
அந்த விழாவுக்கு அவர் வந்தது அறிவியல் ரீதியாகவே ஆச்சர்யம்தான் .
அந்த விழா என்பது…. ஒரு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா . அவர் என்பது….. சந்திரயானை நிலவுக்கு அனுப்பியதை அடுத்து அடுத்து மங்கல்யானை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் பணிகளில் மகத்துவமாய் உழைக்கும், ராக்கெட் தமிழனான, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை.
வைகுண்டா சினி பிலிம்ஸ் சார்பில் பி.சி.அன்பழகன் தயாரித்து இயக்க ,பிரணவ் என்ற புது ஹீரோவும் மோனிகாவும்(மதம் மாறி எம்.ஜி.ரஹிமாவாக ஆகிவிட்ட அதே அழகிதான்) இணைந்து நடிக்கும் படம் நதிகள் நனைவதில்லை. குமரி மாவட்டத்தின் அழகான பகுதிகளில் கவிதைத்தனம் செறிந்த காதலோடும் நாயகன் பிரணவ் ஸ்டன்ட் மாஸ்டர் தவசிராஜா இவர்களின் டூப் போடாத சண்டைக் காட்சிகளோடும், சவுந்தர்யன் இசையில் ஏழு பாடல்களோடும் உருவாகி இருக்கும் படம் இது . (”ஜாதி மல்லிப் பூவ வச்சுக்க .சைடுல நீ என்னை வச்சுக்க” என்கிறது ஒரு பாட்டு )
அடுத்தமாதம் திரைக்கு வரும் இந்தப் படத்தின் பாடல்களை வெளியிட்டார் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை. விவசாயிகளின் வசதிக்காக செடிகளை அறுபடாமல் வேரோடு சுலபமாக பிடுங்கவும், லாரியே நடுவில் பிளந்து பொருட்களை கொட்டவும், சுலபமாக சாறு எடுக்கவும், கடலை செடியில் சுலபமாக கடலைகளை பறிக்கவும், சுலபமாக களைகளை பறிக்கவும் பல கருவிகள் கண்டு பிடித்துள்ள கோவையைச் சேர்ந்த விவசாயத் துறை இளம் விஞ்ஞானி பவித்ரா பாடல்களை பெற்றுக் கொண்டார் (விஞ்ஞானம் வீழ்வதில்லை)

நிகழ்ச்சியில் பேசிய எஸ் பி முத்துராமன , தயாரிப்பாளர் சிவா முதலிய அனைவரும் சினிமா மேடையில் மயில்சாமி அண்ணாதுரை இருப்பது சினிமா உலகுக்கே பெருமை என்று மனப்பூர்வமாக கூறினார்கள்.
கலைப்புலி சேகரன் பேசும்போது ” டிஜிட்டல்பிலிம் வந்த பிறகு யார் வேண்ணாலும் டைரக்டர் ஆகலாம் நடிகர் ஆகலாம்னு ஆயிடுச்சி. மயில்சாமி சார்….. நினைச்சா நாளைக்கே நீங்க சினிமா டைரக்ட் பண்ணலாம். ஆனா நாங்க விஞ்ஞானி ஆகணும்னா முடியாது. அதுக்கு சில முறைகள் நெறிகள் இருக்கு . நாங்க அதுக்கு இன்னொரு தடவை பொறந்து வந்தாதான் உண்டு ” என்று கூறி சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார்.
அதோடு நிற்காமல் “பல ஆங்கில அறிவியல் விசயங்களை அந்த மொழி தெரியாத காரணத்தால் நாங்க படிக்க முடியல. எனவே அறிவியல் நூல்களை நீங்கள் தமிழில் நிறைய எழுதுங்கள் ” என்ற கோரிக்கையை வைக்க , மயில்சாமி முகத்தில் ‘நாம் வந்திருக்கும் விழா சரியான விழாதான் என்ற சந்தோஷத்தை பார்க்க முடிந்தது
“இந்த சினிமா விழாவுக்கு வந்திருக்கும் மயில்சாமி அண்ணாதுரையை வருக வருக என வரவேற்கிறேன் ” என்று சொல்வதாக நினைத்துக் கொண்டு நடிகர் பாலாசிங் “சினிமா உலகுக்கு வந்திருக்கும் மயில்சாமி அண்ணாதுரையை…” என்று சொல்ல , பதறிப் போய் “அய்யய்யோ .. நானா ?” என்பது போல ரியாக்ஷன் கொடுத்து விட்டு, கைகளை கேமராக்களின் பக்கம் திருப்பி நீள அகலமாக “கிடையவே கிடையாது ” என்பது போல ஆட்டினார் மயில்சாமி அண்ணாதுரை.
பேசும்போது மறக்காமல் “நான் எதற்கு இந்த மேடையில் என்று எல்லோருக்கும் தோன்றலாம் . இயக்குனர் அன்பழகன் இடையறாது அழைத்தார் . அதனால் வந்தேன். மற்றபடி நான் டூரிங் டாக்கீஸில் மண் குவித்து உட்கார்ந்து எம்ஜிஆர் படங்களையும் ரஜினி படங்களையும் பார்த்த காலம் தொட்டு சினிமாவில் நான் ஒரு ரசிகன் மட்டுமே .
ஒரு கதையை ஒருவர் திட்டமிட்டு பலரோடு சேர்ந்து ஒவ்வொரு கட்டத்திலும் உழைத்து மெருகேற்றி படத்தை திரைவானில் நீங்கள் வெளியிடுகிறீர்கள். நாட்டு நலனுக்காக ஒரு திட்டத்தை ஒருவர் ஆரம்பித்து பல்வேறு திறமையாளர்களோடு சேர்ந்து பல்வேறு கட்டமாக உழைத்து உருவாக்கி வெள்ளிவானில் ராக்கெட்டாக நாங்கள் விடுகிறோம் . ரெண்டும் ஒன்றுதான் “என்று.. பேச்சிலும் அசத்தினார்.
இந்த விழாவுக்கு வந்து என்னை பெருமைப் படுத்திய அண்ணாச்சிக்கு (மயில்சாமி அண்ணாதுரையைதான் சொல்கிறார் ) நன்றி சொல்வதற்கு கண்ணீர் துளிகளை தவிர சிறந்த வழி ஏதும் இல்லை . அனுமனுக்கு ராமனால் கொடுக்க முடிந்த பரிசே அதுதானே ” என்று அன்பு ‘டச்’ கொடுத்தார் இயக்குனர் – தயாரிப்பாளர் அன்பழகன்.(படத்துல சென்டிமென்ட் நிறைய இருக்குமோ ?)