயாரிக்க முடிவு செய்தபோது, நண்பர் ஒருவர் மூலமாக இந்தப் படத்தைப் பார்த்து பிடித்துப் போய், இதையே வாங்கி தயாரிப்பாளராகவும் மாறி படத்தை வெளியிடுகிறார் .
தவிர அடுத்து இன்னொரு படத்துக்கான வேலைகளையும் துவங்கி விட்டார் .
சிறுவயதில் தவறுகள் செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு போன நான்கு இளைஞர்கள் ஒரு நிலையில் திருந்தி வாழ முடிவு செய்தபோது,
இந்த சமூகம் அவர்களை எப்படி எதிர்கொண்டது என்ற கதைக் களத்தில் உருவாக்கி இருக்கும் இந்தப் படத்தின் இசையும் இயக்குனரேதான்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் மெலடி பாடல் , டப்பாங்குத்து பாடல், டாஸ்மாக் பாடல் என்று மூன்று பாடல்களை திரையிட்டார்கள். மெலடி பாடலில் கதாநாயகி அழகாக இருந்தார் . டப்பாங்குத்து பாடலில் மெல்லிய பனியன் அணிந்து முக்கிய இடத்தில் GUESS என்ற வாசகம் அணிந்த பனியன் போட்ட ஒரு பெண் வளைந்து நெளிந்து ஆடினார் . டாஸ்மாக் பாடலில் காடை மாதிரி இருந்த ஒரு பேரிளம் பெண் குத்தாட்டம் போட்டார்
பாடல்களை வி.சி.குகநாதன் வெளியிட இயக்குனர்கள் பவித்ரன், பத்ரி மற்றும் படத்தில் இடம்பெற்ற கலைஞர்கள் பெற்றுக் கொண்டார்கள்
படத்தின் கதை நன்றாக இருக்கிறது. படத்தின் விளம்பரத்தில் இருந்த ‘காயம் உனதாய் இருக்கலாம் . ஆனால் வலி உன்னை அடித்தவனுக்கே ‘ என்ற வாசகம் மகாத்மா காந்தியின் கருத்துகளை பிரதிபலிக்கிறது ‘” என்று இயக்குனர் பத்ரி பாராட்ட,
“நான் இருபது வயதிலேயே ராஜ பார்ட் ரங்கதுரை படத்தை தயாரித்தேன் . அநேகமாக எனக்கு அடுத்து அதிக இளம் வயதில் தயாரிப்பாளர் ஆனது இந்த அமரனாகத்தான் இருக்க முடியும். அதிலும் ஒரு சரியான படத்தை தேர்வு செய்து வாங்கி வெளியிடுவது நல்ல விசயம் ” என்றார்.குகநாதன்.
“இந்தப் படம் கமர்ஷியலாக வெற்றி பெரும் என்பது தெரிகிறது ” என்றார் இயக்குனர் பவித்ரன்
சின்ன படங்கள் வெற்றிச் சின்ன படங்கள் ஆகட்டும் !