
சினிமாவில் ஹீரோவாக ஆக வேண்டுமா? முதலில் ஒரு படத்தை தயாரித்து விடவேண்டும். நடிப்பு நல்லா இருந்தா மத்த புரடியூசர்கள் அவங்களே நடிக்க கூப்பிடுவாங்க.
”அது எப்படி முடியும்? அடுத்த படத்தையும் அவரே தயாரிச்சுக்கட்டும்னு விட்டுட மாட்டாங்களா?” என்று கேட்பவர்கள் , பி.முத்துராமலிங்கம் என்கிற முத்துராமைப் பற்றி தெரிந்து கொண்டால் அப்புறம் அந்த லாஜிக் பேசமாட்டார்கள்.
ரித்தீஷ் ஹரீஷ் மூவீஸ் என்ற தனது நிறுவனம் மூலம் இவர் ஹீரோவாக நடித்து தயாரிக்கும் மணம் கொண்ட காதல் (அதாவது திருமணம் கொண்ட பிறகு வரும் காதல் …அட அதே பெண்ணோடதாங்க !படத்தின் இயக்குனர் புகழேந்தி ராஜுக்கு ஒரு கம்பீரமான சினிமா வரலாறு உண்டு .

எம்ஜிஆர், சிவாஜி, எம் ஆர் ராதா, கமல், ரஜினி , விஜயகாந்த் ஆகியோருடன் ஐநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நடிகர் ஜி.தனபாலின் மகன்தான் இந்த புகழேந்தி ராஜ் . ஆனாலும் கொஞ்சம் கூட சினிமாத்தனமே இல்லாத எளிய மனிதர் இந்த புகழேந்தி ராஜ் என்பதற்கு ….
இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத் தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஷ் சொன்ன விசயமே பெரிய உதாரணம்
“முத்து ராமளிங்கத்துகிட்ட கதை சொல்லி ஒகே வாங்கிட்ட டைரக்டர் புகழேந்திராஜ் ஹீரோ தேடி அலைய , யாருமே செட் ஆகல. ஒரு நிலையில் இயக்குனர் கிட்ட தயாரிப்பாளர் முத்துராம் ரொம்ப தயங்கி தயங்கி . ‘நானே… ஹீரோவா .. நடிச்சா …” என்று கேட்க , சிலிர்த்துப் போனார் புகழேந்தி ராஜ்.
காரணம் கதை சொல்லும்போது முத்துராமலிங்கம் அதை கேட்ட விதத்தில் இருந்தே அவர் ஹீரோவாக நடித்தார் நன்றாக இருக்கும் என்று இயக்கனருக்கு தோன்றி விட்டது. ஆனால் அதை சொன்னால் முத்து ராமலிங்கத்தின் நடிப்பாசைக்கு தூண்டில் போட்டு டைரக்ஷன் சான்ஸ் பிடித்த மாதிரி ஆகிவிடுமே என்ற எண்ணத்தில் அதை வெளியே சொல்லாமல் ஹீரோ தேடி இருக்கிறார் இயக்குனர் .
தயாரிப்பாளரே நடிப்பாசையை சொன்னதும் ஹீரோ வேட்டை முடிந்தது. தயாரிப்பாளரே ஹீரோவாக நடிக்க படம் ஆரம்பிச்சு முடிச்சுட்டாங்க ” என்றார் சுபாஷ் .
விக்ரம் வர்மன் என்ற வளரும் இசையமைப்பாளரின் இசையில் கலைக்குமார் எழுதிய இரண்டு பாடல்கள், வைரபரதி எழுதிய ஒரு பாடல், கோவை தனபால் எழுதிய பாடல் என்று நான்கு பாடல்களையும் திரையிட்டார்கள். பாடல்கள் நன்றாக இருந்தன . இயக்குனர் பாடல்களை நன்றாக ரசித்து எடுத்திருந்தார். அதிலும் அந்த முதலிரவுப் பாடல் ….

பக்கத்து வீட்டு பையன் மாதிரி இருக்கும் முத்துராம் யதார்த்தமான கதைகளில் நடித்து நன்றாக பேர் வாங்கலாம் . ஒரு தயாரிப்பாளராகவும் இருக்கும் அவரை தயாரிப்பாள சங்கம் சார்பில் வாழ்த்துகிறேன் ” என்றார் டி. சிவா .
“மிக இயல்பாக நடித்து இருக்கிறார் முத்துராம். இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் பாடல்களை எடுத்திருக்கும் விதமும் அருமை” என்றார் இயக்குனர் அரவிந்தராஜ்
“வார்த்தைகள் புரியும்படி தெளிவாக இருப்பதால்தான் பாடல்கள் இவ்வளவு இனிமையா இருக்கு. முத்துராமிடம் ஒரு உத்வேகம் தெரியுது . அவர் நல்ல ஹீரோவாக வருவார் அப்படி வரும்போது எடுத்த உடனேயே கோடிகளில் சம்பளம் கேட்க ஆரம்பிச்சிடாதீங்க ” என்றார் வி.சி.குகநாதன்.
கடைசியாகப் பேசிய தயாரிப்பாளர் கம் ஹீரோவான முத்துராம் என்கிற முத்து ராமலிங்கம் “படம் தயாரிக்கதான் வந்தேன். நடிப்பு ஆசையும் இருந்ததால நடிகனாவும் ஆனேன். இப்போ என் படம் ரிலீஸ் ஆகறதுக்குள்ள திருமதியும் திருநங்கையும் என்ற படத்துல ஹீரோவா ஒப்பந்தம் ஆகி இருக்கேன். இன்னும் சில படங்களிலும் நடிக்க கேட்கறாங்க “என்றார் சந்தோஷமாக
மணம் கொண்ட காதல் படத்தால், ஜெயம் கொண்ட நடிப்பு !