பல மலையாளப் படங்களை தயாரித்ததோடு முழுக்க முழுக்க துபாயில் தயாரிக்கப்பட்ட ‘டிரீம் சிட்டி’ என்ற தொலைக்காட்சித் தொடர் உட்பட பல மலையாள மெகாத் தொடர்களை எடுத்ததுடன் ஸ்டுடியோ உரிமையாளராகவும் இருக்கும் சனல் தோட்டம் என்பவரின் நியூ டிவி தயாரிப்பு நிறுவனம் சார்பில்… அவரும் அவரது நண்பர்களான ஹரிகுமார் சக்காலிஸ் மற்றும் சதீஷ் வெள்ளயானி, சஜீவ் பாஸ்கர் ஆகியோரும் சேர்ந்து தமிழ் மலையாளம் இரு மொழிகளில் தயாரிக்கும் படத்தின் தமிழ் வடிவத்தின் பெயர் ‘திருந்துடா காதல் திருடா’.
மோகன் லால், பாலச்சந்திர மேனன், சுரேஷ் கோபி போன்ற முன்னணி மலையாள நட்சத்திரங்களை இயக்கியதோடு தன்னுடைய முதல் படமான ‘ஷபவம்’ படத்தின் மூலம் தேசிய விருதும் பெற்று இருக்கும் அசோக் ஆர்.நாத் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, தமிழ்நாட்டில் திருவட்டாறு என்ற ஊரில் பத்தே நாட்கள்தான் நடந்தது. மிச்சம்? அறுபது நாடுகளும் அரபு நாடுகளான துபாய் , சார்ஜா, அலைன் அஜ்மான் , ராசல் கையா, உமல்குவைன், யூஜோரா ஆகிய இடங்களில்தான் நடந்து இருக்கிறது.
இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு மூன்று தலைமுறைகளாகப் பிழைக்கப் போனவர்களில் ஒவ்வொரு தலை முறை ஆட்களுக்கும் என்று ஒரு தனித்தன்மை உண்டு . முதல் தலைமுறையில் பெரும்பாலும் கள்ளத்தோணியில் போய் செட்டில் ஆகி அப்புறம் அப்படியே வாழ ஆரம்பித்தவர்கள் . அடுத்த தலைமுறை இங்கிருந்து முறைப்படி நியாயமான ஏஜெண்டுகள் மூலம் சரியான வேலைக்கு போய் நிறைய சம்பாதித்தவர்கள் . மூன்றாம் தலைமுறை தவறான ஏஜெண்டுகளிடம் சிக்கி ஏமாந்து, சொல்லப்பட்ட வேலைக்கு நேர்மாறாக தகுதியற்ற பணிகளில் சிக்கி கஷ்டப்படுபவர்கள் .
இந்த மூன்று தலைமுறைகளிலும் நல்லவர்கள் உண்டு ; கெட்டவர்கள் உண்டு . நியாய தர்மங்கள் உண்டு. துரோகங்களும் தியாகங்களும் உண்டு . இதன் பின்னணியில் களங்கமில்லாத வலிமையான காதலில் வெற்றிகாண போராடும் ஒரு இளம்பெண்ணின் வித்தியாசமான போராட்டம்தான் இந்தப் படம்
படத்தின் சுமார் ஐம்பது முக்கியமான கேரக்டர்களில் நடிப்பதற்காக இங்கிருந்து துபாய்க்கு வேலைக்குப் போய் அங்கு பணியாற்றிக் கொண்டு இருக்கும் நம்ம ஊர் ஆட்களையே தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து நடிக்க வைத்து இருக்கிறார்களாம். படத்தின் ஹீரோவான ஆதில் இப்ராஹிமே இப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்தானாம். ரேடியோ ஜாக்கி கேரக்டரில் நடிக்கும் அவர் உண்மையிலேயே ரேடியோ ஜாக்கியாக இருந்தவர்தானாம். கதாநாயகி சுதக்ஷனா மாடல் அழகியாம். தவிர படத்தில் வோல்காவல்சக் என்ற ரஷ்ய பெண்மணி ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் .
வேறு எந்த வசதியும் இல்லாத நிலையில், கடல் நுரைகளில் இருந்து உருவாகும் ஒருவித காய்ந்த கிளிஞ்சல்கலையே செங்கல் போன்று பயன்படுத்தி வீடுகள் கட்டப்பட்ட இடமும் மாவு போன்ற மணல் பறக்கும் இடமுமான ராசல் கையா என்ற லொக்கேஷன, நிச்சயமாக படம் பார்க்கும் அனைவரையும் பிரம்மிக்கவைக்கும்” என்கிறார் படத்தின் ஒளிப்பதிவாளர் ஆகவும் பணியாற்றி இருக்கும் சனல் தோட்டம்.
படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பாடல்களை சேரன் வெளியிட்டார் . அதைப் பெற்றுக் கொண்ட . மணிரத்னத்தின் ஆரம்ப கால மலையாளப் படமான உணரு படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவரும் ஒளிப்பதிவாளர் ரவி கே,சந்திரனின் அண்ணனுமான ராமச்சந்திர பாபு ” நான் சின்ன வயசுல தமிழ் நாட்டுலதான் வாழ்ந்தேன், மதுராந்தகம் இங்கு ஹை ஸ்கூலில் தமிழ் மீடியத்தில்தான படிச்சேன் .” என்று பெருமையோடு குறிப்பிட்டு விட்டு ” அப்புறம்தான் மறுபடியும் கேரளா போயிட்டேன் ” என்றார் .
படத்தின் இயக்குனர் அசோக் ஆர் நாத் ஒரு வார்த்தைக்கும் இன்னொரு வார்த்தைக்கும் இடையில் குறைந்தது முக்கால் நிமிடம் இடைவெளி எடுத்துக் கொண்டு வார்த்தைகளை தேடி தேடி கஷ்டப்பட்டு கடைசிவரை தமிழிலேயே முழுக்க முழுக்க பேசி கைதட்டல் வாங்கினார்.
படத்தின் கதாநாயகி சுதக்ஷனா பேசும்போது பட படவென்று ஆங்கிலத்தில் பொழிந்தபடி இடையிடையே ”அதனால…. வந்து… போயி…. நான் .. ” என்று ஒரு சில தமிழ் வார்த்தைகள் வந்து விழ …எஸ் பாஸ் ! அவரோட தாய்மொழி தமிழேதான்.
“கேரளாவுக்கு நமக்கும் முல்லைப் பெரியாறு லொட்டு லொசுக்குன்னு நிறைய பிரச்னைகள் இருந்தாலும் கலை நம்மை ஒன்றாக இணைக்குது” என்றார் பாடலாசிரியர் கிருதயா (முல்லைப் பெரியாறு லொட்டு லோசுக்குன்னா அப்போ காவிரி பிரச்னை உங்களுக்கு என்னங்க?)